Saturday, December 7, 2013

எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள் :சிறப்பு நேர்காணல்

எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்-
தமிழகத்தின் மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவர்களுள் ஒருவர். ஒருங்கிணைந்த பழைய முகவை (விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளடக்கிய) மாவட்டத்தின் CPI(M) செயலராக பொறுப்பு வகித்தவர். எஸ்.ஏ. பெருமாள் அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் எழுத்தாளர். பத்திரிக்கையாளர் மொழிபெயர்ப்பாளர். இலக்கியத் திறனாய்வாளர். அரசியல் தத்துவ வகுப்பாசிரியர். சிறந்த பேச்சாளர். பாப்லோநெரூடா, கலீல், ஜிப்ரான், ரசூல் கம்சதேவ் மற்றும் பல தலைசிறந்த கவிஞர்களின் 100க்கும் மேலான கவிதைகளைத் தமிழில் தந்துள்ளார். ஸ்ரீஸ்ரீ, தகழி, ராஜாராவ் ஆகியோரின் சிறுகதைகளில் பலவற்றையும் தமிழில் தந்துள்ளார். 15க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். கடந்த காலத்தில் இயக்கப் பணிகளுக்காக தென் மாவட்டங்களின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் அலைந்து திரிந்து வாழ்ந்தவர். இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம் குறித்து அதிக ஈடுபாடு கொண்டவர். இவரது வசீகரமான சொல், செயல், வாழ்க்கை, இயக்கப்பணிகளால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், அறிவு ஜீவிகள், மத்தியதரவர்க்கத்தினர், எளிய மக்கள் ஏராளம். கட்சி அரசியல் கடந்த சமூகத்தின் மீதான இவரது அக்கறை காரணமாக மருத்துவம், உணவுப்பண்பாடு, தனிநபர் ஆளுமை மேம்பாடு, கலை இலக்கியம், சினிமா, நாட்டுபுறவியல் போன்ற பல துறைகளில் பார்வையை விரிவுபடுத்தியவர். மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் அவரை “மாற்று மருத்துவம்”காலாண்டு இதழ் சார்பில் பேட்டி கண்டபோது மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்று பேட்டியில் கலந்து கொண்டார்
. இனி அவருடன்...

இன்றைக்கு கடைப்பிடிக்கப்படும் மருத்துவக் கொள்கைகள், நடைமுறைகள் பற்றி தங்கள் கட்சியின் நிலைபாடு என்ன?
மக்கள் நலன் பேணும் மருத்துவக் கொள்கைகளோ நடைமுறைகளோ இன்று மத்திய அரசு கடைப்பிடிக்கவில்லை. கிராமப்புற சுகாதாரம், அடிப்படைசுகாதாரம், அத்தியாவசியமான, தரமான, மலிவான மருந்துகள் போன்றவை புறக்கணிக்கப் பட்டுள்ளன. பகாசுர மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கத்தில் மருத்துவத் துறை மூழ்கிக் கிடக்கிறது. மக்களின் ஆரோக்கியத்தோடும் உயிரோடும் தொடர்புள்ள மருந்துகளின் உற்பத்தி, விற்பனை போன்றவை வெறிகொண்ட தனியார் கம்பெனிகள் வசம் நீடிப்பது ஆபத்து.ஆங்கில மருந்தான பாராசிடமாலை இருநூறுக்கும் மேற்பட்ட வணிகப் பெயர்களில் விற்கிறார்கள். மருந்தின் உற்பத்திச் செலவை விட 50 மடங்கு, 100 மடங்கு அதிகமாக விலை வைக்கிறார்கள்.
மேலும் ஆங்கில மருத்துவத்தில் வெளிப்படைத் தன்மையில்லை. பல்வேறு மருத்துவ விஷயங்கள் கம்பெனிகளுக்கும் டாக்டர்களுக்கும் இடையிலான ரகசியங்களாக உள்ளன. எந்த முறை சார்ந்த மருந்துகளாக இருந்தாலும் சாமானிய மக்களுக்கு எளிதாகவும், தரமாகவும், விரைந்து நோய் தீர்க்கக் கூடிய வகையிலும் நம்பகமாகவும் அமைய வேண்டும்.
ஒட்டுமொத்த மருந்து உற்பத்தியையும் அரசுத்துறை பொதுத்துறை மேற்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?
ஆம். அது தான் சரியானது. ஆனால் என்ன நடக்கிறது? மத்தியஅமைச்சர் அவர்கள் உலகப் புகழ் பெற்ற தடுப்பு மருந்து ஆலையைக் கூடதனியாருக்குத் தாரை வார்க்கிறார். மேனகா காந்தி மந்திரி பொறுப்பிலிருந்த போதே, “மருந்துக் கம்பெனிகளை நாட்டுடைமையாக்க முடியாது” என்று கொக்கரித்தார். இந்தியாவில் தடுப்பு மருந்து உற்பத்தி மையங்களை பரவலாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட போது “உள்ளதே போதும்” என்றார். அவர் கொண்டுவந்த ‘பிராணிகள் வதைச் சட்டம்’ பற்றிய பின்னணி குறித்து பல்வேறு செய்திகளை பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தின. வெறி நாய்க்கடி, குரங்குக்கடிக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் பிரபல கம்பெனியின் ரகசிய பேரம் காரணமாகவே இத்தகைய சட்டத்தை கடுமையாக்கினார் என்ற சூட்சம நாடகம் தெரிய வந்தது. அந்தக் கம்பெனி பல நாடுகளை இதே போன்ற சட்டத்தை கொண்டு வருமாறு வற்புறுத்தியது.
சோஷலிச நாடுகளில் பிராணிவதைத் தடைச்சட்டம் கிடையாதா?
சோஷலிச நாடுகளில் குறிப்பாக சீனாவில் நாய், பூனை போன்ற பிராணிகளை வீடுகளில் வளர்க்க முடியாது. தடை செய்யப்பட்டுள்ளது. பிராணி வதைத் தடைச் சட்டமல்ல - பிராணிகளை வளர்ப்பதற்கே தடை உள்ளது. அவற்றை மியூசியங்களில் போய் பார்க்கலாம்.
நமது பாரம்பரிய மூலிகைகள், அவை குறித்த ஆவணங்கள் அழிந்து வருகின்றனவே?
50 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 50,000 மூலிகைகள் உள்ளதாகக் கூறப்பட்டது.25 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 24,000 மூலிகைகள் உள்ளதாகக் கூறப்பட்டது. 10 ஆண்டுக்கு முன் 2500 மூலிகைகள் இருப்பதாகக் கூறப்பட்டது. இன்று இன்னும் குறைந்திருக்கக் கூடும். காடுகள் அழிவதும் மூலிகைகள் அழிவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டன. தன் விளைவாக சித்த, ஆயுர்வேத மருந்துகளும், இயற்கை மருந்துகளும் அழிந்து வருகின்றன. இப்போது அரசு, மூலிகைப் பண்ணைகள் வளர்க்க மானியம் 40 சதம் வழங்கி வருகிறது. அரசு 126 மூலிகைகளைக் குறிப்பிடுகிறது. இதில் சில பல கிராமங்கள் மூலிகைச் சாகுபடிகளில் ஆர்வம் காட்டி மூலிகைப் பண்ணைகள் ஏற்படுத்துகின்றன. இம்மூலிகைகள் பத்து பனிரெண்டு கோடி ரூபாய்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மூலிகை வளர்ப்பு ஊக்குவிப்புகளும் மூலிகைகளைப் பாதுகாப்பதற்காக அல்ல விற்பனைக்காக, லாபத்துக்காக ஏற்றுமதித் தேவைக்காக மட்டுமே நடைபெறுகின்றன.

சீனாவில் நான் சில நாட்கள் பயணம் செய்த போது தினமும் பல இடங்களில் பல வடிவங்களில் ஜின்செங் பயன்படுவதைப் பார்த்தேன். அப்படி சூழல் இங்கு இல்லை.
மூலிகைகளைப் பாதுகாக்க வேறு முயற்சிகள், வழிமுறைகள் இல்லையா?
ஆதிசங்கரர் போன்றோர் வகுத்த அழிவுப் பாதைகளால், சனாதன, சாஸ்திர, மூடநம்பிக்கைகளால், மூலிகை அறிவியலின் மேன்மைகள் அறியாமல் மூலிகைகளும், மூலிகை மருத்துவ அறிவுகளும் தொடர்ந்து அழிந்து வருகின்றன. “கடவுளை நம்பு! பூசாரிகளை நம்பு! மருந்தை நம்பாதே!” என்பது போன்ற மட போதனைகளால் மத குருமார்கள் பிழைப்பு நடத்தி வந்தார்கள்.
இதற்கு மாறாக சமணர்கள் ‘வில்வம்’, பௌத்தர்கள் ‘துளசி’ போன்றவற்றை தமது அடையாளங்களாக பயன்படுத்தினர். சமண, பொளத்த துறவிகள் மருத்துவர்களாகவும் வாழ்ந்தனர்.தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை தேடி திரிந்த போது ஒரு ஏழைக் குடியானவன் வீட்டில் அவனது மகன் பரணிலிருந்து எடுத்துக் கொடுத்த சுவடிகளைப் பார்த்து, நான் தேடிய பத்துப்பாட்டு இதுதான் என்று மகிழ்ந்தார்.
அவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பும் முன் குடியானவன் வந்து விசாரிக்கிறான்; மகனைக் கோபிக்கிறார். “நாளைக்கு பதினெட்டாம் பெருக்குக்கு ஆற்றிலே விடுவதற்காக இதனை வைத்திருக்கிறேன். அய்யரிடம் ஏன் கொடுத்தாய்?” என்று அவற்றை பறித்துக் கொள்கிறான்.
உ.வே.சாமிநாதய்யர் மிகவும் மனவேதனையுடன் சுவடிகளைக் கொடுத்து விட்டு அந்த ஊரிலேயே இரவு எங்கோ தங்கிவிட்டு மறுநாள் ஆற்றின் ஓரிடத்தில் காத்திருந்து குடியானவன் பத்துப்பாட்டு சுவடிகளை ஆற்றிலே விட்டபின் அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து அள்ளி வந்து பாதுகாத்தார். இதை ஒரு கதை போலச் சொல்வார்கள்.
மேலும் வைத்தியம் என்பது பிழைக்கும் வழியாக இருந்ததால் மூலிகைகளின் அற்புதங்களை, மருத்துவ குணங்களை ரகசியங்களாய் அமுக்கி வைத்திருந்தார்கள். வாழ்வின் அந்திம நேரத்தில் சொல்லலாம் என்று எண்ணி சொந்தப் பிள்ளைகளிடம் கூட மருத்துவ ரகசியங்களைச் சொல்லாமல் மறைந்தவர்கள் உண்டு.
நீடித்த நலவாழ்வுக்கு பல கற்ப மூலிகைகள் உதவும் என்றும், பாம்புக் கடிக்கு, தேள்கடிக்கு, சிறியா நங்கை, பெரியாநங்கை போன்றவை பயன்படுவதாகவும் நட்சத்திர நங்கை என்றொரு மூலிகை செத்தவனையும் உடன் உயிர் பிழைக்க பயன்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது போன்ற ஏராளமான நல்ல மருத்துவ செய்திகள் பொதுமைப்படுத்தாமல் சிலரின் தனிச் சொத்துகளாய் உள்ளன.
அரசுகள் இவற்றை மீட்டெடுக்க முயற்சிகள் செய்தால் ...செய்யமாட்டார்கள். பிரிட்டிஷ் பார்மோகோபியா தவிர எதையும் இங்கு ஏற்க மாட்டார்கள். ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளின் அலோபதிதான் சிறந்தது என்று நம்புகிறார்கள். மொழி கலாச்சாரம் போன்றவற்றில் தொன்மைக்கால சிறப்புக்களில் கவனம் செலுத்தினாலும் மருத்துவத்துறையில் அப்படி நிகழவில்லை.
மேற்குவங்கம், கேரளம், திரிபுரா போன்ற இடது முன்னணி அரசுகள் மாற்று மருத்துவங்களைப் பாதுகாக்க, வளர்க்க மேற்கொண்டு வரும் முயற்சிகள் என்ன?
இந்த மாநிலங்களில் மட்டுமே பிற மாநிலங்களை விட மாற்றுமுறை மருத்துவங்களின் பயன்பாடு சிறப்பாக உள்ளன. மேற்கு வங்கத்தில் ஆங்கில மருத்துவத்திற்கு அடுத்தபடியாக ஹோமியோபதிக்கும் ஓரளவு யுனானிக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. பல்வேறு மாநிலங்கள் போல அங்கும் நிதிப் பற்றாக்குறைகள் உண்டு.
கேரளாவில் ஆங்கில மருத்துவமும் ஆயுர்வேதமும் சமமாக பாவிக்கப்படுகிறது. ஈ.எம்.எஸ். முதல்வராய் இருந்த போதே அரசு மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தி ஸ்திரப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
திரிபுராவில் மூலிகைகள் வளர்ப்புக்கு அரசு ஊக்கமளிக்கின்றன. பொதுவாக பெரும்பகுதி மக்களுக்கு இலவசமாக மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதும், நியாயமான கட்டணத்தில் தரமான சிகிச்சைகள் அமையவேண்டும் என்பதில் இந்த மாநிலங்கள் அக்கறை செலுத்துகின்றன. இதனால் மாற்று மருத்துவங்களுக்கும் ஆதரவான சூழ்நிலை நிலவுகின்றது.
நமது உணவுப்பண்பாடு முற்றிலும் மாறி வருகிறதே?
பசுமைபுரட்சி என்ற பெயரால் நிலமும், உணவு தானிய உற்பத்தியும் பெருமளவு இயற்கை தன்மை சீர்குலைவுக்கு ஆட்பட்டது.
ஆனால் அதற்கும் முன்பாக நமது தேசத்தின் பாரம்பரிய நவதானிய உணவுகளை நாம் இழக்கத் துவங்கிவிட்டோம். வடக்கே கோதுமையும் தெற்கே அரிசியும் என்கிற ஒற்றை உணவுக் கலாச்சாரம் காலூன்றிவிட்டது. இதனால் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் பெருகிவிட்டன. இன்றைக்கு கிராமப்புறங்களில் கூட நவதானியங்கள் கிடைப்பதில்லை. மிகவும் ஏழ்மைப்பட்ட நிலையில் சில இடங்களில் மக்காச்சோளம், அங்கொன்றும் இங்கொன்றுமாய் உணவுக்குப் பயன்படுத்தினார்கள். அதிலும் தானியத்தை வீரியப்படுத்து வதாகக் கூறி ரசாயன உரங்களும் பூச்சி மருந்துகளும் பயன்படுத்தி கெடுக்கப்பட்டுள்ளது.
175 விதமான பெட்ரோலிய பொருட்களைப் பட்டியலிடுவார்கள் அவற்றில் ஒன்றான யூரியாவை நாட்டிலுள்ள எல்லா விளை நிலங்களிலும் தூவி எல்லாவிளை பொருட்களும் இயற்கை சத்திழந்து போய்விட்டன. இதனால் ஆண்மை, பெண்மை, குறைபாடுகள் முதல் அனைத்து நோய்களும் உருவாகின்றன. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இயற்கை விவசாயம், இயற்கை உணவு நோக்கி மாறி வரும் சூழ்நிலை இப்போது ஏற்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.
பன்னாட்டு நிதி உதவிகள் எய்ட்ஸ் போன்ற நோய் குறித்த பிரச்சாரத்திற்கு அளிக்கப்படுவது பற்றி...
அமெரிக்காவின் போர்டு நிறுவனம் பெரியது அமெரிக்காவின் முதல் பெரும் பணக்காரனாக இருந்த ஹென்றி போர்டுக்கு கைகால்கள் செயலிழந்து, தலையும் அசைக்க முடியாமல் இயங்கா நோய் ஏற்பட்ட போது, தலைசிறந்த மருத்துவர்களாலும் சரிசெய்ய முடியவில்லை. இங்கிருந்து சென்ற ஒரு புத்த துறவி (மருத்துவரும்கூட) அவரைச் சந்தித்து அவரது பிரச்சனையின் முழு விவரங்களையும் ஆய்வு செய்து ஒரு ஆலோசனை வழங்கினார். போர்டு மனதில், ஆழ் மனதில் ஒரு வித குற்ற உணர்வு ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு அவரைப் போன்ற உலகிலுள்ள நோயாளிகளுக்கு நிறைய தானதர்மங்கள் மூலம் பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
அதற்காக அறக்கட்டளை மூலம் நன்கொடைகள் வாரி வழங்கப்பட்டன. அதே போல வேறு பல நாடுகளின் நிறுவனங்களிலிருந்தும் நிதி உதவிகள் வருகின்றன. ஆனால் எய்ட்ஸைப் பொறுத்தளவில் அரசாங்க இலாக்காக்களிடம் தான் நிதியை ஒப்படைக்க முடியும். அங்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம், பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சைகள் அனைத்து மட்டங்களிலும் பிற துறை கள் போலவே ஊழல் மலிந்து கிடக்கின்றன. இந்திய மக்களின் பிரதான உடல் நலகுறைபாடுகள், சுகாதாரத் தேவைகளை இந்திய அரசே அலட்சியப் படுத்தும் போது அன்னிய நிறுவனங்களுக்கு அதிலென்ன அக்கறை?
அறிவியல் என்ற பெயரால் மாற்று மருத்துவங்கள் புறக்கணிக்கப் படுகின்றனவே?
அது தவறு அறிவியல் உள்ளடக்கங்கள் இல்லாமல் எந்த மருந்தும், மருத்து வமும், நோய்களைத் தீர்க்க முடியாது. நோயை அறிவதற்கு வழிமுறைகளும், தீர்ப்பதற்கு மருந்துகளும் சிகிச்சை முறைகளும் உள்ள எந்த மருத்துவ முறையையும் விஞ்ஞானத்திற்கு புறம்பானது என்று புறக்கணிக்க முடியாது. ஆங்கில மருத்துவம் தடித்தனமானது. எந்திரத்தனமானது. ஹோமியோபதி போன்ற இயற்கை மருந்துகள் மனித உடலின் அடிப்படை அணுக்களைச் சென்றடைந்து ஆற்றல் தரக் கூடியது.
கேரளாவில் கிழிஞ்சான் கோடு என்ற கிராமத்தில் 97 வயது ஆயுர்வேத வைத்தியர் ஒருவரைச் சந்தித்தோம் என்னுடன் வந்த ஒருவர் அவரிடம், “கண் அழுத்த நோய்க்கு எதிலும் மருந்தில்லாமல் போய்விட்டதே என்றார். அப்போது அந்த வைத்தியர், “நேரம் கிடைக்கும் போதெல்லாம் இரண்டு கைகளையும் தட்டுங்கள். அதன் மூலம் புத்துணர்ச்சியும், நுண்நரம்புகளுக்கு இயங்கு சக்தியும் கிடைக்கும். உங்களது கண் பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கும்” என்றார். மனிதர்களும் குரங்குகளும் மட்டும்தான் கைகளைத் தட்டுகின்றனர். மனிதன் உற்சாக மிகுதியில் கைகள் தட்டுவான். உற்சாகம் பிறக்கவும் சோர்வு நீங்கவும் கை களைத் தட்டுவது பலன் தரும் என்கிறார்கள். இதிலும் வைத்தியம் உள்ளது.
போலி மருத்துவர்கள் பிரச்சனை அடிக்கடி எழுகிறதே. தங்கள் நிலைபாடு என்ன?
குறைந்த பட்சப் படிப்பறிவு இல்லாமல், துறை சார்ந்த விஷய ஞானம் இல்லாமல், மருந்து சிகிச்சை பற்றிய அனுபவம் ஏதுமில்லாமல் எவரும் வைத்தியம் பார்ப்பதில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் மருத்துவர் கண்ணன் உட்பட அனுபவ மிக்க சில ஹோமியோபதி மருத்துவர்களைக் கைது செய்த போது தீக்கதிரில் அதனைக் கண்டித்து செய்தி வெளியிட்டோம்.

கல்லூரிகளில் அரசியல் விஞ்ஞானம் படித்தவர்கள் தான் கட்சி நடத்த வேண்டும் ஆட்சி நடத்த வேண்டும் என்பது எப்படி பொருத்த மற்றவாதமோ அது போன்றதே எந்த மருத்துவ முறையாயிருந்தாலும் கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டுமே வைத்தியம் செய்ய வேண்டும் என்பதும் சித்தர்களே மீண்டும் பிறப்பெடுத்து வந்தாலும் வைத்தியம் பார்க்க முடியாது என்பது சரியல்ல.
மக்களின் அபிமானம் பெற்றதால்தான் மக்களின் அங்கீகாரமும் ஆதரவும் இருப்பதால்தான் பலரும் அனுபவ வைத்தியம் செய்கிறார்கள்.போலி மருந்துகள் தான் இருக்கின்றனவே தவிர அதிலும் குறிப்பாக ஆங்கில மருத்துவத்தில்தான் அதிகமுள்ளன. போலி மருத்துவர்கள் என்று யாரும் கிடையாது. அனுபவத்தில் நோய் தீர்க்கும் சிகிச்சை முறைகளைக் கற்றுத் தேர்ந்து சாதனைபுரிந்த எண்ணற்ற மருத்துவமணிகளை சமூகத்திற்கு பயனுள்ள சக்தியாகக் கருதி அவர்களுக்கு அரசு தகுதி கண்ட றிந்து, தகுதிகளை வளர்க்க உதவிகள் செய்து அங்கீகரிக்க வேண்டும். மாறாக ஏழை எளிய மக்களுக்கும், எந்த மருத்துவ வசதியும் இல்லாத கிராமப் புற மக்களுக்கும் வைத்தியம் செய்யக் கூடியவர்களை தொழில் போட்டி காரணமாக குற்றம் சாட்டுவதும், கைது செய்து வழக்குகள் பதிவு செய்வதும் நிறுத்தப்பட வேண்டும்.
இந்தியா போன்ற வறுமைக் கோட்டிற்கும் கீழே வதை படும் மக்கள் கூட்டம் நிறைந்த நாட்டில் ஆங்கில மருத்துவ வணிக வலை களுக்குள் நிர்ப்பந்தமாக மக்களை விழச் செய்ய நினைப்பது அராஜகம்.
இந்தியா சுதந்திரம் பெற்ற காலம் முதல் வெகுஜன நலன்கள் அடிப்படையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இயங்கி வரும் கம்யூனிஸ்ட்டுகள் மாற்று மருத்துவங்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்?
“மனித குலம் இதுவரைக் கண்டறிந்துள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் கொண்டு உள்ளத்தை வளப்படுத்திக் கொள்ளாமல் கம்யூனிஸ்டாக முடியாது” என்று வழிகாட்டியவர் லெனின். மனித குலத்தின் பூர்வீக காலம் முதல் இன்று வரை கண்டறிந்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து வகை மருத்துவங்களையும் நாங்கள் வரவேற்கிறோம்.
சீனாவில் மாசேதுங் தாயக மருத்துவத்தையும் ஆங்கில மருத்துவத்தையும் இணைத்து இரண்டு கால்களால் நடப்போம் என்று மருத்துவத் துறைக்கு புதிய வழியை உருவாக்கினார். காலச் சுழற்சியில் சீன தொன்மை மருத்துவங்களின் சிறப்பான பயன்பாடுகளால் அவை அங்கே முதலிடம் பெற்றுவிட்டது.
எந்த வித நோய் நிலைகளுக்கு எந்த வித மருத்துவம் எளிதில் தீர்வு காணுகிறதோ அதை ஏற்றாக வேண்டும். தவிர்க்க முடியாத சில அறுவைச் சிகிச்சைகளிலும், விபத்துக் காலங்களில் ஆங்கில மருத்துவத்தை தவிர்க்க முடியாது. உலகம் முழுதுமே கம்யூனிஸ்ட்டுகளின் நிலைபாடு இப்படித்தான் இருக்கிறது; இருக்க வேண்டும்.மாற்று முறை மருத்துவங்கள் விரிவாக மக்கள் மத்தியில் சென்றடைய என்ன செய்யலாம்?நான் அறிந்தவரை நம் நாட்டின் அற்புத மருத்துவங்களான ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் வெகுஜன மக்களை நெருங்கி வரவில்லை.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களைப் போல சிலரும், தங்களது சிகிச்சை மருந்து தவிர மற்றவர்கள் தருவது ஏமாற்று வேலை என்பது போல சிலரும், கால மாற்றம், நவீன அறிவியல் வளர்ச்சிக்கு எதிராக பிற்போக்கான நடைமுறைகளை வைத்தியத்துடன் கடைப்பிடிக்கும் சிலரும், சோதிடம், ஜாதகம், வாஸ்து, மற்றும் ஆன்மீக விஷயங்களை மருத்துவ அறிவியலுக்குள் திணித்து குழப்பும் சிலரும் மாற்று மருத்துவங்களின் களைகள்.

மாற்றுமருத்துவங்களை குறிப்பாக சித்தா, ஹோமியோ, அகுபங்சர், மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தி எந்தப் பித்தலாட்டத்திற்கும் இடமில்லாமல் எளிமையாகவும் வெளிப்படைத் தன்மையோடும் மக்களின் நோய்களைத் தீர்ப்பவர்கள் ஏராளம் உள்ளனர். ஒருங்கிணைந்த முயற்சிகள், அமைப்பு சார்ந்த முயற்சிகள் மூலமாக மக்களை நெருங்கிச் செல்ல வேண்டும். மக்கள் தம் உயிருக்கு, ஆரோக்கியத்திற்கு,நீடித்த வாழ்வுக்கு எந்த மருத்துவங்கள் சிரமப்படுத்தாமல் எதிர் விளைவுகள் இல்லாமல் உதவும் என்பதை அறியத்துவங்கினால். மாற்று மருத்துவங்களுக்கு மறுமலர்ச்சி ஏற்படும்.

குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்? சிகிச்சை மூலம் மாற்றமுடியுமா?

விரல் சூப்புவதற்கான உளவியல் காரணங்கள்
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் முக்கியமான உணவாகும். ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது அது இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. இது போன்ற தாயின் அரவணைப்பில்லாத, நெருக்கமில்லாத குழந்தைகளே அதிகமாக விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு இப்படியான பழக்கம் அதிகம் உள்ளது.
       பொதுவாக விரல் சூப்பும் பழக்கம் இப்போது எல்லாக் குழந்தைகளிடமும் இருக்கிறது. மூன்று வயது வரை இந்தப் பழக்கத்தைத் தவறாக நினைக்க வேண்டியதில்லை. அந்த வயதிற்குப் பின்பும் இப்பழக்கம் நீடித்தால், ஒரு ஹோமியோபதி மற்றும் பாச் மலர் மருத்துவ நிபுணரிடம் காண்பித்து சிறப்பு சிகிச்சை அளிப்பது நல்லது.

       குழந்தை விரல் சூப்புவதற்கு மிக முக்கியமான காரணமே தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதுதான் என்கிறார்கள் சில உளவியல் நிபுணர்கள். சிந்தனை அதிகமுடைய குழந்தைகளிடம் தான் விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள்.
       பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காத சூழலில்தான் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் நீடிக்கிறது. பெற்றோர்களிடம் நிரந்தர சண்டை இருந்தால் அவர்களின் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் உறுதியாக இருக்கும் என்கிறார்கள்.
குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு வழியில் மன அழுத்தம் ஏற்படும் போது அவை விரல் சூப்புவதைத் தான் விரும்புகிறது. சில குழந்தைகள் ஓய்வுக்காகவும், தூக்கம் நன்றாக வருவதற்காகவும், சில சமயம் பசிக்காகவும் கூட விரல்களைச் சூப்புகின்றன. நான்கு வயது முதல் 16 வரை விரல் சூப்பும் குழந்தைகளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. 4 முதல் 6 வயதிற்குள் குழந்தையின் பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் முளைக்கத் துவங்கும். இக்காலத்தில் குழந்தைகள் விரல் சூப்பினால் பற்கள் சற்று வெளியே நீளத் துவங்கும். பற்களுக்கு இடையில் இடைவெளி ஏற்படும். இதனால் மற்ற குழந்தை களைப் போல் பற்கள் இல்லாமல் தனக்கு மட்டும் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறதே என்கிற தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் இக்குழந்தைகளுக்கு பற்கள் சீராக இல்லாதிருப்பதால் பேச்சிலும் தெளிவு இல்லாமல் இருக்கும்.


       இதுபோல் விரல் சூப்பும் குழந்தைகளுக்கு தொடர்ந்து எச்சிலால் விரல்கள் நனைந்து, சோர்ந்து சூம்பிக் காணப்படும். இதனால் விரல்களில் இரத்த ஓட்டம் குறைந்து பழுப்பு நிறமாகி விடும். அதே போல் குழந்தைகளின் விரல்களிலுள்ள அழுக்குகள் உள்ளே சென்று சில நோய்களை ஏற்படுத்தும்.
விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி?
       விரல்களைச் சூப்பும் குழந்தைகளுக்கு அந்த விரல்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்படி ஓவியம் வரைதல், புத்தகங்களைப் படிக்க வைத்தல் போன்ற மாற்று வழிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இப்படி செய்வதால் குழந்தைகள் சிறிது சிறிதாக இப்பழக்கத்தை விட்டுவிடுவார்கள்.
       சில குழந்தைகள் இரவில் தூக்கத்தின் போது கை சூப்பும். இந்நிலையில் பெற்றோர் விரல்களைஎடுத்து விடவேண்டும். இதுபோல் தூங்கும் போது குழந்தைகளின் கையில் ஏதாவது ஒரு விளை யாட்டுப் பொம்மையைக் கொடுத்தால், அந்தப் பொம்மையைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற கவனத்தில் விரல் சூப்பாமல் இருக்கும்.

       விரல் சூப்பும் குழந்தைகளின் விரல்களில் வேப்பெண்ணெய் தடவுதல், பேண்டேஜ் போடுதல் போன்ற வன்முறையான செயல்களைத் தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடை வெளியை துவக்கத்திலேயே அதிகரித்துவிடும்.

       மேலும் விரல் சூப்பும் குழந்தைகளிடம் அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக, அந்த விரல்களில் சூடு போடுவது, குழந்தைகளை அடிப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதை விட ஹோமியோபதி மருத்துவரிடம் காண்பித்து ஹோமியோ மற்றும் மலர் மருத்துவ சிகிச்சை செய்வதே சிறந்தது. ஹோமியோபதியில் கல்கேரியா கார்ப், கல்கேரியா பாஸ், சிலிகா, நேட்ரம் மூர், பல்சடில்லா, இபிகாக், சக்காரம் போன்ற மருந்துகளும், பாச் மலர் மருத்துவத்திலும் வால்நட், ஒயிட் செஸ்ட் நட், செர்ரிபிளம், செஸ்ட்நட்பட், அக்ரிமோனி, கிளமேடிஸ் போன்ற மருந்துகளும் விரல் சூப்பும் பழக்கத்தை மாற்ற உதவுகின்றன. குழந்தைகளின் உடல், மன அமைப்பிற்கேற்ப ஹோமியோபதியிலும், மன நிலைக்கேற்ப மலர் மருத்துவத்திலும் மருந்துகள் தேர்வு செய்யப்படுகின்றன.

Thursday, December 5, 2013

மாற்று மருத்துவங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட இனமா?

“இதை தவிர வேறு வழியில்லை !” -இது ஆங்கில மருத்துவத்தின் மூடநம்பிக்கை      
“சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்...சிந்தை இருங்காரடி!”  
என்று மனம் வெந்து பாடினான் மகாகவி பாரதி. “டெங்கு சுரத்திற்கு தடுப்பு மருந்து இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!” என்று ஆங்கில மருத்துவத் துறையினர் திரும்பத் திரும்பக் கூறி கொண்டேயிருப்பது வேதனையானது. அதைவிட வேதனையானது அதை அப்படியே நம்பி அரசும், ஊடகங்களும் திரும்பத் திரும்பக் கூறி மக்களை பீதிக்குள்ளாக்குவது!
டெங்கு சுரத்தைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும், ஹோமியோபதியிலும், இந்திய மருத்துவங்களிலும் சிறப்பான அரிய மருந்துகள் உள்ளன என்பது அரசுகளுக்குத் தெரியாதா? மக்களின் உயிரையும்,நலத்தையும் காக்கும் கடமையுள்ள அரசுகள் ஹோமியோபதி & இந்திய மருத்துவ டெங்கு தடுப்பு மருந்துகளை முழுஅளவில் மக்களுக்கு வினியோகம் செய்ய ஏன் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை? போலியோ சொட்டுமருந்து போன்ற ஆங்கில தடுப்பு மருந்துகளை ஒரே நாளில் மாநிலம் முழுவதும் (குழந்தைகளுக்கு) வழங்குவது போல் சித்தா, ஹோமியோ டெங்கு தடுப்பு மருந்துகளை ஏன் வழங்க முடியவில்லை?தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவத்துடன் ஹோமியோ,சித்தா மருத்துவங்களையும் ஒருங்கிணைத்து சிகிக்சையளித்து ஏன் உயிர்களைக் காக்க இயலவில்லை? 

கோவில் கருவறைக்குள் பிறசாதியினர் நுழைய முடியாதது போல மரணத்துடன் போராடும் நிலையில் ஆங்கில மருத்துவம் தவிர இந்திய மருத்துவங்கள் நோயாளிகளை ஏன் நெருங்க முடியவில்லை? மாற்று மருத்துவங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட இனமா? அல்லது அறிவியலுக்கு ஆராய்ச்சிகளுக்குப் புறம்பானவையா? டெங்குவிற்கு தடுப்பு மருந்து ‘இல்லை’ என்று உரக்கவும், ‘இருக்கிறது’ என்று மெல்லிய குரலிலும் அரசுகள் இருவேறு குரல்களில் ஒலிப்பது ஏன்?

இன்று வெளியுலகிற்குத் தெரியாமலேயே லட்சக்கணக்கானோர் ஆங்கில மருத்துவச் சிகிச்சைகளால் நடைபிணங்காளக வாழ்ந்து வருகின்றனர்.  புற்றுநோய்க்கு அளிக்கப்படும் ரேடியோ தெரபி சிகிச்சை காரணமாக 10 வருடம் வாழத் தகுதியானவர்கள் கூட பல்வேறு கொடூரமான விளைவுகளுக்கு உள்ளாகி ஓரிடு ஆண்டுகளுக்குள் சுடுகாட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.அவர்களுடைய சொத்து சுகங்கள் எல்லாம் சுரண்டப்பட்டு குடும்பத்தை நிர்க்கதிக்கு ஆளாக்கி விடுகின்றனர். 

டிபி நோய் மற்றும் மலேரியாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் பார்வையை, கேட்கும் திறனைக் கடுமையாகப் பாதிக்கின்றன என்பது அலோபதி மருத்துவர்களுக்கு தெரியாதா? “இதைத் தவிர வேறு வழியில்லை!” என்று அவர்கள் நம்புகிறார்கள்.  இதற்கு மாற்றுத் தீர்வுகள் உள்ளன என்பதே உண்மை நிலை. இந்த உண்மையை ஜனநாயக உணர்வோடு ஏற்றுக்கொண்டால் சில சாதாரண சிகிச்சைகளில் கூட பலரது வாழ்க்கையைத் தொலைக்கும் அவலம் ஏற்படாது!  டெங்கு, சிக்குன்குனியா, பன்றி சுரம் போன்றவை பரவும் போது பெருமளவிலான மக்கள் பாதிக்கப்படும் நிலை, மரணம் போன்றவை நிகழாது!

மனித உடலில் இயங்கும் எதிர்ப்பாற்றலே மனிதனை நலமாக்குவதில் மருந்துகளைக் காட்டிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.  துயருற்ற மனிதனுக்கும் அவனுக்குக் கொடுக்கக் கூடிய மருந்திற்கும் ஓர் இணைப்பு விதி நிச்சயம் இருந்தாக வேண்டும்.  அலோபதியில் இந்த அடிப்படை பின்பற்றப் படவில்லை. மனித உடலமைப்பை தனித்தனி SPARE PARTSகளின் தொகுப்பாகவே கருதுகிறது.  ஆனால் இயற்கையைப் போன்றே மனித உடலியக்கத்திற்கும் பன்முகத்தன்மை கொண்ட ஒன்றோ டொன்று தொடர்புடைய ஓர் ஒழுங்கமைப்பு உள்ளது. இதனை ஹோமியோபதி உள்ளிட்ட மாற்றுமருத்துவங்கள் ஏற்கின்றன. ஆங்கில மருத்துவமோ எந்திரவியல் அணுகுமுறையில் மனிதனைப் பார்ப்பதாலும்,தொழில் அறத்தை மீறுவதாலும்,மனித குலம் நோய்களைவிடக் கொடுமையான விளைவுகளைச் சந்தித்து வருகிறது!
“உண்மை என்பது ஓரளவு தான் மக்களை எட்டுகிறது.  பொய்மையும், மூடத்தனமும் பெரும்பான்மையினரை வென்று விடுகிறது” என்ற அரிஸ்டாடிலின் வாக்கு இன்று வரை நிதர்சனமாகவே உள்ளது

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாழ்க்கை என்பது நெளிவு சுளிவுகளோடு ஓடிக் கொண்டிருக்கும் வற்றாத ஜீவநதி போன்றது. நம்மில் நதியின் ஆழம்காணும் ஞானிகளும்; உண்டு; அற்ப உயிர்களையும் இலை தழைகளையும் இழுத்து ஓடும்நதியின் வேகத்தை கரையில் கைகட்டி நின்று வேடிக்கை பார்ப்பவர்களும் உண்டு. நதியின் துள்ளோட் டத்தை ரசானுபவக் கண்களோடு கண்டு காவியம் படைப்பவர்களும் உண்டு. நதியின் பிரவாகத்தைக் கண்டு தம்மை விழுங்கப்போகிற அரக்கனாய் எண்ணி அச்சப்படுபவர்களும் உண்டு. பார்வையும், மனப்பான்மையும் மனித எண்ணங்களை வடி வமைக்கின்றன.
 பரிணாம உலகில் அதிக வலிமையுள்ள பிராணிகளோ, அதிக புத்திசாலிப் பிராணிகளோ வாழவில்லை. மாறுதலுக்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்ட உயிரினம் மட்டுமே வாழ்கிறது. இது டார்வின் பரிணாமக் கொள்கை மூலம் அறிய வந்துள்ள உண்மை. காலமும் சூழ்நிலைகளும், மனித குலத்தைப் புரட்டிப் போட்டு அடித்துத் துவைத்தாலும் மனித குலம் அழிந்துவிடவில்லை. தனக்கு ஏற்றவாறு சூழ்நிலைகளை மாற்றியும், சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றியும் மனிதகுலம் அழிந்துவிடாமல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.
 ‘அனு’ என்பதற்கு ‘அடுத்த’ என்று பொருள். ‘பவம்’ என்பதற்கு ‘பிறப்பு’ என்று பொருள். மீண்டும் மீண்டும் பிறக்கவேண்டும், புதிதுபுதிதாய் பெற வேண்டும் எனும் தூண்டுதலை உடையது ‘அனுபவம்’. அது முற்றுப் பெறாதது. வாழ்வின் மீதான ருசியைத் தூண்டுவது அப்படியில்லாமல் நிறைவை ஏற்படுத்துமாயின் அது அனுபவமல்ல ‘அனுபூதி’. அனுபவங்களை விரட்டிவிட முடியாது. அனுபவங்களைத் தைரியமாய் எதிர்கொண்டால் அவை ஏணிப்படிகளாய், நம்மைச் செதுக்கும் உளிகளாய் அமையும்.
 பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழி பள்ளியில் படித்து உயர்ந்த மதிப்பெண்களோடும், உற்சாகத்தோடும் பாலிடெக்னிக் கல்லூரியில் நுழைந்த ஒரு மாணவன் அனைத்தையும் இழந்த சோகத்துடன் எங்களிடம் அழைத்து வரப் பட்டான். பள்ளியில், பேச்சுப்போட்டிகளில் முழங்கி முதல் பரிசுகளை வென்றவன் இப்போது திக்கித் திக்கிப் பேசும் நிலை. பெற்றோரிடம் சிலவிவரங்கள் கேட்டறிந்த பின் சற்றுநேரம் வரவேற்பறையில் அமர்ந்திருக்கச் சொல்லி அனுப்பிவைத்தோம். மாணவனின் விழிகளின் பின்னே ஏதேதோ குழப்பங்களும் விசித்திரங்களும் ஓடிக் கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. “இந்த ஆண்டு தான் திக்கிப் பேசுவதாக அப்பா அம்மா கூறுகிறார்கள். என்ன காரணம் தம்பி!” என்று மென்மையாக விசாரித்தோம். ‘சரியாக தெரியவில்லை’ என்று ‘ச’ வையும், ‘தெ’வையும் மீண்டும் மீண்டும் திக்கிப் பதிலளிக்க சில நிமிடம் கடந்தது. ‘முதல்முறையாக எப்போது திக்கினாய்’? ஞாபகப்படுத்திச் சொல்!” என்றோம். வகுப்பில் சேர்ந்த இரண்டாம்நாளே என்னை எழுப்பி ஆங்கிலத்திலேயே கேள்விகேட்டு ஆங்கிலத்தி லேயே பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார் ஆசிரியர். நான் பயந்து போனேன். உதடு நடுங்கியது. உளறினேன். திணறித் திணறிப் பேச முடியாமல் திக்கினேன். ‘திக்கிப் பேசுறவனா நீ?’ உட்கார் என்றார் ஆசிரியர். அதற்குப் பிறகு பாலி டெக்னிக் கட்டிடத்திற்குள் நுழைந்தவுடனேயே அதிகமாகத் திக்கிப் பேசும்படி ஆகிவிட்டது, என்று நீண்ட நேரம் எடுத்து விளக்கிக் கூறினான்.

 அந்த மாணவனுக்கு ஆங்கில மொழி மற்றும் வகுப்பறை மீதான பயம் நீங்க ‘ராக்ரோஸ்’  என்ற பாச் மலர்மருந்தும், மீண்டும் மீண்டும் திக்தி திக்கிப் பேசும் நிலையை மாற்ற ‘வொயிட் செஸ்ட் நட்’  என்ற மலர் மருந்தும் அளித்தோம். ஆங்கில மொழியை ஒரு சில மாதங்களில் கற்றுக்கொள்ளலாம் என்பது உட்பட சில ஆலோசனைகளும் வழங்கினோம். பெற்றோரின் அணுகுமுறையில் என்ன மாற்றம் தேவை என்பதை அவர்களிடம் எடுத்துரைத்தோம். முதல் மாதச் சிகிச்சையிலேயே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இரண்டாவது மாதச் சிகிச்சையில் திக்கிப்பேசும் நிலை முற்றிலும் மாறி இயல்பாகப் பேசத் துவங்கினான்.
 இங்கே ஓர் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டியுள்ளது. ‘தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை’ என்ற பழமொழியில் உண்மையின் சதவீதம் குறைவு. பெற்றோரின் நற்குணங்களும், திறன்களும் பிள்ளையிடம் அப்படியே அமைந்து விடாது. மேதைகளின் பிள்ளைகள் ஏன் மேதைகளாகவில்லை? தற்குறிகளின் பிள்ளைகள் கூட சரித்திரத்தை மாற்றி சாதனை படைத்துள்ளனரே. மேதை, பேதை, தைரியசாலி, கோழை என்று உருவாவதில் சூழ்நிலை சந்தர்ப்பங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. மேலே குறிப்பிட்ட மாணவனை கல்விச் சூழ்நிலை கடுமையாகத் தாக்கியதால் திக்கித் திக்கிப் பேசினான். வீட்டு சூழ்நிலையால் அதனை வெல்ல முடியவில்லை. வேலைக்குச் சென்று திரும்பும் பெற்றோர் பிள்ளைகளுடன் நேரம் செலவிட்டு உறவாட, உரையாட, அன்பு செலுத்த முடியாமல் போய்விட்டது. பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சியில் முக்கிய இடம் வகிப்பது ‘மனப்பான்மை’ (ATTITUDE). அதன் உருவாக்கத்தில் இன்றைய பெற்றோரின் பங்கு குறைந்துகொண்டே வருகிறது.
 “எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும்போதே அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறான்” என்கின்றன உளவியல் மருத்துவ ஆராய்ச்சிகள். சூழ்நிலைகளை எதிர்கொள்கிற, வெற்றி தோல்விகளை சகஜமாக ஏற்றுக்கொள்கிற மனவலிமையை பெற்றோரும் ஆசிரியர்களும் ஏற்படுத்தத் தவறினால் எந்த தேவதூதனும் வந்து பிள்ளைகளைக் காப்பாற்றிவிட முடியாது.
 கிராமத்தில் வாழந்த ஒரு பெண் மணமாகி நகரில் குடியிருந்தாள். கணவர் வியாபார நிமித்தமாக தினமும் காலையில் வெளியூர் சென்று இரவு திரும்புவார். ஒரே ஒரு பையன். அருகிலுள்ள நகராட்சிப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அந்தப் பெண் பலவித உடல்நலப் பிரச்சனைகளோடு சிகிச்சைக்கு வந்தாள். முகத்தில் மூக்கின் மீதும், நெற்றியிலும், கன்னங்களிலும் அடர்நிறத் திட்டுக்கள். முற்றிலும் பசியற்ற நிலை. எதுவும் சாப்பிடப்பிடிக்காமை, தண்ணீர் குடிப் பதில் கூட ஆர்வமில்லை. எது சாப்பிட்டாலும் ஜீரணமாவதில் சிரமம். கால் கை உளைச்சல். தன் நிலையை நினைத்தாலே அழுகை வருதல். இவை அப்பெண்ணின் அறிகுறிகள். ஆங்கில மருத்துவத்தில் இவை போன்ற நோய்க்குறிகளில் சில முக்கியத்துவம் பெறலாம். மேலும் கருவிகள் ரீதியிலான பரிசோதனைகளுக்கு அவளை உட்படுத்தி பின்னர் சிகிச்சை அளிக்கப்படலாம்.
 ஹோமியோபதி மருத்துவத்திலோ, மலர்மருத்துவத்திலோ இத்தகைய அறிகுறிகள் மட்டும் போது மானவை அல்ல. பாதிக்கப்பட்ட நபரை முழுமையாகப் புரிந்து கொள்ளவோ, அவரது நோய்க்குக் காரணமான தனித்துவத்தைக் கண்டறியவோ இவை ஓரளவு தான் உதவும் என்பதால் எங்களின் விசாரணை தொடர்ந்தது.
 அந்தப் பெண்ணின் மன இயல்புகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. அவளது கிராமத்தில் அப்பா அம்மா மட்டுமின்றி சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை, பாட்டி, தாத்தா, அண்ணன், தம்பி என்று ஏராளமான உறவினர் களும் ஒரே குடும்பமாய் வாழ்ந்துள்ளனர். விவசாயக் குடும்பம் - தீபாவளி, பொங்கல் திருவிழா நாட்களில் ஆளுக்கொரு பரிசாய் அவளைச் சந்தோசப்படுத்துவார்கள். கூடி விளையாட பல குழந்தைகள் இருந்தார்கள். விதவிதமாய் பலகாரங்கள் கிடைத்தன. அழுதவுடன் கண்ணீ ரைத் துடைக்க பலகரங்கள் இருந்தன. அவளது மனமோ வானவில் பரவிய வானமாய் விரிந்து வளர்ந்தது. கள்ளங்கபடம், சூதுவாது ஏதும் தெரியாது.
 வீட்டின் பின்பக்கம் கட்டியிருக்கும் மாடு கன்றுகள் ஏதேனும் இரவு நேரங்களில் கத்திக் கொண்டிருந்தால் அவள் விழித்துக் கொள்வாள். கொல்லைப்புற கதவு திறந்து கன்றின் அருகில் சென்று வாஞ்சையோடு தடவிக் கொடுத்து அமைதிப்படுத்திய பின் தான் படுக்கைக்குத் திரும்புவாள். எளிய உயிர்களைக் கூட நேசித்தாள்.


 இப்போது மணமாகி நகரில் தனிக்குடித்தனம் செய்கிறாள். சில மாதங்களுக்கு முன்பு வரை மாமனார்,மாமியார்,நாத்தனார்,கொழுந்தன் போன்றோர் அவளுடன் சேர்ந்திருந்த வரைக்கும் சந்தோஷமாக இருந்தது. கொழுந்தனுக்கு திருமணமாகி வேறு வீட்டுக்குப் போனபோது எல்லோரும் போய்விட்ட பின்புதான் அவளுக்கு பிரச்னை. கணவர் பகலில் இருப்பதில்லை. பையன் பள்ளிக் குப் போய்விடுவான். தனிக்குடித்தனமும், தனிமையும், நிராகரிப்பும் அவளைத் துயரப்படுத்தி வருகின் றன. தனிக் குடித்தனமும், தனிமையும் மட்டுமே சொர்க்கத்தை கொண்டு வரும் என்றும் நம்பும் இன்றைய உலகில் இப்படியொரு பெண்ணா? என்ற ஆச்சரியப்பட வைத்தது.
 அவளுக்கு வீட்டுவேலைகளால் பிரச்னை ஏற்படவில்லை. பிள்ளையால், உறவினர்களால் உரசல் ஏதும் ஏற்படவில்லை. கணவரால் காயப் படுத்தப்படவில்லை. பொருளாதார பிரச்னை எழுவில்லை. ஆனாலும் அவளது மகிழ்ச்சி பறிபோய்விட்டது. மனம் நிம்மதியிழந்து விட்டது. உடல் நலமும் கெட்டுவிட்டது. தன் பிரச்னை களைச் சொல்லும் போதே கண்ணீர் வடிக்கிறாள். அவள் அன்புக்காக, உறவினர்களின் அன்புக்காக ஏங்கும் வித்தியாசமான பெண்ணாக தோன்றினாள். அவளுக்கு ‘பல்சடில்லா’ என்ற ஹோமியோபதி மருந்து உயர்வீரியத்தில் கொடுத்தோம். அதனுடன் சிக்கரி, வால்நட், ஹனிசக்கிள் ஆகிய மலர் மருந்துகளை ஒரே மருந்தாக இணைத்து தினமும் மூன்றுவேளை எடுத்துக் கொள்ளுமாறு கூறினோம். அவளது குணநலன்களின் சிறப்புக்களை பாராட்டினோம். நம் பண்புகளை இழந்து விடாமல் இருப்பினும், புதியபுதிய சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதையும் உணரச் செய்தோம்.
 முதல்மாத சிகிச்சை நிறைவு பெற்றுத் திரும்பி வந்தாள். நீண்ட நாள் இருந்த தலைபாரம் பூரணமாக குணமடைந்துவிட்டதாகக் கூறி மகிழ்ந்தாள். (இப்படி ஒரு குறைபாடு இருந்ததாக அவள் முதலில் வந்த போது கூறவில்லை) பசி, ஜீரணம் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள் ளதையும் மனநிலையில் நல்ல நிவாரணம் ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுக் கூறினாள். அவள் நலமடைய 3 மாத காலச் சிகிச்சை தேவைப்பட்டது.
 அந்தப் பெண்ணுக்கு நாங்கள் கூறிய ஆலோசனைகளில் ‘உள்மன பாதிப்புக்களை ஏற்படுத்தும் தொலைக்காட்சி சீரியல்களைப் பார்க்காதீர்கள்’ என்பது முக்கியமான ஒன்று. விதி விலக்காக ஓரிரு சீரியல்கள் சிறப்பாக அமையலாம். ஆனால் பெரும்பாலானவை குடும்பச்சிக்கல். கணவன் கொடுமை, மாமியார் கொடுமை, உறவினர் கொடுமை போன்றவற்றை மிகைப்படுத்தி காண்பிக்கப்படுகின்றன. அல்லது முடைநாற்ற மடிக்கும் மூடத்தனங்களை, அறிவுக்கும் அனுபவத்திற்கும் புறம்பான அழுக்குகளை நம் மனங்களுக்குள் புகுத்துகின்றன. அதனால் டிவி நிகழ்ச்சி களில் பயனுள்ள ஒரு சிலவற்றைத் தவிர பிறநேரங் களில் அறிவுப்பூர்வமான வேறு விசயங்களில் ஈடுபடுமாறு கூறினோம்.
 இன்றைய வாழ்க்கைச் சூழலில் மன அடிப்படையிலான நோய்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. மன அழுத்தம் காரணமாக ஒற்றைத் தலைவலி, அஜீரணம், தூக்கமின்மை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, எக்சிமா சோரியாசிஸ் போன்ற கடுமையான தோல் நோய்கள், ஆண்மை, பெண்மைக் குறைபாடுகள், குடற்புண், நீரிழிவு, புற்றுநோய், கர்ப்பகாலச் சிக்கல்கள் போன்றவை தோன்றி வளர்ந்து மருத்துவ உலகுக்கு சவாலாய் நிற்கின்றன.
 உலகம் முழுவதும் மன அழுத்த நோய் சுமார் 35 கோடிப் பேர்களைப் பாதித்துள்ளது. மனஅழுத்தம் காரணமாக பெங்களூரில் வசிப்பவர் களில் ஒரு லட்சம் பேர்களில் 35 பேர்கள் தற் கொலை செய்து கொள்வ தாகப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மாநகரின் அசுர வளர்ச்சிற்கேற்ப மனித மனங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. வேலையின்மை அல்லது வேலைப்பளு, அதிகநேர வேலை, பணிகளில் போட்டி, நேரந்தவறிய உறக்கம், உணவு, பணி பாதுகாப்பின்மை, வருமானத்திற்கு மிஞ்சிய செலவு, கடன் மூலம் வீடு, வாகனம், ஆடம்பர வாழ்வு, தவணைக் கடன்களும் வட்டிகளும் மிரட்டும் நிலை, மிகக் குறைந்த நேரமே வீட்டில் இருக்கும் நிலை, துணையுடன், பிள்ளைகளுடன் எந்திரமயமான உறவு, விரும்பத்தகாத தனிமை போன்ற நவீன வாழ்வின் சாபக்கேடுகளாய் அமைந்துவிட்ட பல காரணிகள் மனஅழுத்தத்தை அதிகரித்து நோய்களை உற்பத்தி செய்து வாழ்க்கை நீரோட்டத்தில் இருந்து மனிதர்களை அன்னியப்படுத்தி விடுகின்றன.
 சகமனிதர்கள் மீதான அன்பும், அக்கறையும், சமூகம் சார்ந்த நற்சிந்தனைகளும் விலகிச் சுய நலமும் பொருளியியல் வேட்கையும் முன்னிற்கும் போது ஒவ்வொரு மனித மனமும் இறுகி உறைந்து போகிறது. வாழ்க்கை என்பது “பொருள் வேட்டை” என்று தவறாய் கருதி இயங்கினால் ஏமாற்றம், பயம், எரிச்சல், அவமானம், நிராகரிப்பு, பேரிழப்பு போன்ற விதவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். புகையும், மதுவும் முறைகேடான செக்ஸýம் இவற்றைத் தீர்த்துவிடாது. மாறாக மனஅழுத்தம் கடினமாகும். சிகரெட்டிலுள்ள நிகோடின் என்ற நச்சுப்பொருளுக்கு மனஅழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

 வறுமையாலும், பஞ்சங்களாலும், போர்களாலும் ஏற்படும் மனநலப் பாதிப்புகள் ஒருபுறமும், வாழ்வியல் சீர்கேடுகளால், தவறான மனப்பான்மைகளால், எதிர்நிலை அணுகுமுறை களால் தெளிவற்ற வாழ்க்கைப் பயணத்தால் ஏற்படும் மனஅழுத்தங்கள் மறுபுறமும் மனித சமூகத்தை ஆட்டி அலைக்கின்றன. தனிமனித மனங்களைத் தாக்கும் சமூக பொருளாதாரப் பின்புலங்களைச் சீரமைப்பது மாபெரும் பணி. அதற்கு காலம் பிடிக்கும்.
 ஆனால், தனிமனிதர்கள் தமது மனஅழுத்தத்தை நீண்ட காலம் அனுமதிக்கக்கூடாது. விளைவுகள் விபரீதமாகி விடும். மனஅழுத்தம் உண்டாவதற்கு சூழ்நிலை காரணம் ஒரு பகுதியும் நாம் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது பெரும்பகுதியும் நிர்ணயிக்கின்றன. மன அழுத்தம் உண்டாக்கும் காரணிகளை முற்றிலு மாய் ஒழிப்பது இயலாது. நம் மனதைத் திறமை யாகக் கையாள்வதன் மூலமாக மனஅழுத்தச் சேற்றில் மூழ்கி விடாமல் தற்காத்துக் கொள்ளமுடியும்.
அதற்கு உதவக் கூடிய சில வழிமுறைகள்
(1) அன்பும் நேசமும் பண்பும் நிறைந்த மனநிலை. (2) மகிழ்வூட்டும் சிந்திக்க தூண்டும். நல்வழி காட்டும் நூல்கள் வாசிப்பு (3) முறையான உணவு, உறக்கம், உடற்பயிற்சி, பாலுறவு (4) வாழ்க்கைத் துணையுடன், நண்பர்களுடன், குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசிப் பழகுதல். (5) பொருளாதாரத் தன்னிறைவு மட்டுமே வாழ்க்கை எனும் கருத்தை மாற்றி வாழ்வின் எல்லா சிறப்புகளையும் உணர்தல் (6) தேவையற்ற பயம், பதட்டம், கவலை, குழப்பம் ஏற்பட்டு துன்பப்படுத்துமாயின் கவனமாய் அதைக் கையாளுதல், தேவையெனில் பாச் மலர் மருத்துவம் ஹோமியோபதி போன்ற முழுமனிதனையும் நலப்படுத்தும் மருத்துவத்தை நாடுதல்.
 எத்தனையோ மனங்களைக் கரை சேர்த்த கவியரசு கண்ணதாசனின் பாடல் நமக்கு கலங்கரை விளக்கமாய் ஒளிர்கிறது.

 “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
 
வாசல்தோறும் வேதனை இருக்கும்
 
வந்த துன்பம் எதுவென்றாலும்
 
வாடிநின்றால் ஓடுவதில்லை.
 
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
 
இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்
”