Sunday, January 5, 2014

நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள்---Dr. S. வெங்கடாசலம்


 மனித ஆற்றல்களில் மகத்தானது நினைவாற்றல். நினைவுத்திறன் என்பது மனிதனின் அரிய சொத்து, மனித குலத்தின் அனைத்து அறிவுகளுக்கும் அடிப்படை தனிமனித ஆளுமை மலர்ச்சிக்கும் முழுமைக்கும் நினைவுத்திறனே ஆதாரம்.
நினைவாற்றலே இல்லாத, நினைவாற்றலை முற்றிலும் இழந்த மனித வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பதுகூடக் கடினம். ஞாபக சக்தி எனப்படுவது. மனிதன் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும் செயல்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இயலும்.ஞாபக மறதிஎனும் பலவீனம், அனுபவம் இல்லாத மனிதன் உலகில் யாரும் இருக்க முடியாது.

திருக்குறளை ஒப்பித்தவரானாலும், உலக நாடுகள், சரித்திர நிகழ்வுகள், ஆயிரக்கணக்கான பெயர்கள் என எதையும் தலைகீழாகச் சொல்பவரானாலும் அவர்களுக்கும் ஒரு குறிப்பிட்டளவு மறதி இருக்கவே செய்யும். (தளிர்நடைக் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியோர் வரை) மறதி இல்லாத மனிதர் இல்லை. மனிதனுக்கு மனிதன் மறதியின் அளவுகளும், தன்மைகளும், பாதிப்புகளும் மாறுபடும். மறதிகள் பலவிதம்.சிலர் பழகிய மனிதர்களின் பெயர்கள் அல்லது முகங்கள் அடிக்கடி மறந்து விடுகின்றனர். சிலர் பொருட்களின் பெயர்களை மறந்து விடுகின் றனர். சிலர் தம் உடைமைகளை, பொருட்களை எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுகின்றனர். சிலர் செய்ய வேண்டிய முக்கியக் கடமைகளைக் கூட மறந்து விடுகின்றனர். சிலர் படித்த நூல்களை, நூலிலுள்ள முக்கிய கருத்துக்களை மறந்து விடுகின்றனர். சிலர் கடந்த கால விஷயங்களை மறந்து விடுகின்றனர்.
சிலர் நிகழ்காலத்தில் சிறிது நேரத்திற்கு முன் நடந்தவைகளைக் கூட மறந்து விடுகின்றனர்.உலகில் நிலவும் சகல தேசத்து நாட்டுப் புறக் கதைகளிலும் மறதி நாயகர்களைப் பற்றிய கதைகள் ஏராளம் இருக்கின்றன. விசித்திரமான மறதிப் பேர் வழிகளின் நடவடிக்கைகளை கவனித்தால் சிரிப்பும் அனுதாபமும் சேர்ந்தே பிறக்கும்.
விஞ்ஞானி ஐன்ஸ்டின் தனது நண்பரின் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நிறைவடைந்து விருந்தினர்கள். எல்லோ ரும் விடைபெற்றுச் சென்ற பிறகும் ஐன்ஸ்டின் மட்டும் இருக்கையில் அமர்ந்தபடி எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். நேரம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஐன்ஸ்டின் எழுந்து செல்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. நண்பர் யோசித்தார் நீங்கள் உங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்என்று எப்படிக் கூற முடியும்? “அடடா நேரமாகிவிட்டது போலிருக்கிறதே!என்றார். அதனைக் கேட்ட ஐன்ஸ்டின் ஆம் நண்பரே நேரமாகிவிட்டது! இன்னும் நீங்கள் புறப்படவில்லையா? குடும்பத்தோடு என் வீட்டிலேயே இருக்கிறீர்களே?” என்றார்.

நண்பர் அதிர்ச்சியடைந்து உண்மையை விளக்கி ஐன்ஸ்டினின் மறதியைக் கலைத்து நிஜத்தை நினைவூட்டி அனுப்பி வைத்தார். சராசரி மனிதர்கள் முதல் தலைசிறந்த மனிதர்கள் வரை நினைவாற்றல் குறைபாடு இல்லாத மனிதர்கள் கிடையாது.மறதி எனும் நுட்பமான பிரச்சனை பெரும் பாலும் மனநலத்தோடு தொடர்புடையது. இது குறித்து உளவியல் நிபுணர்கள் மறதிக்கான சில முக்கிய காரணங்களை சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆர்வமின்மை, முயற்சியின்மை,தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணம், பயம், அதிர்ச்சி, மனச்சோர்வு, துக்கம், வெறுப்பு போன்ற உணர்ச்சி மற்றும் மனபாதிப்புகள், மன ஒருமையின்மை, கவனக்குறைவு, தப்பிக்கும் மனோபாவம் (Escapist Tendency)கடந்த காலச் சிந்தனைகளில் அல்லது எதிர்காலக் கனவுகளில் மூழ்குதல்.புகை, மது, போதைப் பழக்கங்கள்,உடல்நலக் குறைபாடுகள், உடல்நோய்கள்(குறிப்பாக தொற்றாத வகை நோய்கள் - வலிப்பு, ரத்தசோகை, உயர் (அ) குறை தைராய்டு சுரப்பு, மாதவிடாய் நிற்கும் கால ஹார்மோன் பிரச்ச னைகள்)இத்தகைய காரணங்கள், பின்னணிகள், சூழ்நிலைகள் சிறுவயதினரிடம் நினைவுக் குறைவை பலவீனத்தை (memory weakness) ஏற்படுத்துகின்றன. இளம் பருவத்தில், நடுத்தரவயதில் அதிகளவு மறதியை ஏற்படுத்துகின்றன.
முதுமையில் பேரளவிலான மறதியை, நினைவு அழிவை ஏற்படுத்துகின்றன. அத்தகைய முளை பாதிப்பினை Amnesia என்றும், Dementia என்றும், Alzheimers Disease என்றும் மருத்துவ உலகம் வகை பிரிக்கின்றன.உலகின் தலைசிறந்த அதியற்புத கணிணி மனித மூளையே.

இதனுள் நம்புவதற்கரிய வகையில் நினைவுகள் பதிந்துள்ளன. மூளையின் கோடானு கோடி செல்கள் மனிதன் விழித்துள்ள போதும் தூங்கும் போதும். இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அவை எத்தனை எத்தனையோ விஷயங்களை பலவிதங்களில் பதிவு செய்து கொண்டும் அசைபோட்டுக் கொண்டுமிருக்கின்றன. வாழ்நிலை, சூழ்நிலை, உடல்நிலை, மனநிலைக் காரணங்களால் நினைவுத்திறனில் சரிவு ஏற்படுகிறது. இப்பிரச்சனை வயது பார்த்து வருவதில்லை. முதுமையில் பல்வேறு உடலியல் காரணங்களால் மறதி சற்று அதிகமாக இருக்கலாம்.
ஆயினும் எல்லா வயதினருக்கும் மறதி ஏற்படக் கூடும். இருப்பினும் மறதி அல்லது ஞாபக சக்திக் குறைபாடு என்பது மாணவர்களோடும், பாடங்களோடும் மட்டுமே தொடர்புடை யவையாகக் கருதப்படுகிறது.ஒரு மாணவருக்கு ஆர்வம், விருப்பம் இருந்தாலும் இல்லா விட்டாலும், புரிந்தாலும், புரியா விட்டாலும் எல்லா பாடங்களையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்ப்பார்க்கின்றனர். இன்றைய கல்விமுறையில் மாணவரின் இயற்கையான விருப்பங்களும், திறன்களும், படைப்பாற்றலும் பரிமளிப்பதற்குப் பதிலாக மழுங்கடிக்கப்படுகின்றன. கல்வி என்பது மாணவரின் ஆளுமையை மலரச் செய்து முழுமை பெறச் செய்ய வேண்டும் எனும் விவேகாநந்தரின் வழி காட்டுதலை நமது கல்வி நிறுவனங்கள் தூர எறிந்துவிட்டன. மாணவரை மார்க் வாங்கும் எந்திரமாக - விடை எழுதும் எந்திரமாக - உருப்போடும் எந்திரமாக மாற்றி விட்ட பெருமை நம் கல்விக்கு உண்டு.இதனால் கோடானுகோடி சிறுவர்களின், இளையவர்களின் இயல்பான திறன்களும், உற் சாகத் துடிப்புகளும் பாடநூல்களுக்குள் புதைக்கப் பட்டுவிட்டன.
சில மாதங்களுக்கு முன் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவரது தாய் அழைத்து வந்தார். ஐந்தாம் வகுப்புவரை நன்கு படித்ததாகவும் தற்போது மதிப்பெண்கள் குறைந்து விட்டதாகவும் சரித்திரப் பாடத்தில் தோல்வியடையுமளவு மதிப்பெண் குறைந்து விட்டதாகவும் வருத்தத்துடன் குற்றம் சாட்டினார்.

அந்தச் சிறுமியின் உண்மையான பிரச்சனைகளை விசாரித்து அறிவது சிரமமாக இருந்தது. கவனக் குறைவு பிழைகளும், மறதியும் விளையாட்டுபுத்தியும் தான் முக்கியமான பிரச்சனைகள் என்பதாக தாய் கூறினார். அச்சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த வித குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்பட வில்லை.ஒவ்வொருமுறை அச்சிறுமி வரும்போதும் மதிப்பெண் குறைவுக்கான காரணங்களைக் கண்டறிய முயன்று படிப்பதில் ஆர்வமின்மை மன நிலையை மட்டுமே அறிய முடிந்தது. அவளது தாய் பயந்து கொண்டிருந்த அரையாண்டுத் தேர்வு முடிந்த பின் ஒருமுறை அச்சிறுமியை மிகுந்த மகிழ்ச்சியோடு அழைத்து வந்தார். இம்முறை சரித்திரத்தில் 90சதம் மதிப்பெண் பெற்றிருப்பதாகக் கூறினார்.
அச்சிறுமி எந்தவிதப் பூரிப்போ, மலர்ச்சியோ முகத்தில் காட்டாமல் வழக்கம்போல அமர்ந்திருந்தாள். அவளிடம் இந்தளவு மதிப்பெண் அதிகம் பெற என்னகாரணம்? முன்பை விட கூடுதல் நேரம் படித்தாயா? கூடுதல் நேரம் எழுதிப்பாத்தாயா? என்று விசாரித்த போது, இம்முறை அவளால் சரியாகக் காரணத்தை கூறி விட முடிந்தது. “History Missஐ மாற்றி விட்டார்கள். இந்த மாதம் புதுசா ஒரு சார் History எடுத்தாங்க. அந்த மிஸ்ஸை எனக்குப் பிடிக்காது. திட்டிக் கிட்டே இருப்பாங்க. சிரிக்கவே மாட்டாங்க. அவங்க பாடம் நடத்துவதும் புரியவே புரியாது. இப்போது வந்திருக்கும் புது சார் பிரியமா இருக்கிறார் திட்டமாட்டார்.இவர் சொல்லித் தர்றது நல்லா புரியுது. அதனால பரிட்சையில் நல்லா எழுத முடிஞ்சது.என்று கூறினாள்.
இவளுக்கு இது வரை அளித்த சிகிச்சை நிறுத்தப்பட்டது. தாய்க்கு சில ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இச்சிறுமியின் மதிப்பெண் குறைவுக்கு, தோல்விக்கு அவளது கவனக்குறைவும், ஞாபக குறைவும் காரணம் என்று கருதியது பெரியவர்களாகிய நமது அறியாமை அல்லவா? குறிப்பிட்ட ஆசிரியர் மீது வெறுப்பு ஏற்படும் போது அவரது பாடநூல் மீதும் வெறுப்பு படர்கிறது. இதுபோல் வெவ்வேறு எண்ணற்ற காரணிகளால் நமது மாணவச்செல்வங்கள் பிணைக்கப்பட்டுள்ளனர்.வினோதமான ஒருபோட்டி குறித்த கதையொன்று கேளுங்கள்.
ஓர் ஆடும் அதற்கு ஒரு மாதத்திற்கான தீனியும் தரப்படும். தினசரி அந்த தீனியைக் கொடுத்து ஆட்டினைப் பராமரிக்க வேண்டும். 1 மாதம் கழித்து ஆட்டின் எடை முன் பிருந்ததை விடக் குறைவாக இருக்க வேண்டும். அப்படி வளர்ப்பவருக்கு பரிசுஎன்று அறிவிக்கப் பட்டது. பலரும் கலந்து கொண்டனர். ஆனால் மாத இறுதியில் தோற்றுவிட்டனர்.
ஒரே ஒரு நபர் மட்டும் ஆட்டிற்கு தினமும் தீனி கொடுத்து வளர்த்து வந்த போதிலும் கடைசியில் எடை குறைந்திருப்பதை நிரூபித்து வெற்றி பரிசினைத் தட்டிச் சென்றார். எல்லோரும் ஆச்சரியத்தால் வாய்பிளந்தனர். இது எப்படி முடிந்தது?” என்று அவரிடம் விசாரித்தனர். இதற்காக நான் ஒன்றும் சிரமப்படவில்லை. ஓரிடத்தில் ஆட்டைக் கட்டி னேன். அதற்கு நேர், எதிரே ஓர் ஓநாயைப் பிடித்துக் கட்டிவைத்தேன். ஆட்டிற்குத் தேவையான தீனியை தினமும் கொடுத்தேன்.ஆடு பயந்து பயந்துதின்றது. அதனால் சாப்பிட்டது உடலில் சேரவில்லை என்றார்.ஆம் நண்பர்களே ! நம் பிள்ளைகளும் இதே நினையில்தான் தத்தளிக்கின்றனர். அவர்களின் மனங்களைக் கலங்கடித்து. மார்க் பெற எண்ணும் முயற்சிகள் அதனால்தான் தோற்றுப் போகின்றன.
தாமதமாக கற்கும் மனநிலை, எழுதுவதில் உச்சரிப்பதில் வாசிப்பதில் தவறிழைத்தல் போன்ற வற்றையும் மாணவரின் இயல்பு, தேவை, பயம், குழப்பம், கவலை, திறமை போன்றவற்றையும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் நெருக்கமாகக் கண்டறிதல் அவசியம்.
கற்பதில், குணநலனில் மாணவரின் பிரச்சனைகள் என்ன என்பதை அக்கறையோடு புரிந்து, பரிவோடு புரிய வைத்து நட்போடு திருத்தினால் மாணவர்களின் மனங்களை வெற்றி கொள்ள முடியும். மாண வர்களையும் வெல்லச் செய்ய முடியும்.
கிராமங் களிலிருந்து பயில வரும் மாணவர்கள் மற்றும் பின் தங்கிய வாழ்க்கைச் சூழல் களும், தாழ்த்தப் பட்ட பகுதியைச் சார்ந்த மாணவர்களின் பிரச்சனைகளும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் வீட்டுப் பிள்ளைகளின் பிரச்சனைகளும் வெவ்வேறானவை. வாகன வசதியின்றி தூரத்திலிருந்து கல்வி நிலையம் வந்து போகும் மாணவர்கள் ஏராளம். இவர்கள் புயல், மழை, வெயில் எதையும் பொருட்படுத்தாமல் வரவேண்டும்.
வீடுகளில் அடிப்படை வசதிகள் இருக்காது. கழிப்பிடம், மின்சாரம், சுகாதார வசதிகள், சத்தான உணவுகள் எதுவும் இருக்காது. இவர்களை வறுமைக் கோடும் சமூக பொருளாதாரப் பிரச்சனைகளும் இறுக்கித் துன்புறுத்தும். பல பெற்றோர் எழுத்தறிவற்றவர்களாய் பிள்ளைகளின் சிரமம் அறிந்து உதவ முடி யாதவர்களாய் டியூசன் அனுப்ப முடியாதவர்களாய் இருப்பார்கள். சிறப்புக் கவனமும், உண்மையான அக்கறையும் காட்டப்பட வேண் டிய இவர்களை மக்குகள்’ ‘ஞாபக மறதிப் பேர் வழிகள்என்று குற்றம் சாட்டி ஒதுக்குவது துரதிருஷ்டவசமானது.
ஹோமியோபதி மருத்துவர்கள் எந்த ஒரு மாணவரின் கல்விப் பிரச்சனையையும் ஆய்வு செய்யும்போது மாணவரின் கவனக்குறைவு’ ‘ஞாபகச் சக்திக் குறைவுஎன்று மட்டும் பொதுப்படையாக அணுகுவதில்லை அவரது மனநிலை, உடல்நிலை, விருப்பு, வெறுப்பு, கடந்த கால நோய்கள், பெற்றோர் உடன் பிறந் தோர் பற்றிய விவரங்கள், குடும்பப் பின் னணி, வகுப்பறைச் சூழல் என்று பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து பிரச்சனைக ளின் மையப் புள்ளியைக் கண்டறிவார்கள். அதன் அடிப்படையில் ஆலோசனை களும் சிகிச்சைகளும் வழங்குவார்கள்.
சிலமாணவர்களுக்கு நினைவாற்றல் அபாரமாக அமைந்திருந்தும் அவர்களது இயல்பும் சுபாவமும் படிப்புடன் காலகதியோடு ஒத்துப் போகாமல் அமைந்துவிடும். அன்றாடம் சிறிது நேரம் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளாமல் தேர்வு நேரங்களில் மட்டும் விழுந்து விழுந்து படித்து மூச்சுத் திணறுவார்கள். இதனால் உடல்நலமும் மனநலமும் கெடும்.
ஓர் இளைஞர் நன்கு வளர்ந்த பசுமாடு ஒன்றைத் தூக்கி மார்பில் அணைத்து ஊரைச் சுற்றி வந்தார். ஊர்காரர்கள் வியந்து இவ்வளவு பெரிய பசுவை உன்னால் எப்படியப்பா தூக்க முடிந்தது? என்று கேட்டனர்.இது கன்றாக இருந்த நாளிலிருந்தே தினம் தினம் தூக்கித் தூக்கிக் கொஞ்சுவேன் விளையாடுவேன். அது பழகிவிட்டது. வளர்ந்து கனம் கூடினாலும் இப்போது எளிதில் தூக்க முடிகிறது. என்று இளைஞர் பதிலளித்தார்.
பள்ளிப் பாடங்களும் படிப்புகளும் அப்படித்தான். தினமும் படித்துவந்தால் மொத்த கனம் குறையும். ஒருவருடப் பாடங்களை திடீரென ஓரிரு நாளில் தூக்கிச் சுமக்க முற்பட்டால் மூளை தாங்குமா? 365 நாட்கள் தினமும் சிறிதும் நேரம் உழைப்பதைத் தவிர்த்துவிட்டு மூன்று நாளில் அல்லது மூன்று மணி நேரத்தில் முழு வெற்றி பெறுவது முடிகிற காரியமா?
இன்றைய கல்வி மற்றும் பாடத்திட்டங்கள் குறித்து கவிஞர் வைரமுத்து.....
விதைகளைப் போல் மனங்களில் தூவப்படவேண்டிய பாடங்கள் ஆணிகளைப் போல் அறையப்படுகின்றனஎன்று விமர்சிக்கிறார். 
மற்றொரு இடத்தில் கவிஞர் வைரமுத்து தேர்வு குறித்து கூறும்போது ”மாணவரே இந்தக் கல்வி முறையில் தேர்வுதான் உன் அறிவைக்காட்டும் அடையாளம் என்றால் அதிலிருந்து நீ அங்குலமும் பின்வாங்காதே தேர்வு என்பது தேசிங்குராஜன் குதிரை. அதை நீ அடக்கி விட்டால் அது உனக்குப் பொதி சுமக்கும் கழுதை” என்று உத்வேகமூட்டுகிறார்.
ஹோமியோபதியில் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவரவர் தேவையறிந்து நினைவுத்திறனை மேம்படுத்த, மனதை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்க, சுய நம்பிக்கையை பெருக்க, வீண் பயங்களை விரட்ட பலவித மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் முக்கியமான சில மருந்துகள்.

கோனியம் : படிப்பிலோ, தொழிலிலோ மனதை ஒருநிலைப்படுத்த இயலாமை, பிறருடன் பேசாமல் கவலையுடனும் மௌனமாகவும் இருத்தல். பயம், தலைசுற்றல், (மேலும் நீண்ட நாள் பிரமச்சர்யம் இருப்பவர்க்கு, இளம் விதவைகளுக்கு, பாலுறவு ஆசை களை அடக்கியவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனப்பிரச்சனை பிரச்சனைகளுக்கு கானியம் சிறந்த தீர்வு)
ஏதுசா : மனதை ஒரு நிலைப்படுத்த முடியாதளவு மனக்குழப்பம், மனச்சோர்வு, சிறுகுழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஏதுசா மிகவும் நல்லது என்று Dr. குரன்சே சுட்டிக் காட்டுகிறார்.
லைகோபோடியம் : தன்னம்பிக்கை இல்லாமை, ஞாபக சக்தி இழத்தல், தவறாக உச்சரித்தல். எழுதும் போது எழுத்துக்களை அல்லது வார்த்தைகளை விட்டுவிடுதல். தவறான சொற்களை எழுதுதல். தனிமையில் பயம்.
லாக்கானினம் : அதிகமான ஞாபக மறதி. எழுதும் சமயம் முழுச் சொற்களையே விட்டுவிடுதல், கடையில் வாங்கிய பொருட்களை (பணம் கொடுத்து விட்டு) அங்கேயே விட்டுவிட்டு திரும்புதல்.
நக்ஸ் மாஸ்சடா : அதிக ஞாபக மறதி படித்துக் கொண்டிருக்கும் போதே அவற்றை மறந்து விடுதல். பழைய விஷயங்கள் எதுவும் நினைவுக்கு வருவ தில்லை. பழகிய நண்பர்களை, பழகிய தெருக்களைக் கூட சுலபமாக அடையாளம் காண முடியாது.
(அதிக தூக்கம் இரவு பகல் எந்நேரமும் தூங்கி கொண்டிருத்தல் அல்லது தூக்கக் கலக்கம். எந்த நேரமும் சுறுசுறுப்பின்றி மந்தமாக இருத்தல்)குளோனைன் : வினோதமான ஞாபக மறதி. மிக நன்கு அறிந்ததன் வழியை தன் வீதியைக் கூடத் தவற விடுமளவு ஞாபக சக்தி இழப்பு.
ஜெல்சிமியம் : எந்நேரமும் படுத்துக் கிடத்தல். பயம், துக்க செய்தி காரணமாக பாதிப்புகள். படிப்பதற்குப் புத்தகத்தை திறந்தவுடன் தூக்கம் வருதல்.
எயிலாந்தஸ் : ஞாபகசக்தியை படிப்படியாக இழத்தல், பேசிய சம்பவங்களை, நடந்த நிகழ்வுகளை மறந்து விடுதல், அவைகளை எப்போதோ படித்தது போல, கேள்விப்பட்டது போல தோன்றுதல், சின வினாடிகளுக்கு முன்பு பேசியதைக் கூட மறந்து விடுதல்.
பரிடாகார்ப் : ஞாபகமின்மை, எதையும் தாமதமாக கற்றல் அல்லது செய்தல். கவனமின்மை, படிக்க இயலாமை பலமுறை சொல்லித் தந்தாலும் மனதில் நிறுத்த முடியாமை.
எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் சக்தியின்மை.சரியாகப் பேசவும் இயலாமை. (மூளை மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இது ஒப்பற்ற மருந்து) குழந்தைத் தனமான, முட்டாள்தனமான செய்கைகளைக் கொண்ட முதியோர்களுக்கும், ஞாபக மறதி அதிகமுள்ள முதியோர்களுக் கும் பரிடாகார்ப் நன்கு பயன்படும்.
மெடோரினம் : மிக மோசமான ஞாபக மறதி தன் பெயரையே சமயங்களில் மறந்து விடுதல். தன் குடும்பத்தார் பெயர்கள் கூட எளிதில் நினைவுக்கு வராது. மனதில் நினைத்திருந்ததை சொல்லும் போது மறந்து விடுதல். பிறர் சொல்வதை மனதில் வாங்கிக் கொள்ளாமல் என்ன சொன் னீர்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்டல். எழுதும் போது சில எழுத்துக்களை விட்டு விடுதல்.
பாஸ்பாரிக் ஆசிட் : அதிக சுயஇன்பம், அதிக பாலுறவு, அதிக கவலை போன்ற காரணங்களால் உடலும் மனமும் மிகவும் பலவீன மடைந்தவர் களுக்கு ஏற்றது. அதிக சோர்வு காரணமாக அதிக தூக்கம், ஞாபக மறதி, சமீபத்தில் நடந்தவை கூட மறதி. எதையும் நன்கு யோசிக்க முடியாத நிலை, அக்கறையின்மை அலட்சியம் கேள்விக்கு பதில் சொல்லாமை.செலினியம் : நூதனமான ஞாபக மறதி, எவ்வளவு முயற்சி செய்து சிந்தித்தாலும் நினைவுக்கு வராத விஷயங்கள் தூக்கத்தில் (கனவுகளில்) ஞாபகத்திற்கு வந்து விடும்.

அனகார்டியம் : பள்ளி மாணவ, மாணவியர் படித்த பாடங்களை மறந்து விடுதலுக்கு சிறந்த மருந்து.
காலிபாஸ் 6x : ஞாபக மறதி, மூளைச் சோர்வு நரம்பியல் பலவீனம், கண்களின் பலவீனம் போன்ற பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த பலனளிக்கும் மருந்து. 

No comments:

Post a Comment