Thursday, June 26, 2014

தழும்பு வராமல் தடுக்க, அகற்ற ஹோமியோதி சிகிச்சை --- Dr. S.வெங்கடாசலம் ,Dr.V.ஆவுடேஸ்வரி

பல காயங்கள் ஆறிய பின் தழும்பு அடையாளங்களை விட்டுச் செல்கின்றன. சில காயங்கள் மட்டுமே தழும்பு ஏற்படாமல் ஆறி இயற்கை தோல் மீண்டும் ஏற்படுகின்றன.  தழும்புகளால் எந்தவித ஆபத்தோ, உபாதையோ இல்லை என்றாலும் தோற்றப் பொலிவைப் பாதிக்கிறது.வெட்டுக்காயங்களில், அடிப்பட்ட காயங்களில், சிறிய, பெரிய விபத்துக் காயங்களில், நெருப்புக் காயங்களில் மற்றும் முகப் பருக்களால், அம்மைப் புண்களால் ஏற்படக் கூடிய தழும்புகளை உடனடி ஹோமியோபதி சிகிச்சை மூலம் தடுக்க  முடியும். 


ஆழமான காயங்களில் ஆங்கிலச் சிகிச்சை முறைப்படி தையல்போட்ட நிலையிலும் கூட ஹோமியோபதி சிகிச்சையை இணைத்துக் கொண்டால் தழும்பு உண்டாவதைத் தவிர்க்க இயலும். 

ஏற்கனவே இவைபோன்ற தழும்புகளால் மனச் சிரமங்களுக்கு ஆளானவர்கள் ஹோமி யோபதி மருந்துகள் மூலம் தழும்புகளை மறையச் செய்ய வாய்ப்பு உள்ளது.  உலகிலுள்ள வேறெந்த மருத்துவமுறையிலும் தழும்புகளை குணப்படுத்த மருந்துகள் இல்லை என்பதும் ஹோமியோபதியில் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தழும்புகள் வராமல் தடுக்கவும், வந்த தழும்புகளைக் குணப்படுத்தவும் பயன்படக்கூடிய சில முக்கிய ஹோமியோபதி மருந்துகள் இதோ :

1.காலண்டுலா [CALENDULA]:அனைத்துவிதக் காயங்களுக்கும், புண்களுக்கும் பயன்படக் கூடியது.  இம்மருந்தினை [mother tincture] திரவ வடிவில் சிறிது எண்ணெய் கலந்து மேற்பூச்சாகவும், மாத்திரை வடிவில் உள்மருந்தாகவும் பயன்படுத்தலாம். ஆயிண்ட்மென்ட் வடிவத்திலும் கிடைக்கிறது.  (சர்க்கரை நோயாளிகளின்) ஆறாத புண்களைக் கூடத் தழும்புகளின்றிக் குணப்படுத்தும் ஆற்றலுடையது காலண்டுலா.


2.ஆண்டிம் டார்ட் [ANTIM TART]: அம்மை நோயின் போது ஹோமியோபதி சிகிச்சை மேற்கொள்பவருக்கு தழும்புகள் ஏற்படுவதில்லை.  தழும்பு ஏற்பட்டவர்கள் இம்மருந்தினை தினம் 2 வேளை வீதம் 1 முதல் 2 மாத காலம் எடுத்துக்கொண் டால் தழும்புகள் முற்றிலும் மறைந்து விடும்.


3.காஸ்டிகம் [CAUSTICUM ]:நெருப்புக் காயத்தின் போது உடனடி யாக இம்மருந்தைச் சாப்பிட்டால் எரிச்சல், வலி மறைவதோடு துரித நிவாரணம் கிடைக்கும். புண்கள், தழும்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.  பொதுவாக நெருப்புக் காயத்தால் ஏற்பட்ட தழும்பு எக்காலத்திலும் குணமாகாது.  தசை நாண்கள் இழுக்கப்பட்டு, சுருங்கி, இறுக்க உணர்வுடன் கூடிய தழும்பாகக் காணப்படும்.  இந்நிலையிலும் காஸ்டிகம் மருந்து தொடர்ந்து உட்கொண்டால் தழும்பு நிச்சயம் குணமாகும்.

4.கிராபைட்டிஸ்[GRAPHITES]:கடினப்பருக்கள் மற்றும் எக்சிமா எனப்படும் கரப்பான்படைப்  புண்கள் காரணமாக ஏற்படும் தழும்புத் திட்டுக்களையும், கீலாய்டு (KELOIDS) எனப்படும் தழும்புப் புண்களையும், 


பெண்களின் மார்பக அறுவைச் சிகிச்சைக்குப் பின் ஏற்படும் தழும்புகளையும் குணப்படுத்தும் ஆற்றல் உள்ள மருந்து இது. வெளிப்பூச்சாகவும், உள் மருந்தாகவும் பயன்படும்.

5.ஃபுளோரிக் ஆசிட்         [FLOURIC ACID]:     பருவ வயதில் ஏற்படும் சில வகைப் பருக்கள் தழும்புகளை ஏற்படுத்துகின்றன.இவற்றை மறையச் செய்ய இம்மருந்து உதவும். சிலிகா (SILICEA) எனும் மருந்தும் இதற்குப் பயன்படும்.


6.கல்கேரியா ஃபுளோர்[CALCAREA FLOUR] ;டாக்டர். சூஸ்லரின் கண்டுப்பிடிப்பான இந்த திசு மருந்து... எல்லாவித தழும்புகளையும் கரைத்து, குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.  தினம் மூன்று வேளை - வேளைக்கு 4 மாத்திரை வீதம் உட்கொண்டால் பலன் கிடைக்கும். ஹோமியோபதி மருந்துகளுடன் இதனை இணைத்து உட்கொண்டால் சிறந்த பலன் பெறலாம்.


Monday, April 14, 2014

கட்டை விரலும் கனவும் - Dr.S.வெங்கடாசலம்


தாஜ்மஹால், சீனப்பெருஞ்சுவர் உட்பட உலகின் எந்த அதிசயமும் கட்டைவிரல் இல்லாமல் உருவாக முடியாது. மனிதனின் உணர்வுடன் கூடிய உழைப்பிற்கு வடிவம் தரக் கூடியது கட்டைவிரல். மகாபாரதத்தில் போர்க்கலை வித்தைகளைக் கற்றுத்தேர்ந்த, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஏகலைவன் குருதட்சனை என்ற பெயரில் உயர்ஜாதி ஆதிக்கத் திற்குக் கட்டை விரலைக் காணிக்கையாகக் கொடுத்தான். 

பாரதத்தில் நேர்த்தியான கைத்தறி நெசவு காரணமாக அன்னியத் துணிகளை விரிவாக விற்பனை செய்வது பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் கட்டை விரல்கள் பிரிட்டிஷ் கொடுங்கோலர்களால் மனிதாபிமானமின்றி துண்டிக்கப்பட்டதை இந்திய சரித்திரத்தின் பக்கங்களில் ரத்தக்கறையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதனின் லட்சியக் கனவுகள் எல்லாம் கட்டைவிரல் இல்லாமல் நனவாக முடியுமா?


‘கட்டைவிரலில் வலிக்கிறது’ என்று சிகிச்சைக்கு வந்தார் ஒருவர். இடதுகையை நீட்டி, மணிக்கட்டிலிருந்து கட்டைவிரல் வரை வலி இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். வலியின் தன்மை, அதிகரிப்பு - குறைதல் குறித்த விவரம், இதரக் குறிகள் எல்லாம் விசாரித்தேன். “வேறு எந்தப் பிரச்சனையுமில்லை; இரண்டு, மூன்று மாதமாக இந்த வலி ஒன்றுதான் பிரச்சனை” என்று சுருக்கமாகப் பதிலளித்தார். ஓரளவுகூட அவரைப் பற்றிய புரிதல் ஏற்படாமல் அவருக்குச் சிகிச்சையளிக்க வேண்டிய இக்கட்டான நிலை. 

ஓரிரு நிமிட இடைவெளி கடந்து, “உங்களைப் பற்றிய விவரங்களையும் வலியுடன் சம்பந்தப்பட்ட வேறு விஷயங்களையும் நீங்கள் தெரியப்படுத்தினால் தான் உதவியாக இருக்கும்” என்று கேட்டுக்கொண்டு, தாகம், நீர், மலம், பசி... குறித்து விசாரித்தேன். மீண்டும் அவர் அழுத்தம் திருத்தமாக "வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை; இந்த வலி ஒன்றுதான் பிரச்சனை” என்று கூறியதையே கூறிமுடித்தார். சிகிச்சைக் குறிப்புகள் நூல்களில் ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டு மருந்து கொடுத்தனுப்பினேன்.


ஒருவாரம் கழித்து வந்தபோது, “ஒரளவு மட்டும் வலி குறைந்துள்ளது” என்றார். மேலும் ஒருவார மருந்து தரப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது வாரமும் மருந்தளிக்கப்பட்டது. நான்காவது வாரம் அவர் மீண்டும் வந்தபோது முகம் சற்று வாடியிருந்தது. “வலி எப்படி உள்ளது?” என்று விசாரித்தேன். “முதல்வாரம் வலி குறைந்தது; இரண்டாவது வாரம் மேலும் கொஞ்சம் வலி குறைந்தது. இப்போது மூன்றாவது வாரம் மருந்து சாப்பிட்டபின் வலி மீண்டும் வந்து விட்டது. அது மட்டுமில்லாமல் இரவு தூக்கத்திலேயே சிறுநீர் கழித்து ஆடையும் படுக்கையும் பாழாகி விடுகிறது” என்று குறிப்பிட்டார்.

“இதுபோல் இதற்குமுன்னர் தன்னையறியாமல் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்ட துண்டா?,” என்று கேட்டபோது “இல்லையே! இப்போது சிலநாளாகத் தான் அப்படி யுள்ளது. கொஞ்ச நாளாக கனவில் சிறுநீர்கழிப்பது போல் தோன்றும். ஆனால் தற்போது அந்த மாதிரிக் கனவு ஏற்படும்போது நிஜமாகவே சிறுநீரும் வெளிவந்து விடுகிறது” என்றார்.


அவருக்கு மீண்டும் பழைய மருந்து தரவில்லை. கனவுக் குறியை மையமாகக் கொண்டு ‘கிரியோசோட்டம்’ என்ற ஹோமியோபதி மருந்து தேர்வு செய்து கொடுத்தனுப்பினேன்.


 அதன்பின்னர் அவர் நீண்டநாள் வரவேயில்லை. ஒருநாள் அவரது உறவுக்காரப் பெண்ணுக்குச் சிகிச்சை பெற அழைத்து வந்திருந்தபோது “கடைசியாக நீங்கள் எனக்குக் கொடுத்த மருந்தில் கையிலிருந்த வலி மறைந்துவிட்டது. இரவு உறக்கத்தில் சிறுநீர் கழிப்பதும் நின்றுவிட்டது” என்று சொல்லிவிட்டு உறவுக்காரப் பெண்ணை அறிமுகப்படுத்தத் துவங்கினார்.

Tuesday, April 1, 2014

பெண்களே! முகத்தில் முடி வளர்ச்சியா? கவலை வேண்டாம்!---------டாக்டர் எஸ்.வெங்கடாசலம்

முடி வளர்ச்சி என்பது இரண்டு வகைப்படும். 1. பிறப்பு முடி 2. பருவ முடி. ஆண், பெண் பருவ மாற்றங்களின் அறிகுறிகளாக பருவ முடிகள் முளைக்கிறது. பருவ வளர்ச்சியின் தவிர்க்க முடியாத இயற்கையான ஒரு பகுதியாக இது அமைகிறது. ஆண்களுக்கு பருவ முடி ஏறு முக்கோண அமைப்பில் மேல்நோக்கியும் பெண்களுக்கு இறங்கு முக்கோண அமைப்பில் கீழ் நோக்கியும் வளர்ந்து படர்கிறது. இந்த ஏறு முக்கோணமும் இறங்கு முக்கோணமும் எதிரும் புதிருமான ஒன்றுக்கொன்று பொருந்துகிற அமைப்பாக இயற்கை வடிவமைத்துள்ளது.
பெண்களின் பிரச்சனையும் வேதனையும்:
அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் பருவ முடி வளர்ச்சி ஏற்படும்போது பெண்கள் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் தேவையற்ற இடங்களில் அளவுக்கு அதிகமான ரோம வளர்ச்சி ஏற்படுவது பெண்களுக்கு தீராத பிரச்சனையாகி விடுகிறது. ஆண்களைப் போலவே சில பெண்களுக்கு முகத்தில் மீசை, தாடி முடிகள் அடர்த்தியாக வளர்ந்து விடுகின்றன. சில பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வதோடு கை கால்களிலும் அதிக ரோமங்கள் காணப்படுவதுண்டு. இவை பெண்மையை, பெண்மையின் நளினத்தை தட்டிப் பறித்து விட்டதாகக் கருதி பெண்கள் வேதனைப்படுகின்றனர்.

இம் முடிகளை எப்படியாவது அகற்றினால்தான் நிம்மதி என்று அழகு நிலையங்களுக்குச் சென்றோ அல்லது தோல் நிபுணரிடம் சென்றோ பல்வேறு முயற்சியில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக இவ்விடங்களில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதுமில்லை. சில பெண்களுக்கு இம்மாதிரியான சிகிச்சைகள் தோற்று... தேவைப்படாத முடிகள் அகற்றப்படுவதற்குப் பதில் ரோமக் காடாகப் பெருகிப் போவதும் நேரிடுகிறது.
காரணங்கள் என்ன?
முளைக்கக் கூடாத இடங்களில் பெண்களுக்கு முடி முளைப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பாரம்பரிய (ஜீன்ஸ்) காரணங்களால் இப்படி வளர வாய்ப்புள்ளது. பாட்டிக் கும், அம்மாவிற்கும் முகத்தில் முடிகள் வளர்ந்திருந்தால் மகளுக்கும் பருவ காலத்தில் முகத்தில் முடிவளர்ச்சி தொடரும். ஆணிண் ஹார்மோன் பெண்ணுக்குள் அதிகரிக்கும்போது குரல், நடை, பழக்கம், முடி வளர்ச்சி, பாலியல் வளர்ச்சி போன்ற அனைத்திலும் இதன் பாதிப்பு இருக்கும். சிறிது ஆண்மைச் சாயல் ஏற்படக்கூடும்.
அதிகளவு மாதவிடாய் போக்கு ஏற்படும்போது அதனைத் தடுக்கவும் மார்பகங்களில் கட்டியோ ;, கழலையோ உருவாகி அறுவைச் சிகிச்சை செய்யும்போது வீர்யம் பெருக்கவும், ஆண் ஹார்மோனை பெண்ணுடலில் செலுத்துதல் வழக்கம். இதனால் தேவைப்படாத இடங்களில் ரோம வளர்ச்சி ஏற்படும்.
முகத்திலும், கைகால்களிலும், உடம்பிலும் தேவையின்றி பெண்களிடம் முடிகள் வளரும் தன்மையை ஆண் ஹார்மோன்கள் பெண் உடலில் செலுத்தப்படுகிறது. இதனால் தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி ஏற்பட்டு விடுகிறது.
இதற்கு ஆணின் ஹார்மோன் பெண்களிடம் அதிகரிப்பதே காரணம் என்ற போதிலும் அத்தகைய, அனைத்துப் பெண்களுக்கும் ஆண்களின் சுபாவம் ஏற்பட்டு விடுவதில்லை. அவர்களின் செக்ஸ் பழக்கங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் கர்ப்பம், பிரசவம், குழந்தை வளர்ப்பு எல்லாம் மற்ற பெண்களைப் போலவேதான் அமைகின்றன. இவர்களில் சிலரது பழக்கம், குரல், நடத்தை போன்றவற்றிலும் சிறிது ஆண்மைச் சாயல் இருக்கக்கூடும். இருப்பினும் இவர்கள் பெண்மையின் பிரதான இயல்புகள் எதையும் இழப்பது இல்லை.

ஒழுங்கற்ற மாதவிடாய் போக்கினால் பாதிக்கப்படும் பெரும்பாலான இளம் பெண்களுக்கு பெண்மை பிணியியல் நிபுணர்கள் அதிக அளவு ஹார்மோன் மருந்து, மாத்திரைகளை அளிப்பதாலும், தோலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஆன்டிபயாடிக் மருந்துகள் அடிக்கடியும் அதிக அளவிலும் உபயோகிப்பதாலும் (முடி என்பது தோலின் ஒரு பகுதிதானே!) பல்வேறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளும், தடுப்பு மருந்துகளும், (வாக்சினேஷன்) வளர்சிதை மாற்றத்தில் தொந்தரவுகளை ஏற்படுத்துவதன் காரணமாகவும் தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி ஏற்படுகிறது.
ஆண் ஹார்மோன் என்பது என்ன?
ஆண்ட்ரோஜன் என்பது ஆண் ஹார்மோன் ஆகும். ஆணின் விதைகளிலும் அட்ரினல் புறணியிலும் பெண்ணின் சினைப்பையிலும் சுரக்கக்கூடிய இயக்குநீர் இது. இரண்டாம் நிலைப் பாலியல் பண்புகளை குறிப்பாக குரல் தடித்தலையும், உடல் முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கக் கூடியது.
சினைப்பையில் அல்லது அட்ரீனலில் ஏதேனும் கோளாறுகள் அல்லது மாற்றங்கள் ஏற்பட்டால் ஆண்ட்ரோஜன் அதிகச் சுரப்பு நிகழும். அதிக ஆண்ட்ரோஜன் சுரப்பு ஏற்படுவதற்கு சில குறிப்பிட்ட காரணங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
1. சினைப்பையில் உருவாகும் நீர்மக் கட்டிகள். இக்கட்டிகளால் ஓழுங்கற்ற மாதப்போக்கு, மலட்டுத் தன்மை, முடி வளர்ச்சி ஏற்படுகிறது. இத்தகைய நீர்மக் கட்டிகள் தோன்ற பரம்பரைத் தன்மை, தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் கோளாறும்,நீரிழிவும் காரணங்களாக உள்ளன.

2.அட்ரீனல் சுரப்பியில் கட்டிகள் தோன்றினால் கூட ஆண்ட்ரோஜன் அதிகரிக்கும்.
3.வலிப்பு, மனநோய், கர்ப்பத்தடை போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் சில ஆங்கில மருந்துகளாலும் ஆண்ட்ரோஜன் அதிகரிக்கும்.
4.சிலரது உடலில் அதிக அளவு இன்சுலின் சுரப்பதுண்டு (இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ்). இரத்த சர்க்கரையளவு இயல்பான நிலையில் இருந்தாலும், பரிசோதனை செய்து பார்த்தால் இன்சுலின் சுரப்பு அதிகம் காணப்படும். அதிக இன்சுலின் அதிக ஆண்ட்ரோஜனை சுரக்கச் செய்யும். மிகக் குறிப்பாக சினைப்பைகளில் தோன்றக்கூடிய நீர்மக் கட்டிகள் (பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம்) தான் அதிகளவு ஆண் ஹார்மோன் சுரப்பதற்கான பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. அதிக ஆண்ட்ரோஜன்தான் 70 முதல் 80 சதவீதப் பெண்களுக்குரிய ஹிர்சுசிசம் பிரச்சனைக்குக் காரணமாகும்.
தேவையற்ற முடி வளர்ச்சியை அகற்றுவது எப்படி?
தேவையற்ற முடிகளை நீக்க பெண்கள் 4 வித வழிமுறைகளை நாடுகின்றனர்.
1.சாதாரண சவரம் செய்தல்: மீண்டும் முளைத்தால் மீண்டும் மழித்தல்.
2.ப்ளீச்சிங் செய்தல்:இதன் மூலம் முடிகளைப் பார்வைக்குத் தெரியாமல் செய்தல்- இரசாயனப் பொருட்களை உபயோகித்து முடிகளை மெல்லிய நிறமாக்குதல்.
3.எலக்ட்ரோலைசிஸ்: மின் சக்தியைக் கொண்டு ஒவ்வோரு முடியின் வேரினையும் (ஹேர் பாலிக்குள்) அழித்தல்- இதன் மூலம் முடி மீண்டும் வளராமல் தடுத்தல். இது எண்ணற்ற முறை சிகிச்சை செய்ய வேண்டும். மிகவும் செலவு செய்ய வேண்டிய சிகிச்சையாகும்.
4.லேசர் முறை: லேசர் பயன்படுத்தி தனித் தனியாக முடிகளை அழித்தல்- இதற்கும் பலமுறை சிகிச்சைக்கு செல்ல வேண்டும், மிக அதிக பணச் செலவும் ஏற்படும்.

இந்தியாவைப் பொருத்தவரை ஹிர்சுசிசம் பாதிப்பு உள்ள பெண்கள் சுமார் 10 சதவீதம் பேர் உள்ளனர். அமெரிக்காவில் 22 சதவீதம் பெண்கள் உள்ளனர். மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளை இந்தியப் பெண்களில் பெரும்பாலோர் நாடுவதில்லை. மிகக் குறைவான பெண்களே (மிக வசதி படைத்த பெண்களே) செயற்கைச் சிகிச்சை முறைகளை நாடுகின்றனர். மற்றவர்கள் முகச் சவரம் மூலம் அல்லது பிடுங்குதல் (பிளக்கிங்) மூலமே அகற்ற முயற்சிக்கின்றனர். இவர்கள் எல்லோருக்குமே இப்பிரச்சனை கவலையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்துகிறது.
ஆங்கில மருத்துவத் தோல் நிபுணர்களால் பெண்களின் இப்பிரச்சினையை தீர்க்க இயலாது. ஹோமியோபதி மருத்துவம் இப்பிரச்சனைக்கு எளிய இனிய தீர்வளிக்கிறது. தேவையற்ற இடங்களில் முடி வளருவதற்கு நாளமில்லாச் சுரப்பிகளும் நிணநீர் பெருக்கக் குழப்பமும் காரணங்களாக கருதி சில வசதி மிக்க பெண்கள் தோல் நிபுணர்களிடம் சிகிச்சை பெறுகின்றனர். இச்சிகிச்சைகளில் கவர்ச்சிகரமாக ஆங்கில மருத்துவ முறையின் விளம்பரம் செய்கிற அளவுக்கு பலன்கள் கிடைப்பதில்லை. ரோமங்களைப் பறிப்பதும், பொசுக்குவதும் சிறந்த முறைகள் இல்லை. இதனால் சிக்கல்களும், ஆபத்தும், எதிர்விளைவுகளும் மனச் சஞ்சலங்களும்தான் ஏற்படும்.
தேவையற்ற முடி வளர்ச்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க உதவும் ஹோமியோபதி மருந்துகள் எவை?

குழந்தைப் பருவத்தில் முகத்தில் முடிகள் வளர்ச்சி ஏற்படுமானால் பயன்படும் மருந்துகள்; கல்கேரியா கார்ப், நேட்ரம் மூர், ஒலியம் ஜெக்,சோரினம், சல்பர்.
உடம்பு முழுதும் முடிவளர்ச்சி ஏற்படுமானால்; மெடோரினம், தூஜா, தைராய்டினம்.
ஹிர்சுசிசம் மற்றும் அதன் தொடர்புள்ள அறிகுறிகளுக்கு; தூஜா, மெடோரினம், சபால் செருலேட்டா, தைராய்டினம், கல்காரியா கார்ப்,கல்காரியா பாஸ், பல்சடில்லா, செபியா, நேட்ரம் மூர், இக்னேசியா, கிராபைட்டீஸ், ஒலியம் ஜெகோரஸ்.
இச்சிகிச்சையில் ஒலியம் ஜெகொ ரஸ், தூஜா, செபியா ஆகிய மருந்துகள் முக்கியப் பங்காற்றி சிறந்த பயனளிப்பதாக ஹோமியோ மேதைகளின் அனுபபவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

வெளிநாட்டுப் பெண் ஒருத்திக்கு மிகுந்த மனச் சோர்வும், வேதனையும் ஏற்பட்டு ஹோமியோ நிபுணரை நாடினாள். அவளது வயது 30. அவளது மார்புக் காம்புகளைச் சுற்றிலும் முடிகள் முளைத்து விட்டதால் அவள் மிகவும் துயரமடைந்து, மிகவும் தயங்கி, தாமதமாக ஹோமியோ சிகிசசையை நாடினாள். அவளுக்கு தூஜா 1 M மாதம் ஒரு முறை வீதமும், மற்ற நாட்களில் ஒலியம் ஜெகோரஸ் 3 Xம் அளிக்கப்பட்டு ஆறுமாத காலத்தில் குணமடைந்தாள்.
தூஜா மிகச் சிறந்த நிவாரணி என்றாலும் சில பல ஹோமியோ மருத்துவர்கள் தோல்வி அடையக் காரணம் வீர்யம் மற்றும் மருந்து அளவு பிச்சனைதான். பல நோயாளிகளுக்கு 10 M வரை கூட தேவைப்படலாம்.
ஒலியம் ஜெகோரஸ் மருந்தை மற்ற மருந்துகளைப் போல் ஏறு வரிசையில் வீர்யம் உயர்த்தி கொடுக்கக் கூடாது.
1. தூஜா மருந்துண்ணும் நாட்களில் ஒலியம் கொடுக்கக்கூடாது.
2.கோடையில் 30 C வீர்யத்திலும், குளிர், மழை காலங்களில் 6 C, 6 Xம் நல்ல பலன்களைத் தருகின்றன.
முகத்தில் முடி வேகமாக வளரும் தன்மையை தடுக்க; மெடோரினம் 1 M ஓரிரு வேளைகள் தேவைப்படும்.

ஆகவே பெண்களின் முகத்தில் வளரும் முடி, கைகால் மற்றும் உடம்பின் தேவையற்ற இடங்களில் வளரும் முடிகளை முற்றிலும் இயற்கையான முறையில் அகற்ற இயற்கை வனப்பை மீட்க ஹோமியோபதி மருந்துகளே மிகச் சிறந்த நம்பகமான தீர்வாகும்.

Saturday, March 1, 2014

கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்! DR.S.வெங்கடாசலம்.RHMP,RAMP,M.Dip.MR,DIAT,DNYS,DSA,DAT DR.V.ஆவுடேஸ்வரி.RHMP,RAMP,M.Dip.RT,DYN,DIAT,DPFR,DAMS


பொதுவாக ஹோமியோபதி மருத்துவமுறையில் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்தமுறை மருந்துகளால் தீங்கு ஏற்படுவதில்லை. இந்த மருந்துகள் பக்க விளைவுகளையோ அல்லது பின் விளைவுகளையோ ஏற்படுத்துவதில்லை என்பதும் ஒவ்வாமையை உண்டாக்குவதில்லை என்பதும் இந்த மருத்துவ முறையின் கூடுதல் தனிச்சிறப்பு எனலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் கூட ஹோமியோபதி மருந்துகள் முழுப் பாதுகாப்பானவை. மருந்துகளை உட்கொள்ளும் முறை மிகவும் எளிமையானது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இனிமையான சுவையுடன் இம்மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

எல்லாவகையான நோய்களுக்கும் நிரந்தர குணம் அளிக்கும் வகையில் ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. அந்த வகையில் கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம் பற்றிப் பார்ப்போம்.



இன்றைய நவீனயுகத்தில் படித்த பெண்களும், அனுபவம் மிக்க நடுத்தர வயதுப் பெண்களும் மாதவிலக்குக் கோளாறுகள் (Menstrual Disorders), கர்ப்பப்பை கோளாறுகள் (Uterine Problems), பாலியல் பிரச்னைகளுக்கு (Sexual Disorders) முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வருவது வரவேற்கத்தக்கதே. ஆனால் சில பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை அந்தரங்கமாகக் கருதி சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். வெளியே சொல்வதற்கு சங்கடப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.


Menorrhagia எனப்படும் அதிகளவு மாதப்போக்கு, Metrorhagia எனப்படும் இடைக்கால மாதப்போக்கு, Dysmenorrhea எனப்படும் வலிமிக்க மாதப்போக்கு, Amenorrhea எனப்படும் தடைப்படும் மாதப்போக்கு, Leucorrhea எனப்படும் வெள்ளைப்பாடு, Oophoritis, Salpingitis, Metritis போன்ற கர்ப்பப்பை சார்ந்த அழற்சிகள், Cysts எனப்படும் நீர்க்கட்டிகள் Uterine Fibroids எனப்படும் கர்ப்பப்பை நார்க்கட்டிகள், Cervical Polyp, Uterine, Tumours, Myoma எனப்படும் சிறிய, பெரிய தசைக்கட்டிகள், வீக்கம் போன்றவை பரவலாகப் பெண்களிடம் காணப்படும் வியாதிகளில் சில.



பேரிக்காய் வடிவத்தில் அமைந்துள்ள கர்ப்பப்பை கூபக எலும்பானது (Pelvis) அதன் நடுவில் பாதுகாப்பாக உள்ளது. பெண்களைத் தாய்மையடையச் செய்யவும், இனப்பெருக்கத்திற்கும் கர்ப்பப்பை அவசியமானதாகும். கர்ப்பப்பையின் ஆரோக்கியமே ஒரு பெண்ணின் முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகிறது.

எனவே கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றுக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரண நிலையில் நோய் இருக்கும்போது அலட்சியப்படுத்தி விட்டால் அந்நோய் முற்றிய நிலையில் வேதனை அதிகரித்து உடல் பலவீனப்பட நேரிடலாம். நோய் முற்றிப்போனால் எந்த மருத்துவ முறையானாலும் குணப்படுத்துவது சிரமம்.

காரணங்கள்;
இன்றைய நவீன வாழ்க்கைச் சூழ்நிலைகளாலும், பதற்றம், பரபரப்பு, அவசரங்களாலும், உரங்கள், பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்ட தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றாலும், உணவுப் பழக்க வழக்கங்களாலும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையாலும் கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படுகின்றன. இந்தக் கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாகக் கூட இருக்கலாம்.

அதிலும் கடந்த தலைமுறையினரைக் காட்டிலும் இந்த தலைமுறையினரில் குறைவான வயதுடைய பெண்களுக்கு இதுபோன்ற கட்டிகள் அதிகளவில் காணப்படுகின்றன.


கர்ப்பப்பை கட்டிகளைப் பொருத்தவரை அலோபதி மருத்துவமுறையில் மருந்து, மாத்திரைகள் மூலம் குணமாக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் கர்ப்பப்பை அறுவைசிகிச்சை (Hysterectomy) மூலம் அகற்றப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க் கட்டிகள் தவிர மற்ற அனைத்து வகைக் கட்டிகளையும் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்த முடியும். ஹோமியோபதி மருந்துகள் இதுபோன்ற கட்டிகள் மீண்டும் உருவாகாமல் தடுப்பதுடன் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்தும், கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியும் கர்ப்பப்பை இயக்கத்தை இயல்பான நிலைக்குக் கொண்டு வருகின்றன.



சினைப்பைகளிலோ (Ovaries), கருக்குழாய்களிலோ (Fallopian Tubes) கர்ப்பப்பையிலோ (Uterus) வீக்கம் (Enlargement) அல்லது கட்டிகள் இருந்தால் அதனால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். மாதவிலக்கு தடைபடுதல் (Suppression of Menses), கட்டுக்கடங்காத அதீத இரத்தப்போக்கு (Profuse Bleeding) இடுப்பு வலி, அடிமுதுகுவலி, அடி வயிற்றுவலி, கால்களில் வலி, நடக்க இயலாத பலவீனம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், பிறப்புறுப்பில் உஷ்ணம், வலி, அதிக வெள்ளைப்பாடு, குளிர்ச்சுரம், தலைவலி, இரைப்பைக் கோளாறுகள், உடலிலும் மனதிலும் அமைதியற்ற நிலை (Restlessness) போன்ற பிரச்னைகளால் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை துயரமாகி விடும்.

பெண்களின் சினைப்பையில் நீர்மக்கட்டிகள் இருப்பது தெரிய வந்தால் அலோபதி மருத்துவத்தை விட ஹோமியோபதி மருந்துகளே சிறந்த பலனைத் தரும். சினைப்பையில் நீர்மக் கட்டிகளுக்கு அலோபதி மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டும் எவ்விதப் பயனும் இல்லாத நிலையில் ஹோமியோபதி மருந்துகள் நல்ல முன்னேற்றத்தை அளித்ததற்கான முன்உதாரணங்கள் ஏராளமாக உள்ளன.
ஹோமியோபதி சிகிச்சை ;
ஹோமியோபதி மருத்துவத்தில் விபத்து காலங்கள் தவிர பெரும்பாலான வியாதிகளுக்கு அறுவைசிகிச்சை தேவையில்லை.




கர்ப்பப்பை வீக்கத்தை, வலி அல்லது கட்டிகளைக் குணப்படுத்த கோனியம், ஆரம்மெட், கார்போ அனிமாலிஸ், கியோசோட்டம், தைராய்டின், அபிஸ்மெல், லாச்சஸிஸ், கல்கேரியா கார்ப், காலிபுரோம், மூரக்ஸ் போன்ற ஏராளமான மருந்துகள் நோயின் தன்மைக்கேற்ப உள்ளன.

மேலும் லக்கானினம், தூஜா, கல்கேரியா புளோர், சிமிசிபியூகா போன்ற மருந்துகளும் கர்ப்பப்பை கட்டி உள்ளவர்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

இயற்கையான வழிமுறைகளில் மனித உடலுக்கும் உள்ளத்திற்கும் எந்த இழப்புமின்றி நோய்களைக் குணப்படுத்த ஹோமியோபதி மருத்துவம் மிகவும் சிறந்தது.

இயற்கை வழங்கும் அதி உன்னத உணவு -- ஸ்பைரூலினா--DR.S.வெங்கடாசலம்.RHMP,RAMP,M.Dip.MR,DIAT,DNYS,DSA,DAT DR.V.ஆவுடேஸ்வரி.RHMP,RAMP,M.Dip.RT,DYN,DIAT,DPFR,DAMS

மனித உயிரையும் உடல் ஆரோக்கியத்தையும் காப்பதே உணவின் பிரதான நோக்கம். ருசியும் மணமும் இரண்டாம் தேவைகளே. ஆனால் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் வாழ்க்கையின் அர்த்தங்களும், உணவுகளின் நோக்கமும் மாறிவிட்டன. வறுமைப் பசியாலும், கடன் தொல்லையாலும் ஏற்படும் மரணங்களை விட அளவுமீறிய ஒழுங்கற்ற ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படும் மரணங்களே அதிகம்.
       நமது உணவுகளில் பெரும்பகுதி கார்போஹைட்ரேட், இனிப்பு, அடர்கொழுப்பு (Saturated Fats) போன்ற சத்துக்களே அடங்கியிருப்பதால் எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகிறோம். கொலஸ்டிரால் இருதய-ரத்தநாள நோய்கள், உடல்பருமன், நீரிழிவு, மலட்டுத்தன்மை, புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் முற்றுகையிடுகின்றன. இதற்குத் தீர்வு... மருத்துவமா? இல்லை... வாழ்க்கைமுறை மாற்றங்களும் சிறந்த உணவுகளும் தான் உண்மையான தீர்வுகளை வழங்க முடியும்.
‘ஸ்பைரூலினா’...எனும் அரிய, எளிய உணவு
       ‘ஸ்பைரூலினா’ பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஆனால் அதன் முழுமையான ஆற்றலையும், பயன்களையும் அறிந்திருந்தால் அனைவருமே மிகப்பெரும் நன்மை அடைந்திருக்க முடியும்.
       ஸ்பைரூலினா.. ஒரு செல் புரத பாசி வகையைச் சேர்ந்தது. (single celled Algae) அடர் பச்சை நிறமுள்ள இந்தச் சுருள்பாசியில் மிக அதிகளவில் பச்சையம் அமைந்திருப்பதாலேயே அந்நிறத்தில் உள்ளது. உலகின் வெப்பமான நீர்நிலைப் பகுதிகளில் விளையக்கூடியது. மத்திய ஆப்ரிக்கா, வட ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் கடல்களில், ஏரிகளில் காணப்படுகிறது.
       உலகிலுள்ள வேறு எந்த தாவர உணவுப் பொருட்களையும், இறைச்சி உணவுப் பொருட்களையும் விட அதிகளவு புரதம்  இச்சுருள்பாசியில் செறிந்துள்ளது. இது போன்ற சத்து ஆதாரமிக்க நீர்ப்பாசிகளை உணவாக உண்பதால்தான் மீன்களில் அதிகப் புரதம் அமைகிறது. விண்வெளி வீரர்களின் முக்கிய உணவாக ‘ஸ்பைரூலினா’ பயன்படுகிறது. ஸ்பைருலினாவை உண்ணும் அளவோ மிகக் குறைவு.. கிடைக்கும் ஆற்றலோ அளப்பரியது! Yes... Micro Food! Macro Blessing!
இயற்கை அன்னையின் ஆற்றல்மிக்க உன்னத உணவு
       ‘இயற்கையை நோக்கி நீ இரண்டடி போனால், இயற்கை உன்னை நோக்கி நான்கடி நெருங்கி வரும்’ என்பது உண்மையே. சோவியத் ருஷ்யாவில் செர்னோபிள் அணுஉலை விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றிலுமுள்ள விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன. விளைச்சல் நஞ்சாய் அமைந்தன. எண்ணற்ற குழந்தைகளுக்கு நச்சு உணவுகளால் ஏராளமான தோல் அலர்ஜி நோய்களும், உடல்நலச் சிக்கல்களும் ஏற்பட்டன. புழக்கத்திலிருந்த மருந்துகள் மூலம் குழந்தை களைக் காப்பாற்ற இயலாத நிலையில் இறுதியில் ‘ஸ்பைரூலினா’ பரிந்துரைக்கப்பட்டது. தினமும் குழந்தைகளுக்கு இந்தக் கடற்பாசி உணவு மிகச் சிறிதளவு தொடர்ந்து வழங்கப்பட்டது. இயற்கையின் ஆச்சரியமாய் ஆறுமுதல் எட்டு வாரங்களில் குழந்தைகளின் தோல் அலர்ஜி நோய்கள் தீர்ந்தன. பெரும்பாலான நோய்களிலிருந்து அவர்கள் மீள முடிந்தது. எனவே ரஷ்யர்கள் ஸ்பைரூலினாவை ‘மருந்துணவு’ (Medicine Food) என்கின்றனர்.
‘ஸ்பைரூலினா’வில் அடங்கியுள்ள சத்துக்கள்
       மிகமுக்கியமாக இறைச்சியை விட 5 மடங்கு அதிகம் புரோட்டின் (உயர்தரமான தாவரவகைப் புரதம்) அடங்கியுள்ளது. காரட்டை விட 10 மடங்கு அதிகம் பீடாகரோடின் சத்து அடங்கியுள்ளது. தாய்ப்பாலில் மட்டுமே காணப்படும் காமாலினோனிக் அமிலம் (Gamma Linoleic Avid) இதில் அடங்கியுள்ளது. அமினோ அமிலங்கள் 22ல் 18 வகை இதில் உள்ளன. 10 வகை வைட்டமின்கள் குறிப்பாக Vit A,E,B12 போன்றவை உள்ளன. 8 வகை தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

‘ஸ்பைரூலினா’ அள்ளி வழங்கும் ஆரோக்கியம்
       நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியமும் வழங்குவதில் முதலிடம் வகிக்கும் உன்னத உணவாக ஸ்பைரூலினாவை இயற்கை படைத்துள்ளது. நமது உணவுகளில் கார்போஹைட்ரேட், எடை அதிகரிப்பு ஏற்படுத்துகிறது. உணவுக்கு 1மணி நேரம் முன்பு ஸ்பைரூலினா உண்பதால் பசி சீரடையும், எடை குறையும்.
       மேலும் புரதம், வைட்டமின்கள் அபரிமிதமாக உள்ளதால் நோய் எதிர்பாற்றல் பெருகும். நோய் தொற்றுக்கள் நெருங்காது. இதிலுள்ள காமா லினோலிக் அமிலச் சத்து கொலஸ்டிரால் உற்பத்தியைத் தடுக்கும். கெட்ட கொலஸ்டிரால் (LDL) அளவைக் குறைக்கும் நல்ல கொலஸ்டிரால் (HDL) அளவை அதிகரிக்கும். உடல் பருமனைக் குறைக்க சிறந்தது. இருதய நோய்களைத் தடுக்கும், ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தும். மேலும் காமா லினோலிக் அமிலச் சத்து சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்புப் (powerful anti inflammatory) பணியும் ஆற்றுவதால் மூட்டு அழற்சி வலியால் துயரப்படு வோருக்கு பெரும் நிவாரணியாக அமைந்துள்ளது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிய தீர்வுகள்
       ஸ்பைரூலினா... மனித உடலில் நிகழ்த்தும் அதிசயங்கள் ஒன்று இரண்டல்ல! ஏராளம்! ஏராளம்! சர்க்கரை நோயாளிகளுக்கு இது வரப்பிரசாதம். வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவை (blood sugar level in fasting) 6 முதல் 8 வாரங்களில் மிகச் சரியான அளவுக்குக் கொண்டு வருவதோடு, அடிக்கடி பசி ஏற்படுதல், அடிக்கடி உண்ண வேண்டிய நிர்பந்தம், நீரழிவு மிகுதியால் தோல் பாதிப்புகள், பாத எரிச்சல் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் சுகமான, சுலபமான, நம்பகமான தீர்வு ஏற்படுகிறது.
Best Stomach Tonic;       ஸ்பைரூலினா... இரைப்பை மற்றும் குடல் களின் செயல்திறனை அதிகரிக்கிறது. E.coli,candida போன்ற தீய பாக்டீரியாக்களை முறியடிக்க உதவுகிறது. ஹார்மோன் இயக்கத்தைச் சமநிலைப் படுத்துகிறது.

முதுமையும் தளர்ச்சியும் தூரப் போகும்
       மனிதனை முடக்கி மரணத்தை நோக்கி விரைவாய் நகர்த்தும் சிதைவு நோய்களை (Degenerative Diseases) தடுக்கும் ஆற்றல் ஸ்பைரூலினாவில் அமைந்துள்ளது. இது உடலின் நச்சுக்களை அகற்றும் anti oxidant/antiviralagent ஆகப் பணியாற்றுகிறது. vit.b.12 அடங்கியுள்ளதால் உடல், மன அழுத்தங்கள் இறுக்கங்கள் குறைந்து சுதந்திர உணர்வு ஏற்படும். தோல் வறட்சி, தோலில் சுருக்கம், இதரதோல் நோய்களையும் முறிய டிக்கும். எப்போதும் சோர்வும் பலவீனமும் உள்ளவர்களுக்கு, (Chromic Fatique Syndrome-CFS) நீண்டகால களைப்பு நோய்க்கு மிகச் சிறந்த சிகிச்சையாக இது அமைகிறது. இதன் மூலம் புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் பெருகும். தளர்ச்சி மறையும், முதுமையைத் தள்ளிப்போடும் (Antiaging) ஆற்றல் ஸ்பைரூலினாவுக்கு உள்ளது. புற்று நோயைத் தடுக்கும் சக்தியும் (cancer fighting ingredients) இதிலுள்ளன என ஏராளமான ஆய்வுகள் மூலம் அறியமுடிகிறது.
       ‘சேதமடைந்த செல் டிஎன்ஏ’ வின் விளைவே புற்று. இது கட்டுக்கடங்காமல பல்கிப் பெருகும். இந்நிலையில் “Endonucleus” என்ற சிறப்பு என்சைம்கள் சேதமடைந்த செல் “டிஎன்ஏ” நிலை பெற்று செல்லைப் பாதுகாத்து வாழ்வளிக்கும். இந்த என்சைம்கள் செயல்படாத நிலையில் “டிஎன்ஏ” சரிசெய்யப்படாமலேயே போய்விடும். புற்று வளரும். ஸ்பைரூலினா... செல்லின் நியூக்ளியஸ் என்சைம் செயலைத் தூண்டும்; அதிகப்படுத்தும். இதுகுறித்து தொடர் ஆய்வுகளி லிருந்து நம்பிக்கையளிக்கும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
‘ஸ்பைரூலினா’ பெயரில் நடைபெறும் MLM-நிறுவனக் கொள்ளையை முறியடிப்போம்
       மனிதகுலம் எத்தனையோ போர்களை இயற்கை சீற்றங்களைச் சந்தித்து மீண்டுள்ளது. மனித சமூகமும் பூண்டோடு அழிந்துவிடப் போகிறது என ஆரூடம் கணித்த எத்தனையோ பேர்கள் மாண்டுவிட்டனர். ஆனால் மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தனக்கு எதிரான சூழல்களிலிருந்தும், நோய்மையிலிருந்தும் மீள மனிதகுலம் இடையறாது போராடிப் போராடி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
       உயிரினங்களில் புரட்சிகரமானது மனித உயிர். உணவுகளில் புரட்சிகரமானது ஸ்பைரூ லினா. மருந்துகளால் அல்ல மிகச்சிறந்த (இயற்கை) உணவுகளால் மட்டுமே மனித நலம் பாதுகாக்கப் படும். இயற்கையை வணங்குவது அல்ல. இயற்கை யோடு இணைந்த வாழ்வதே முக்கியம். ஸ்பைரூ லினா ஒவ்வொரு குடும்பத்திலும் அடிப்படை உணவு போல அமைய வேண்டும். இந்த எளிய உணவுப் பொருளை MLM நிறுவனங்கள் தங்கத்தின் விலைக்கு விற்பனை செய்து கொள்ளையடிக்கும் மோசடியில் வீழ்ந்துவிடாமல், எல்லோருக்கும் ஏற்றவிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் படும் ‘ஸ்பைரூலினா’வையே அனைவரும் பயன் படுத்த வேண்டும்.

       “எதிர்காலத்தில் அதிகமான பேருக்குக் குறைந்த செலவிலான உணவு ஆதாரமாக இது திகழும்” என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, February 5, 2014

அக்குப்பங்சர்--மருந்தில்லா ஊசி மருத்துவம்-______________________________________

எளிதாக, நாசூக்காக செய்யப்படும் வேலைகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் என்று சொல்வார்கள். ஆனால் அதே ஊசி நமது உடலில் செலுத்தினால், சிறுவயது பிள்ளைகள் ஏதேனும் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவரிடம் சென்றால், அவர் ஊசியை எடுத்தால் கண்கள் கலங்கி அழுவது நாம் அறிவோம். ஊசி என்றாலே பயந்து நடுங்கும் குழந்தை களாக நாமும்கூட சிறுவயதில் இருந்திருப்போம். ஊசி குத்துவதை

காயப்படுத்துவதாக தாக்குவதாக எண்ணுவதும், குத்தும்போது ஏற்படும் சுருக்கென்ற வலியும் ஊசியைக் கண்டு குழந்தைகள் பயப்பட காரணம்.
மருந்தோடு குத்தப்படும் ஊசியைப் போல் மருந்து இல்லாமலும் ஊசி குத்துவது உண்டு. அது தான் அக்குப்பங்சர்.


சீன மொழியில் ’ஷன் சியு’ என்று அறியப்படும் அக்குபங்சர் சீன பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. அக்குபங்சர் என்பது லத்தீன் மொழியில் உள்ள அகுஸ் (ஊசி)பஞ்சேர் (குத்துதல்) என்ற வார்த்தைகளால் உருவான சொல்லாகும். சீன மொழியிலும் 'ஷன் சியு’ என்றால் ’ஊசி மருத்துவம்’ என்றே பொருள்படுகிறது.

உலகின் பழமையான, பரவலான பயன்பாட்டில் உள்ள மருத்துவ முறைகளில் ஒன்றாக அக்குபங்சர் உள்ளது. மேலும் நாளுக்கு நாள் இந்த அக்குபங்சர் சிகிச்சை முறை அதன் குணப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு பயன்கள் காரணமாக பிரபலமாகியும், பரவலாகியும் வருகிறது. சீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி நடைமுறையில் உள்ள இந்த அக்குபங்சர் மருத்துவம், பொதுவாக நோய்களில் வலி நிவாரணம் பெறவும், அறுவைச் சிகிச்சைக்கான மயக்கநிலை அடையவும்தான் பயன்படுத்தப்பட்டது ஆனால் அந்நிலை மாறிவிட்டது என்கிறார், ஷாங்காய் ஷுகுவாங் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், அக்குபங்சர் சிகிச்சையாளருமான ஷன் வெய்துங்க்.


தற்போது அக்குபங்சரின் முக்கியத்துவம் ”வருமுன் காத்தல், தடுத்தல்” என்ற அம்சத்தில் உள்ளது என்று சொல்லும் இவர், ”சீன பாரம்பரிய மருத்துவத்தில் அக்குபஞ்சரின் உயரிய நிலை ஒரு நபரை நீண்ட ஆயுளும், உடல்நலமும் பெறுவதற்காக பிரயோகிக்கப்பட்டது என்கிறார். இன்றைக்கு அக்குபங்சரின் சிறிய ஊசிமுனைகள் மக்கள் பலரது வேறுபட்ட பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறையாக நம்பிக்கையளித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக உடல் இளைக்க, உடல் பருமன் குறைக்கவென அக்குபங்சர் சிகிச்சையை நாடும் மக்களும், முகப்பொலிவு பெறவும், புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடவும், உளநல மற்றும் இதர உடல் சார் பிரச்சனைகளை தீர்க்கவும் அக்குபங்சர் சிகிச்சையை நாடும் மக்களும் இன்றைக்கு வெகுவாக காணமுடிகிறது” என்கிறார் மருத்துவர் ஷன் வெய்துங்க்.

”நம் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை தூண்டவும், காயமடைதல் மற்றும் தளர்ச்சி, மன அழுத்தம் ஆகியவை ஏற்படும்போது சுரக்கும் ஹார்மோன்கள் எனும் பல வகை இயக்குநீர்களை வெளிப்படுத்தவும் அக்குபங்சர் உதவும். ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, அமிலச் சுரப்பு, சிகப்பு மற்றும் வெள்ளை அனுக்கள் தயாரிப்பு ஆகியவற்றிலும் அக்குபங்சரால் மாற்றங்
கள் அல்லது பாதிப்புகள் ஏற்படுத்த முடியும். 

அக்குபஞ்சர் ஊசிகள் குறிப்பிட்ட இடங்களில் குத்தப்படும்போது அல்லது சொருகப்படும்போது, சாந்தப்படுத்தும், ஆசுவாசப்படுத்தும், வலி தெரியாமல் இருக்கச்செய்யும், களைப்பாறச் செய்யும் தன்மை கொண்ட எண்டார்ஃபின் கள் வெளிப்படுகின்றன. இது மன அழுத்தம், சலிப்பு, எரிச்சல், பதட்டம் ஆகியவற்றை எதிர் கொள்ள உதவும். இந்த மனரீதியிலான, உளரீதி யிலான சிக்கல்கள்கூட உடல் பருமனுக்கு காரணமாக அமையும். எண்டார்பின்கள் ஜீரண மற்றும் ஹார்மோன் அல்லது இயக்குநீர் அமைவுகளை தூண்டி, வேகமாக ஓடும் சில உறுப்புகளின் அமைப்புகளை சமநிலை படுத்தும், சீராக்கும்” என்கிறார் மருத்துவர் ஷன் வெய்துங்க்.



”குழந்தைகளுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை, ஆட்டிசம் எனப்படும் உளநிலை கோளாறு, போன்றவைகூட அக்குபங்சரால் தீர்க்கலாம்” என்கிறார் இவர். அட இதென்ன ஆச்சரியம் அக்குபங்சருக்கு 461 வகையான நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது என்கிறார் 43 வயது மருத்துவரான தூ யுவான் ஹாவ். தனது குழுவினரோடு இணைந்து 4 ஆண்டுகால ஆய்வுகளின் மூலம் அக்குபங்சர் இத்தனை நோய்களுக்கு தீர்வு தரக்கூடியது என்று கண்டுபிடித்துள்ளார் இவர். 


தூ யுவான் ஹாவின் ஆய்வு முடிவுகளின் வழி அறியப்பட்ட ஒரு முக்கியமான தகவல், நரம்பு மண்டலம், ஜீரண அமைப்பு, தசைகள், எலும்பு, தோல், ஆகியவற்றிலான சிக்கல்களுக்கு அக்குபங்சரின் ஆற்றல் நல்ல பயனுள்ளதாக அமைந்து குணமடைதல் அதிகமாக இருக்கிறது என்பதாகும். குறிப்பாக நினைவிழப்பு நோய், தோலில் ஏற்படும் சிரங்குகள் அல்லது புண்கள், நரம்பு மண்டலத் திலான தாக்குதல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு அக்குபங்சர் நல்ல பலன் தரும் சிகிச்சை என்று தனது 4 வருட ஆய்வில் தூ யுவான் ஹாவ் கண்டறிந்துள்ளார்.