Monday, June 29, 2015

தூர எறிய வேண்டிய துர்குணம் - Dr.S.வெங்கடாசலம்

தூர எறிய வேண்டிய துர்குணம்
கோபம்மனிதனிடமிருக்கும் எதிர்மறைக் குணங்களில் மிகவும் மோசமானது; அழிவுத் தன்மைமிக்கது. அரண்மனைக் கோபங்களால் சாம்ராஜ்ஜியப் போர்கள் நடைபெற்றதாகச் சரித்திரம் கூறுகிறது. கட்டுக்கடங்காத கோபங்களால் வன்முறைகளும், கொலைவெறிகளும் தாண்டவமாடுகின்றன. பெற்றோர் கோபங்களில் பிள்ளைகள் நலம் கெடுகிறது; உறவு சிதைகிறது. ஆசிரியர்களின் கோபங்களில் மாணவ நெஞ்சங்கள் கருகிப் போகின்றன. அர்த்தமற்ற அநாகரீகமான காட்டுமிராண்டித்தனமான கோபத்தின் உக்கிரமும் உஷ்ணமும் தாங்காமல் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்! பிரிந்த உயிர்கள் ஏராளம்!

10 வயது மாணவன் சென்னையில் ஆசிரியர் கோபத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டான். அவன் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதத்தில், “நான் மறுபிறவியில் இதே குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன். ஆனால் இதே பள்ளியில் படிக்க விரும்பவில்லைஎன்ற செய்தி சிந்திக்கத்தக்கது.
2007 ஜனவரி மாதம் ஒரு நாளில் திருநெல்வேலியில் சுடலிஎன்ற 9 வயது சிறுமி வகுப்பில் கவனமாக இல்லை என்று மிஸ்அவளை நோக்கி சினங்கொண்டு எறிந்த டம்ளர் மிஸ்ஆகாமல் சிறுமியின் கண்களைப் பதம் பார்த்தது. பார்வை நிரந்தரமாகப் பறிபோனது. 2007 அக்டோபரில் அகமதாபாத்தில் 10 நிமிடம் தாமதமாக வந்தான் 11 வயது மாணவன் மிலான் தாணா. அவனுக்கு ஐந்து முறை பள்ளி மைதானத்தைச் சுற்றி வருமாறு அவமானகரமான தண்டனை வழங்கப்பட்டது. இரண்டாவது சுற்றிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்து போனான்.
2009 மார்ச் 24ஆம் தேதி மணப்பாறையிலுள்ள ஒரு தனியார் பள்ளி அருகிலுள்ள குளத்தில் 5 வயது மாணவி ஸ்ரீரோகிணி உடல் மிதந்தது. காவல்துறை புலனாய்வு செய்தது. வகுப்பறையில் மூன்று நாட்களுக்கு முன்பு ஸ்ரீரோகிணி தலையில் பிரம்பால் ஓங்கி வன்மத்துடன் ஆசிரியை அடித்திருக்கிறார். அடித்ததும் சிறுமி அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறாள். ஆசிரியைக்கு அச்சம் ஏற்பட்டு மயங்கிக் கிடந்த சிறுமியை பீரோவில் திணித்து வைத்துப் பூட்டி வைத்திருக்கிறார். அதன் பின் ஊழியர்கள் உதவியுடன் இறந்துவிட்ட குழந்தையைக் கொண்டுபோய் குளத்தில் போட்டுவிட்டு ஒன்றும் நடக்காதது போல் இருந்திருக்கிறார்.
2009 ஏப்ரல் 17ல் டில்லி மாநகராட்சியில் பள்ளி ஒன்றில் 11 வயதுச் சிறுமி ஷானுகான் ஆங்கில வார்த்தை ஒன்றைச் சரியாக வாசிக்கவில்லை என்பதற்காக ஆசிரியையால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறாள். அவளது முதுகில் செங்கற்களைச் சுமக்க வைத்து கடும் வெயிலில் நிற்க வைத்துள்ளனர். சில நிமிடங்களில் ஷானு மயங்கிச் சரிந்துவிட்டாள். அதன்பின் அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது அவளது மூக்கிலிருந்து இரத்தம் கொட்டத் துவங்கியுள்ளது. மருத்துவமனையில் சேர்த்த மறுநாளில் ஷானுவின் உயிர் பிரிந்துவிட்டது.

சமீபத்தில் 13 வயது கிராமப்புற மாணவனை அவனது தந்தை சிகிச்சைக்கு அழைத்து வந்தார். வகுப்பு நேரங்களில் அடிக்கடி இவனுக்கு வலிப்பு வந்துவிடுகிறதுஎன்றும் அதன்பிறகு ஓரிருநாள் உடல் வலியும், கடும் தலைவலியும் நீடிப்பதாகக் கூறினார். ஆங்கில மருத்துவ நரம்பியல் நிபுணரின் ஆலோசனைப்படி மூளையை ஸ்கேன் செய்து பார்த்து, தொடர்ச்சியாக அவரது பரிந்துரைப்படி மருந்து மாத்திரைகள் கொடுத்து வருவதாகவும் கூறினார். ஆயினும் எந்த முன்னேற்றமும் இல்லாமல்…. மீண்டும் மீண்டும் வகுப்பறையில் வலிப்பு வந்துவிடுகிறது என்று வருத்தத்துடன் கூறினார்.

அப்பாவை சிறிது நேரம் வரவேற்பறையில் அமரச் சொல்லிவிட்டு, பையனிடம் நட்போடும் கனிவோடும் வகுப்புச் சூழ்நிலைகள் குறித்து விசாரித்து அறிந்தோம். முதன் முறையாக வலிப்பு வந்த நாளை நினைவு படுத்துமாறு கேட்டோம். அன்று கிராமத்திலிருந்து நகர்நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து இடைவழியில் ஒரு பிரச்சனை காரணமாக 15 நிமிடம் நிற்க நேர்ந்துவிட்டது. அதனால் அவன் சற்று தாமதமாக பள்ளியை அடைந்தான். வாசலில் உடற்கல்வி ஆசிரியர் கோபம் கொப்பளிக்க கையில் பிரம்போடு அவனைக் கடுமையாக உபசரித்திருக்கிறார். 

மனதிலும் உடம்பிலும் பட்ட காயங்களின் ரணத்தோடு வகுப்பறையில் இருந்த போது மற்றொரு தாக்குதலை அவன் எதிர்கொள்ள நேர்ந்தது. மாதாந்திர தேர்வுத்தாள் திருத்தப்பட்டு அவற்றை வழங்கிய ஓர் ஆசிரியர் மதிப்பெண் குறைவுக்காக அவனை விசேஷமாகக் கவனித்திருக்கிறார். அந்தப் பாடவேளையில் அடுத்த சில நிமிடங்களில் உடல் நடுங்கி, கண்கள் இருண்டுபோய், தன்னிலை இழந்து முதன் முறையாக வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவன் பள்ளியில் கண்டிக்கப்படும் போதும் தண்டிக்கப்படும் போதும் வலிப்பு வருவது வாடிக்கையாகி விட்டது. அந்தச் சிறுவனுக்கு உரிய மனநல ஆலோசனையும் மலர் மருந்துகள் மற்றும் ஹோமியோபதி சிகிச்சையும் அளிக்கப்பட்டபின் சில மாத காலத்தில் வலிப்பிலிருந்து நலமடைந்தான்.

ஐ.நா. சபையின் குழந்தை உரிமை உடன்படிக்கையில் இந்திய அரசும் கையொப்பம் இட்டுள்ளது. குழந்தைகளைக் கடும் சொற்களாலும் உடல் ரீதியிலும் தண்டிக்க யாருக்கும் உரிமை கிடையாது. இத்தகைய குழந்தை உரிமை மீறல் அனுமதிக்க முடியாத வன்முறை. 1989 ஐ.நா, குழந்தை உரிமை உடன்படிக்கையின் முக்கிய அம்சம், “குழந்தைகளை முறைப்படுத்துவதில் உடல்ரீதியான தண்டனை உபயோகிக்கக்கூடாது…” என்பதுதான். ஆனால் பெரும்பாலான வகுப்பறைகளைக் கோபமும் எரிச்சலும் கோலோச்சுகிறது.

 வாழ்க்கையை வாழும் கலையை, வாழ்வியல் பண்புகளைக் கற்றுத்தர வேண்டிய வகுப்பறைகள் சித்ரவதை முகாம்களாய் மாறிவிட்டன. அன்பையும் பண்பையும் அறிவையும் ஊட்ட வேண்டிய ஆசிரியர்களில் ஒரு பகுதியினர்களிடம் கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் காவல் துறையினர் போல மாறிவிட்டனர்.

விவேகானந்தர் மனிதனை உருவாக்கும் கல்வியை வலியுறுத்தினார் (Man Making Education). மகாத்மா காந்தி அவர்கள் உடல், உள்ளம், ஆன்மா மலர்ச்சிக்கு உறுதுணையாகக் கல்வி அமைய வேண்டும் என்று விரும்பினார். மாற்றுக் கல்விக்கான குரல்கள் வலிமையடைந்துவரும் நேரம் இது. மனப்பாட முறை தேர்வுகளை மையப்படுத்திய, வாழ்க்கைக்கு உதவாத கல்வித்திட்டம் இந்தியாவைத் தவிர உலகில் வேறெங்குமில்லை. மதிப்பெண்களைவைத்து மாணவனை மதிப்பிடுகிற அபத்தமான, ஆபத்தான கல்வித் திட்டத்தால் கோடிக்கணக்கான இளம் உள்ளங்களின் இயற்கையான பரிணாம மலர்ச்சியும், சுயதிறன்களின் வளர்ச்சியும் மறுக்கப்படுகிறது.

ஒரு பக்கம் பாடத்திட்டமும் மறுபக்கம் பெற்றோர் ஆசிரியரின் அணுகுமுறையும் நம் குழந்தைகளின் நிகழ்காலத்தை பேரச்சம்மிக்கதாய் மாற்றியுள்ளது. பள்ளிப் பிள்ளைகள் இயல்பான மனநிலையோடும் உற்சாகத்தோடும் கல்விகற்க இயலவில்லை. மாறாக எண்ணற்ற பயந்தாங்கொள்ளிகளும், தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களும் தற்கொலை எண்ணம் கொண்டவர்களுமாக மாறுகிறார்கள்; அல்லது வன்முறையாளர்களாய், அராஜகப் பேர்வழிகளாய் பரிணமிக்கின்றனர். இது இன்றைய நமது குடும்ப, சமூக, கல்விச் சூழலின் எதிர்மறை விளைவு.

கோபத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் கொட்டித் தீர்க்கும் இயல்புக்கு ‘CHERRY PLUM’, மாணவர்களை எப்போதும் கடுமையாக விமர்சித்துக்கொண்டும், குறை கூறிக் கொண்டும் வகுப்பறைறை வசையறையாக மாற்றும் இயல்புக்கு ‘HOLLY’ ‘WILLOW’, பொறுமையற்ற தன்மையும், பரபரப்பும், மாணவர்களை வேகப்படுத்தும் மனநிலைக்கு ‘IMPATIENCE’ , நல்லதோ கெட்டதோ தான் சொல்வதைக் கேட்டுத்தான் தீரவேண்டும் என்று வகுப்பறையை தனது அதிகாரக்கூடமாக மாற்றும் ஹிட்லர் மனநிலைக்கு ‘VINE’ போன்ற பாச் மலர் மருந்துகள் பயன்படும். இத்தகைய குணங்கள் ஆசிரியப் பணிபுரிவோரின் ஆளுமையில் படிந்த கறைகள்.

இன்றைய காலத்தில் மிகைச் செயல்பாடு (Hyperactive) கொண்ட சிறுவர்களின் எண்ணிக்கை பெருகி வருவது கவலைக்குரியது. இவர்களால் மனம் ஒன்றிக் கல்வியில் ஈடுபடமுடியாது. இப் பிரச்சனையை Attention Deficit Hyperactive Disorder (ADHD) என்று மருத்துவத் துறையில் குறிப்பிடுகிறார்கள்.

சில குழந்தைகளுக்கு Dyslexia என்ற கற்றல் குறைபாடு பிரச்சனை உள்ளது. இவர்களுக்கு கரும்பலகையில் வரையப்படும் நேர்கோடுகள் வளைந்து நெளிந்து தெரியும். எழுத்துக்களும், எண்களும் தலைகீழாகத் தெரியும். கண்ணாடியில் பார்ப்பது போல் எழுத்தின் அமைப்பு மாறுபட்டுத் தெரியும். சமீபத்தில் மும்பையில் ஒரு டிஸ்லெக்ஷியா குழந்தையை ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால் மரணமடைந்து விட்டதாக செய்தி வெளிவந்தது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் இத்தகைய குழந்தைகளை அடையாளம் கண்டு மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவது அவசியம். 

ஆங்கில மருத்துவத்தில் மன வளர்ச்சிக் குறைபாடுகளுக்கோ (Mental Retardation) ADHD, AUTISM, DYSLEXIA போன்ற நவீனகால குழந்தை உளவியல் சிக்கல்களுக்கோ சிறப்பான சிகிச்சைகள் உருவாகவில்லை. இதனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்தகைய பிரச்சனைக் குழந்தைகளின் எண்ணிக்கை பெருகியுள்ளன. மாற்று மருத்துவங்களில் குறிப்பாக ஹோமியோபதி மற்றும் மலர் மருத்துவத்தில் இப்பிரச்சனைகளுக்கு சிறப்பான பலனளிக்கும் பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் உள்ளன. இத்தகைய குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும், சமூகமும் ஆதரவோடும் அரவணைப்போடும் கையாள்வது அவசியம். இத்தகைய குழந்தைகளிடம்கூட ஆசிரியர் கோபத்துடன் வழக்கமான அணுகுமுறைகளுடன் நடந்து கொள்வது ஆபத்தில் முடியும்.


இன்றைய கல்வித் திட்டத்தில் உடனடியாக பெரும் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்றாலும் கற்பிக்கும் அணுகுமுறையில் வகுப்பறைச் சூழ்நிலையில் அன்பும் நட்பும் கலந்த நேரிய (Positive) அணுகுமுறையை ஆசிரியப் பெருமக்கள் கடைப்பிடித்தால் மாணவர்களின் மனநலமும் உடல் நலமும் சிதையாமல் ஆரோக்கியமாக அமையும்.

No comments:

Post a Comment