Sunday, January 5, 2014

நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள்---Dr. S. வெங்கடாசலம்


 மனித ஆற்றல்களில் மகத்தானது நினைவாற்றல். நினைவுத்திறன் என்பது மனிதனின் அரிய சொத்து, மனித குலத்தின் அனைத்து அறிவுகளுக்கும் அடிப்படை தனிமனித ஆளுமை மலர்ச்சிக்கும் முழுமைக்கும் நினைவுத்திறனே ஆதாரம்.
நினைவாற்றலே இல்லாத, நினைவாற்றலை முற்றிலும் இழந்த மனித வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பதுகூடக் கடினம். ஞாபக சக்தி எனப்படுவது. மனிதன் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும் செயல்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இயலும்.“ஞாபக மறதி” எனும் பலவீனம், அனுபவம் இல்லாத மனிதன் உலகில் யாரும் இருக்க முடியாது.

திருக்குறளை ஒப்பித்தவரானாலும், உலக நாடுகள், சரித்திர நிகழ்வுகள், ஆயிரக்கணக்கான பெயர்கள் என எதையும் தலைகீழாகச் சொல்பவரானாலும் அவர்களுக்கும் ஒரு குறிப்பிட்டளவு மறதி இருக்கவே செய்யும். (தளிர்நடைக் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியோர் வரை) மறதி இல்லாத மனிதர் இல்லை. மனிதனுக்கு மனிதன் மறதியின் அளவுகளும், தன்மைகளும், பாதிப்புகளும் மாறுபடும். மறதிகள் பலவிதம்.சிலர் பழகிய மனிதர்களின் பெயர்கள் அல்லது முகங்கள் அடிக்கடி மறந்து விடுகின்றனர். சிலர் பொருட்களின் பெயர்களை மறந்து விடுகின் றனர். சிலர் தம் உடைமைகளை, பொருட்களை எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுகின்றனர். சிலர் செய்ய வேண்டிய முக்கியக் கடமைகளைக் கூட மறந்து விடுகின்றனர். சிலர் படித்த நூல்களை, நூலிலுள்ள முக்கிய கருத்துக்களை மறந்து விடுகின்றனர். சிலர் கடந்த கால விஷயங்களை மறந்து விடுகின்றனர்.
சிலர் நிகழ்காலத்தில் சிறிது நேரத்திற்கு முன் நடந்தவைகளைக் கூட மறந்து விடுகின்றனர்.உலகில் நிலவும் சகல தேசத்து நாட்டுப் புறக் கதைகளிலும் மறதி நாயகர்களைப் பற்றிய கதைகள் ஏராளம் இருக்கின்றன. விசித்திரமான மறதிப் பேர் வழிகளின் நடவடிக்கைகளை கவனித்தால் சிரிப்பும் அனுதாபமும் சேர்ந்தே பிறக்கும்.
விஞ்ஞானி ஐன்ஸ்டின் தனது நண்பரின் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நிறைவடைந்து விருந்தினர்கள். எல்லோ ரும் விடைபெற்றுச் சென்ற பிறகும் ஐன்ஸ்டின் மட்டும் இருக்கையில் அமர்ந்தபடி எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். நேரம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஐன்ஸ்டின் எழுந்து செல்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. நண்பர் யோசித்தார் “நீங்கள் உங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்” என்று எப்படிக் கூற முடியும்? “அடடா நேரமாகிவிட்டது போலிருக்கிறதே!” என்றார். அதனைக் கேட்ட ஐன்ஸ்டின் ஆம் நண்பரே நேரமாகிவிட்டது! இன்னும் நீங்கள் புறப்படவில்லையா? குடும்பத்தோடு என் வீட்டிலேயே இருக்கிறீர்களே?” என்றார்.

நண்பர் அதிர்ச்சியடைந்து உண்மையை விளக்கி ஐன்ஸ்டினின் மறதியைக் கலைத்து நிஜத்தை நினைவூட்டி அனுப்பி வைத்தார். சராசரி மனிதர்கள் முதல் தலைசிறந்த மனிதர்கள் வரை நினைவாற்றல் குறைபாடு இல்லாத மனிதர்கள் கிடையாது.மறதி எனும் நுட்பமான பிரச்சனை பெரும் பாலும் மனநலத்தோடு தொடர்புடையது. இது குறித்து உளவியல் நிபுணர்கள் மறதிக்கான சில முக்கிய காரணங்களை சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆர்வமின்மை, முயற்சியின்மை,தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணம், பயம், அதிர்ச்சி, மனச்சோர்வு, துக்கம், வெறுப்பு போன்ற உணர்ச்சி மற்றும் மனபாதிப்புகள், மன ஒருமையின்மை, கவனக்குறைவு, தப்பிக்கும் மனோபாவம் (Escapist Tendency)கடந்த காலச் சிந்தனைகளில் அல்லது எதிர்காலக் கனவுகளில் மூழ்குதல்.புகை, மது, போதைப் பழக்கங்கள்,உடல்நலக் குறைபாடுகள், உடல்நோய்கள்(குறிப்பாக தொற்றாத வகை நோய்கள் - வலிப்பு, ரத்தசோகை, உயர் (அ) குறை தைராய்டு சுரப்பு, மாதவிடாய் நிற்கும் கால ஹார்மோன் பிரச்ச னைகள்)இத்தகைய காரணங்கள், பின்னணிகள், சூழ்நிலைகள் சிறுவயதினரிடம் நினைவுக் குறைவை பலவீனத்தை (memory weakness) ஏற்படுத்துகின்றன. இளம் பருவத்தில், நடுத்தரவயதில் அதிகளவு மறதியை ஏற்படுத்துகின்றன.
முதுமையில் பேரளவிலான மறதியை, நினைவு அழிவை ஏற்படுத்துகின்றன. அத்தகைய முளை பாதிப்பினை Amnesia என்றும், Dementia என்றும், Alzheimers Disease என்றும் மருத்துவ உலகம் வகை பிரிக்கின்றன.உலகின் தலைசிறந்த அதியற்புத கணிணி மனித மூளையே.

இதனுள் நம்புவதற்கரிய வகையில் நினைவுகள் பதிந்துள்ளன. மூளையின் கோடானு கோடி செல்கள் மனிதன் விழித்துள்ள போதும் தூங்கும் போதும். இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அவை எத்தனை எத்தனையோ விஷயங்களை பலவிதங்களில் பதிவு செய்து கொண்டும் அசைபோட்டுக் கொண்டுமிருக்கின்றன. வாழ்நிலை, சூழ்நிலை, உடல்நிலை, மனநிலைக் காரணங்களால் நினைவுத்திறனில் சரிவு ஏற்படுகிறது. இப்பிரச்சனை வயது பார்த்து வருவதில்லை. முதுமையில் பல்வேறு உடலியல் காரணங்களால் மறதி சற்று அதிகமாக இருக்கலாம்.
ஆயினும் எல்லா வயதினருக்கும் மறதி ஏற்படக் கூடும். இருப்பினும் மறதி அல்லது ஞாபக சக்திக் குறைபாடு என்பது மாணவர்களோடும், பாடங்களோடும் மட்டுமே தொடர்புடை யவையாகக் கருதப்படுகிறது.ஒரு மாணவருக்கு ஆர்வம், விருப்பம் இருந்தாலும் இல்லா விட்டாலும், புரிந்தாலும், புரியா விட்டாலும் எல்லா பாடங்களையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்ப்பார்க்கின்றனர். இன்றைய கல்விமுறையில் மாணவரின் இயற்கையான விருப்பங்களும், திறன்களும், படைப்பாற்றலும் பரிமளிப்பதற்குப் பதிலாக மழுங்கடிக்கப்படுகின்றன. கல்வி என்பது மாணவரின் ஆளுமையை மலரச் செய்து முழுமை பெறச் செய்ய வேண்டும் எனும் விவேகாநந்தரின் வழி காட்டுதலை நமது கல்வி நிறுவனங்கள் தூர எறிந்துவிட்டன. மாணவரை மார்க் வாங்கும் எந்திரமாக - விடை எழுதும் எந்திரமாக - உருப்போடும் எந்திரமாக மாற்றி விட்ட பெருமை நம் கல்விக்கு உண்டு.இதனால் கோடானுகோடி சிறுவர்களின், இளையவர்களின் இயல்பான திறன்களும், உற் சாகத் துடிப்புகளும் பாடநூல்களுக்குள் புதைக்கப் பட்டுவிட்டன.
சில மாதங்களுக்கு முன் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவரது தாய் அழைத்து வந்தார். ஐந்தாம் வகுப்புவரை நன்கு படித்ததாகவும் தற்போது மதிப்பெண்கள் குறைந்து விட்டதாகவும் சரித்திரப் பாடத்தில் தோல்வியடையுமளவு மதிப்பெண் குறைந்து விட்டதாகவும் வருத்தத்துடன் குற்றம் சாட்டினார்.

அந்தச் சிறுமியின் உண்மையான பிரச்சனைகளை விசாரித்து அறிவது சிரமமாக இருந்தது. கவனக் குறைவு பிழைகளும், மறதியும் விளையாட்டுபுத்தியும் தான் முக்கியமான பிரச்சனைகள் என்பதாக தாய் கூறினார். அச்சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த வித குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்பட வில்லை.ஒவ்வொருமுறை அச்சிறுமி வரும்போதும் மதிப்பெண் குறைவுக்கான காரணங்களைக் கண்டறிய முயன்று படிப்பதில் ஆர்வமின்மை மன நிலையை மட்டுமே அறிய முடிந்தது. அவளது தாய் பயந்து கொண்டிருந்த அரையாண்டுத் தேர்வு முடிந்த பின் ஒருமுறை அச்சிறுமியை மிகுந்த மகிழ்ச்சியோடு அழைத்து வந்தார். இம்முறை சரித்திரத்தில் 90சதம் மதிப்பெண் பெற்றிருப்பதாகக் கூறினார்.
அச்சிறுமி எந்தவிதப் பூரிப்போ, மலர்ச்சியோ முகத்தில் காட்டாமல் வழக்கம்போல அமர்ந்திருந்தாள். அவளிடம் இந்தளவு மதிப்பெண் அதிகம் பெற என்னகாரணம்? முன்பை விட கூடுதல் நேரம் படித்தாயா? கூடுதல் நேரம் எழுதிப்பாத்தாயா? என்று விசாரித்த போது, இம்முறை அவளால் சரியாகக் காரணத்தை கூறி விட முடிந்தது. “History Missஐ மாற்றி விட்டார்கள். இந்த மாதம் புதுசா ஒரு சார் History எடுத்தாங்க. அந்த மிஸ்ஸை எனக்குப் பிடிக்காது. திட்டிக் கிட்டே இருப்பாங்க. சிரிக்கவே மாட்டாங்க. அவங்க பாடம் நடத்துவதும் புரியவே புரியாது. இப்போது வந்திருக்கும் புது சார் பிரியமா இருக்கிறார் திட்டமாட்டார்.இவர் சொல்லித் தர்றது நல்லா புரியுது. அதனால பரிட்சையில் நல்லா எழுத முடிஞ்சது.”என்று கூறினாள்.
இவளுக்கு இது வரை அளித்த சிகிச்சை நிறுத்தப்பட்டது. தாய்க்கு சில ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இச்சிறுமியின் மதிப்பெண் குறைவுக்கு, தோல்விக்கு அவளது கவனக்குறைவும், ஞாபக குறைவும் காரணம் என்று கருதியது பெரியவர்களாகிய நமது அறியாமை அல்லவா? குறிப்பிட்ட ஆசிரியர் மீது வெறுப்பு ஏற்படும் போது அவரது பாடநூல் மீதும் வெறுப்பு படர்கிறது. இதுபோல் வெவ்வேறு எண்ணற்ற காரணிகளால் நமது மாணவச்செல்வங்கள் பிணைக்கப்பட்டுள்ளனர்.வினோதமான ஒருபோட்டி குறித்த கதையொன்று கேளுங்கள்.
“ஓர் ஆடும் அதற்கு ஒரு மாதத்திற்கான தீனியும் தரப்படும். தினசரி அந்த தீனியைக் கொடுத்து ஆட்டினைப் பராமரிக்க வேண்டும். 1 மாதம் கழித்து ஆட்டின் எடை முன் பிருந்ததை விடக் குறைவாக இருக்க வேண்டும். அப்படி வளர்ப்பவருக்கு பரிசு” என்று அறிவிக்கப் பட்டது. பலரும் கலந்து கொண்டனர். ஆனால் மாத இறுதியில் தோற்றுவிட்டனர்.
ஒரே ஒரு நபர் மட்டும் ஆட்டிற்கு தினமும் தீனி கொடுத்து வளர்த்து வந்த போதிலும் கடைசியில் எடை குறைந்திருப்பதை நிரூபித்து வெற்றி பரிசினைத் தட்டிச் சென்றார். எல்லோரும் ஆச்சரியத்தால் வாய்பிளந்தனர். “இது எப்படி முடிந்தது?” என்று அவரிடம் விசாரித்தனர். “இதற்காக நான் ஒன்றும் சிரமப்படவில்லை. ஓரிடத்தில் ஆட்டைக் கட்டி னேன். அதற்கு நேர், எதிரே ஓர் ஓநாயைப் பிடித்துக் கட்டிவைத்தேன். ஆட்டிற்குத் தேவையான தீனியை தினமும் கொடுத்தேன்.ஆடு பயந்து பயந்துதின்றது. அதனால் சாப்பிட்டது உடலில் சேரவில்லை என்றார்.ஆம் நண்பர்களே ! நம் பிள்ளைகளும் இதே நினையில்தான் தத்தளிக்கின்றனர். அவர்களின் மனங்களைக் கலங்கடித்து. மார்க் பெற எண்ணும் முயற்சிகள் அதனால்தான் தோற்றுப் போகின்றன.
தாமதமாக கற்கும் மனநிலை, எழுதுவதில் உச்சரிப்பதில் வாசிப்பதில் தவறிழைத்தல் போன்ற வற்றையும் மாணவரின் இயல்பு, தேவை, பயம், குழப்பம், கவலை, திறமை போன்றவற்றையும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் நெருக்கமாகக் கண்டறிதல் அவசியம்.
கற்பதில், குணநலனில் மாணவரின் பிரச்சனைகள் என்ன என்பதை அக்கறையோடு புரிந்து, பரிவோடு புரிய வைத்து நட்போடு திருத்தினால் மாணவர்களின் மனங்களை வெற்றி கொள்ள முடியும். மாண வர்களையும் வெல்லச் செய்ய முடியும்.
கிராமங் களிலிருந்து பயில வரும் மாணவர்கள் மற்றும் பின் தங்கிய வாழ்க்கைச் சூழல் களும், தாழ்த்தப் பட்ட பகுதியைச் சார்ந்த மாணவர்களின் பிரச்சனைகளும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் வீட்டுப் பிள்ளைகளின் பிரச்சனைகளும் வெவ்வேறானவை. வாகன வசதியின்றி தூரத்திலிருந்து கல்வி நிலையம் வந்து போகும் மாணவர்கள் ஏராளம். இவர்கள் புயல், மழை, வெயில் எதையும் பொருட்படுத்தாமல் வரவேண்டும்.
வீடுகளில் அடிப்படை வசதிகள் இருக்காது. கழிப்பிடம், மின்சாரம், சுகாதார வசதிகள், சத்தான உணவுகள் எதுவும் இருக்காது. இவர்களை வறுமைக் கோடும் சமூக பொருளாதாரப் பிரச்சனைகளும் இறுக்கித் துன்புறுத்தும். பல பெற்றோர் எழுத்தறிவற்றவர்களாய் பிள்ளைகளின் சிரமம் அறிந்து உதவ முடி யாதவர்களாய் டியூசன் அனுப்ப முடியாதவர்களாய் இருப்பார்கள். சிறப்புக் கவனமும், உண்மையான அக்கறையும் காட்டப்பட வேண் டிய இவர்களை ‘மக்குகள்’ ‘ஞாபக மறதிப் பேர் வழிகள்‘ என்று குற்றம் சாட்டி ஒதுக்குவது துரதிருஷ்டவசமானது.
ஹோமியோபதி மருத்துவர்கள் எந்த ஒரு மாணவரின் கல்விப் பிரச்சனையையும் ஆய்வு செய்யும்போது மாணவரின் ‘கவனக்குறைவு’ ‘ஞாபகச் சக்திக் குறைவு’ என்று மட்டும் பொதுப்படையாக அணுகுவதில்லை அவரது மனநிலை, உடல்நிலை, விருப்பு, வெறுப்பு, கடந்த கால நோய்கள், பெற்றோர் உடன் பிறந் தோர் பற்றிய விவரங்கள், குடும்பப் பின் னணி, வகுப்பறைச் சூழல் என்று பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து பிரச்சனைக ளின் மையப் புள்ளியைக் கண்டறிவார்கள். அதன் அடிப்படையில் ஆலோசனை களும் சிகிச்சைகளும் வழங்குவார்கள்.
சிலமாணவர்களுக்கு நினைவாற்றல் அபாரமாக அமைந்திருந்தும் அவர்களது இயல்பும் சுபாவமும் படிப்புடன் காலகதியோடு ஒத்துப் போகாமல் அமைந்துவிடும். அன்றாடம் சிறிது நேரம் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளாமல் தேர்வு நேரங்களில் மட்டும் விழுந்து விழுந்து படித்து மூச்சுத் திணறுவார்கள். இதனால் உடல்நலமும் மனநலமும் கெடும்.
ஓர் இளைஞர் நன்கு வளர்ந்த பசுமாடு ஒன்றைத் தூக்கி மார்பில் அணைத்து ஊரைச் சுற்றி வந்தார். ஊர்காரர்கள் வியந்து இவ்வளவு பெரிய பசுவை உன்னால் எப்படியப்பா தூக்க முடிந்தது? என்று கேட்டனர்.இது கன்றாக இருந்த நாளிலிருந்தே தினம் தினம் தூக்கித் தூக்கிக் கொஞ்சுவேன் விளையாடுவேன். அது பழகிவிட்டது. வளர்ந்து கனம் கூடினாலும் இப்போது எளிதில் தூக்க முடிகிறது. என்று இளைஞர் பதிலளித்தார்.
பள்ளிப் பாடங்களும் படிப்புகளும் அப்படித்தான். தினமும் படித்துவந்தால் மொத்த கனம் குறையும். ஒருவருடப் பாடங்களை திடீரென ஓரிரு நாளில் தூக்கிச் சுமக்க முற்பட்டால் மூளை தாங்குமா? 365 நாட்கள் தினமும் சிறிதும் நேரம் உழைப்பதைத் தவிர்த்துவிட்டு மூன்று நாளில் அல்லது மூன்று மணி நேரத்தில் முழு வெற்றி பெறுவது முடிகிற காரியமா?
இன்றைய கல்வி மற்றும் பாடத்திட்டங்கள் குறித்து கவிஞர் வைரமுத்து.....
“விதைகளைப் போல் மனங்களில் தூவப்படவேண்டிய பாடங்கள் ஆணிகளைப் போல் அறையப்படுகின்றன”என்று விமர்சிக்கிறார். 
மற்றொரு இடத்தில் கவிஞர் வைரமுத்து தேர்வு குறித்து கூறும்போது ”மாணவரே இந்தக் கல்வி முறையில் தேர்வுதான் உன் அறிவைக்காட்டும் அடையாளம் என்றால் அதிலிருந்து நீ அங்குலமும் பின்வாங்காதே தேர்வு என்பது தேசிங்குராஜன் குதிரை. அதை நீ அடக்கி விட்டால் அது உனக்குப் பொதி சுமக்கும் கழுதை” என்று உத்வேகமூட்டுகிறார்.
ஹோமியோபதியில் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவரவர் தேவையறிந்து நினைவுத்திறனை மேம்படுத்த, மனதை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்க, சுய நம்பிக்கையை பெருக்க, வீண் பயங்களை விரட்ட பலவித மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் முக்கியமான சில மருந்துகள்.

கோனியம் : படிப்பிலோ, தொழிலிலோ மனதை ஒருநிலைப்படுத்த இயலாமை, பிறருடன் பேசாமல் கவலையுடனும் மௌனமாகவும் இருத்தல். பயம், தலைசுற்றல், (மேலும் நீண்ட நாள் பிரமச்சர்யம் இருப்பவர்க்கு, இளம் விதவைகளுக்கு, பாலுறவு ஆசை களை அடக்கியவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனப்பிரச்சனை பிரச்சனைகளுக்கு கானியம் சிறந்த தீர்வு)
ஏதுசா : மனதை ஒரு நிலைப்படுத்த முடியாதளவு மனக்குழப்பம், மனச்சோர்வு, சிறுகுழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஏதுசா மிகவும் நல்லது என்று Dr. குரன்சே சுட்டிக் காட்டுகிறார்.
லைகோபோடியம் : தன்னம்பிக்கை இல்லாமை, ஞாபக சக்தி இழத்தல், தவறாக உச்சரித்தல். எழுதும் போது எழுத்துக்களை அல்லது வார்த்தைகளை விட்டுவிடுதல். தவறான சொற்களை எழுதுதல். தனிமையில் பயம்.
லாக்கானினம் : அதிகமான ஞாபக மறதி. எழுதும் சமயம் முழுச் சொற்களையே விட்டுவிடுதல், கடையில் வாங்கிய பொருட்களை (பணம் கொடுத்து விட்டு) அங்கேயே விட்டுவிட்டு திரும்புதல்.
நக்ஸ் மாஸ்சடா : அதிக ஞாபக மறதி படித்துக் கொண்டிருக்கும் போதே அவற்றை மறந்து விடுதல். பழைய விஷயங்கள் எதுவும் நினைவுக்கு வருவ தில்லை. பழகிய நண்பர்களை, பழகிய தெருக்களைக் கூட சுலபமாக அடையாளம் காண முடியாது.
(அதிக தூக்கம் இரவு பகல் எந்நேரமும் தூங்கி கொண்டிருத்தல் அல்லது தூக்கக் கலக்கம். எந்த நேரமும் சுறுசுறுப்பின்றி மந்தமாக இருத்தல்)குளோனைன் : வினோதமான ஞாபக மறதி. மிக நன்கு அறிந்ததன் வழியை தன் வீதியைக் கூடத் தவற விடுமளவு ஞாபக சக்தி இழப்பு.
ஜெல்சிமியம் : எந்நேரமும் படுத்துக் கிடத்தல். பயம், துக்க செய்தி காரணமாக பாதிப்புகள். படிப்பதற்குப் புத்தகத்தை திறந்தவுடன் தூக்கம் வருதல்.
எயிலாந்தஸ் : ஞாபகசக்தியை படிப்படியாக இழத்தல், பேசிய சம்பவங்களை, நடந்த நிகழ்வுகளை மறந்து விடுதல், அவைகளை எப்போதோ படித்தது போல, கேள்விப்பட்டது போல தோன்றுதல், சின வினாடிகளுக்கு முன்பு பேசியதைக் கூட மறந்து விடுதல்.
பரிடாகார்ப் : ஞாபகமின்மை, எதையும் தாமதமாக கற்றல் அல்லது செய்தல். கவனமின்மை, படிக்க இயலாமை பலமுறை சொல்லித் தந்தாலும் மனதில் நிறுத்த முடியாமை.
எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் சக்தியின்மை.சரியாகப் பேசவும் இயலாமை. (மூளை மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இது ஒப்பற்ற மருந்து) குழந்தைத் தனமான, முட்டாள்தனமான செய்கைகளைக் கொண்ட முதியோர்களுக்கும், ஞாபக மறதி அதிகமுள்ள முதியோர்களுக் கும் பரிடாகார்ப் நன்கு பயன்படும்.
மெடோரினம் : மிக மோசமான ஞாபக மறதி தன் பெயரையே சமயங்களில் மறந்து விடுதல். தன் குடும்பத்தார் பெயர்கள் கூட எளிதில் நினைவுக்கு வராது. மனதில் நினைத்திருந்ததை சொல்லும் போது மறந்து விடுதல். பிறர் சொல்வதை மனதில் வாங்கிக் கொள்ளாமல் என்ன சொன் னீர்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்டல். எழுதும் போது சில எழுத்துக்களை விட்டு விடுதல்.
பாஸ்பாரிக் ஆசிட் : அதிக சுயஇன்பம், அதிக பாலுறவு, அதிக கவலை போன்ற காரணங்களால் உடலும் மனமும் மிகவும் பலவீன மடைந்தவர் களுக்கு ஏற்றது. அதிக சோர்வு காரணமாக அதிக தூக்கம், ஞாபக மறதி, சமீபத்தில் நடந்தவை கூட மறதி. எதையும் நன்கு யோசிக்க முடியாத நிலை, அக்கறையின்மை அலட்சியம் கேள்விக்கு பதில் சொல்லாமை.செலினியம் : நூதனமான ஞாபக மறதி, எவ்வளவு முயற்சி செய்து சிந்தித்தாலும் நினைவுக்கு வராத விஷயங்கள் தூக்கத்தில் (கனவுகளில்) ஞாபகத்திற்கு வந்து விடும்.

அனகார்டியம் : பள்ளி மாணவ, மாணவியர் படித்த பாடங்களை மறந்து விடுதலுக்கு சிறந்த மருந்து.
காலிபாஸ் 6x : ஞாபக மறதி, மூளைச் சோர்வு நரம்பியல் பலவீனம், கண்களின் பலவீனம் போன்ற பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த பலனளிக்கும் மருந்து. 

தீபம் மாற்றுமுறை மருத்துவமனை-சாத்தூர்















Wednesday, December 25, 2013

மண் தின்னும் குழந்தைகளா? - Dr.S.வெங்கடாசலம்




மண் தின்னும் குழந்தை என்றால் பெற்றோருக்குப் பெரும் வேதனை. மண் மட்டுமன்றி சாம்பல், காகிதம்,கோலப்பொடி, விபூதி, பல்பொடி, குச்சி, சாக்பீஸ், துணிஎன்று உண்ணத்தகாத பல பொருட்களை விரும்பி ருசித்துச் சாப்பிடும் குழந்தைகளை லண்டன் மலர் மருந்துகள் மூலம் சிகிச்சையளித்து விரைவில் மாற்ற முடியும்.

பொதுவாக
 குழந்தைகளுக்கு ஒரு வயதை நெருங்கும் போதிலிருந்து இரண்டு வயது வரை கண்ணில்கண்டதை எல்லாம் எடுத்துப் பார்க்கும் பழக்கமும், கடித்துப் பார்க்கும் பழக்கமும் இருக்கும் அதையும் கடந்து ஒரு சில பொருட்களை விரும்பி ரசித்து ருசித்து சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொண்டு, முறையாக உண்ண வேண்டிய உணவைத் தவிர்த்தால் வளரும் பருவத்தில் உடல்நலக் கேடுகளை உருவாக்கும். இவ்வாறு மண் தின்னும் பழக்கம் PICA என்று அழைக்கப்படுகிறது.
ஐந்து வயதுக்கு உட்பட்டகுழந்தைகளிடமே இப்பழக்கக் கோளாறு அதிகம் காணப்படுகிறது. பெற்றோரின் அன்பு மற்றும் அரவணைப்பின்மை, பாதுகாப்பற்ற உணர்வு, பெற்றோர் உணவூட்டும் பழக்கங்களிலுள்ள குறைபாடுகள்,ரத்தசோகை, மனவளர்ச்சி குறைபாடு போன்றகாரணங்களால் மண் தின்னும் பழக்கம் உருவாகி,வளர்ந்து நீடிக்கிறது.

மேலும்
 அடித்தட்டுவர்க்க ஏழ்மை நிறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளிடம்இப்பழக்கம் ஒப்பிட்டளவில் அதிகம் நிலவுகிறது. அதேபோல் நல்ல மனவளர்ச்சியுடன் உள்ள குழந்தைகள் உணவு அல்லாத இதரப் பொருட்களைத் தின்றாலும் உரிய காலத்தில் நிறுத்தி விடுகின்றனர். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இப்பழக்கத்தை நிறுத்தாமல் தொடர்கின்றனர். 
குழந்தைகளின் தோற்றம் செயல்பாடு, மனநிலைகளுக்கேற்ப, கல்கேரியா கார்ப், சிலிகா, சிகூடா,அலுமினா, பெர்ரம்மெட், நேட்ரம்மூர், சினா,கல்கேரியாபாஸ், நைட்ரிக் ஆசிட், நக்ஸ்வாமிகா போன்ற ஹோமியோபதி மருந்து கள் மண், சாம்பல் தின்னும் பழக்கத்தை மாற்றியமைக்க உறுதியாக உதவும். மலர் மருந்துகளில் வால்நட், வொய்ட்,செஸ்ட்நட் பட், செர்ரிப்பழம், சிக்கரி போன்ற மருந்துகள் குழந்தைகளிடம் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். 

மண்ணும் காகிதமும் தின்னும் பழக்கமுடைய
 நான்கு வயதுச் சிறுமியை என்னிடம் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். அவளுக்கு மலம் மிக இறுகலாகவும் சற்று கருநிறமாகவும் சிரமப்பட்டு வெளியேறுகிறது. ஒவ்வொரு முறை மலம் கழிக்கும் போதும் வலி தாங்காமல் அழுகிறாள். உணவையோ, திண்பண்டங் களையோ விரும்பி உண்பதில்லை. மண் தின்பதும் பேப்பர்களை மென்று ருசித்துத் தின்பதும் எவ்வளவு திட்டி அடித்த போதும் நிறுத்த முடியவில்லை. சில மாத காலம் சிகிச்சை எடுத்தும் பலனில்லை. வளர வளரச் சரியாகி விடும் என்று மருத்துவர்கள் கூறிய வலுவற்ற கருத்தில் பெற்றோருக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

 இந்தக் குழந்தைக்கு ஹோமியோபதியில் நைட்ரிக் ஆசிட் என்ற மருந்தும், மலர் மருத்துவத்தில் செர்ரிப்பழம் மற்றும் வால்நட் போன்ற மருந்துகளும் கொடுக்கப்பட்டது. பத்து நாட்களில் குழந்தையின் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்பட்டது. மேலும் சில நாட்கள் தொடர் சிகிச்சை அளித்தபின் சிறுமி முழு நலம் அடைந்தாள். அவள் இப்போது மண்,காகிதம் திண்பதில்லை. உணவை விரும்பி உண்கிறாள். மலச்சிக்கல் தொந்தரவோ, வலிகளோ இல்லை. பெற்றோருக்கும் நிம்மதி.

மேலும் வளரும் குழந்தைகளில் காணப்படும் பொறாமை,  சந்தோஷம், பயம், தாழ்வுமனப்பான்மை,கோபம், எரிச்சல், பிடிவாதம், மந்தம், சோம்பல், ஞாபகக் குறைபாடு, பிறரைக் குறைகூறும் சுபாவம் போன்ற இயற்கைக்கு மாறான பல்வேறு குணக்கேடுகளையும் மாற்றி குழந்தைகளிடம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குழந்தைகளின் மன ஆற்றல்களை அதிகரிக்கவும் மலர் மருந்துகள்அற்புதமாக பயனளிக்கின்றன. சிறுவர்களிடம் காணப்படும் திருட்டு, புகை, குடிப்பழக்கம் போன்றவற்றையும் மலர் மருந்துகளால் மாற்ற இயலும். குழந்தைகளுக்கு மட்டுமன்றி எந்த வயதின ருக்கும் இம்மருந்துகள் பயன்படும். எதிர்மறையான இயல்புகளை நீக்கி மனநலத்தையும், உடல்நலத்தையும் அளிப்பதே இவற்றின் சிறப்பம்சம்.

Sunday, December 22, 2013

ஸ்கேன் அவசியமா?

உலகமே கணிணிமயமாகிவிட்டது. மருத்துவத்துறையும் எண்ணிலடங்கா தளவு வளர்ச்சிகளை எட்டியுள்ளது. நோய்களையும் அவற்றின் தன்மைக ளையும், வளர்ச்சிப் போக்குகளையும் கண்டறிவதில் எண்ணற்ற கருவி களும் வழிமுறைகளும் வந்து நிறைந்துவிட்டன. அவைகளுள் மருத்துவர் களுக்கு மிக உதவிகரமாக இருப்பது மருத்துவ ஸ்கேனிங் முறை.
ஸ்கேனில் உள்ள வகைகள் 1. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் 2. சி.டி. ஸ்கேன் 3. எம்.ஆர்.ஐ. ஸ்கேன்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கண்ணுக்குத் தெரியாத, காதுகளுக்குக் கேட்காத நுண் ஒலி அலைகளின் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து திரையில் பார்த்து நோய்களைக் கண்டறியப் பயன்படுகிறது. C.T. ஸ்கேன் (Computerised Tomography) என்பது X-rayவை உடலுக்குள் செலுத்தி கம்ப்யூட்டர் மூலம் திரையில் பார்ப்பது. M.R.I. ஸ்கேன் (Magnetic Resonance Imaging) என்பது சக்தி வாய்ந்த காந்தத்தின் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் திரையில் காண்பது. இவைகளில் குறைந்த செலவில் பார்க்கக்கூடியது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகும்.
இந்த அல்ட்ரா சவுண்ட் எனப்படும் ஸ்கேன் முறையில் கெடுதலோ, பக்கவிளைவுகளோ, பின் விளைவுகளோ இல்லை என்று கூறப்படுகிறது. பொதுவில் ஸ்கேன் செய்து நோயினை கண்டறிவதன் மூலம் அது அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நோயா அல்லது மருந்து மாத்திரைகள் மூலம் சிகிச்சையளிக்கக்கூடிய நோயா என்பதை ஆங்கில மருத்துவமானாலும் சரி, மாற்றுமருத்துவங்களானாலும் அவரவர் வரைமுறைகளுக்கேற்ப தீர்மானிக்க உதவுகிறது.

அக்குப்பங்சர், சித்தா, ஆயுர்வேதம் போன்ற மாற்றுமருத்துவ முறைகளின் பூர்வீக அணுகுமுறை என்பது நாடிபார்த்தல் ஆகும். ஹோமியோபதி,பாச் மலர் மருத்துவ முறைகளின் அணுகுமுறை நோய்க்குறிகளை,  நோயாளியின் மனநிலையை ஆராய்தல் ஆகும். ஆயினும் இன்றைய நவீன வாழ்க்கைச்சூழலில் விதவிதமான நவீன சிக்கலான நோய்கள் உற்பத்தியாகின்றன. சற்றே கவனப்பிசகாக, நோய் நிர்ணயம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டாலும், தவறுகள் நேர்ந்தாலும் பெரும்பாதிப்புகளையும் மரணத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
வலதுபக்க வயிற்றுப் பகுதியில் வலிகள் தோன்றும் போது சிறுநீரகக் கல்லால் அவதியா குடல்வால் நோயால் அவதியா அல்லது வேறு பிரச்சனையா என்பதை சரியாகக் கண்டறிய வேண்டும். சிறுநீரகக்கல் நோய் என்றால் கற்களின் எண்ணிக்கை, கற்களின் இருக்குமிடம், அளவு போன்றவை ஸ்கேன் மூலம் அறியமுடியும். யூக அடிப்படையிலான சிகிச்சை பயன்தராது.
வயிறு, கழுத்து (தைராய்டு), கணையம், கர்ப்பப்பை போன்ற திண்மனான எந்த உறுப்பையும் ஸ்கேன் செய்யமுடிகிறது. அல்ட்ரா ஸ்கேன் மூலம் கல்லீரல், மண்ணீரல், பித்தப்பையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அறிய முடியும். பித்தப்பையில் கல், பித்தப்பையில் புற்று, கல்லீரல்,மண்ணீரல் வீக்கங்கள், சுருக்கங்கள், சிறுநீரக பாதிப்பு போன்றவைகளை எளிதில் கண்டறியலாம்.

அனைத்துக்கும் மேலாக கர்ப்பகாலத்தில் அதிகளவு பயன்படுகிறது. தாயின் வயிற்றில் 7வது வாரத்திலேயே (அல்லது 45 நாட்களில்) குழந்தை இருதயத் துடிப்பைப் பெற்று வளர ஆரம்பிக்கிறது. 3 மாதத்தில் குழந்தையின் எல்லா உறுப்புகளும் முழுமையாக வளர்ந்து விடுகிறது. இந்த நேரத்தில் ஸ்கேன் செய்து குழந்தையின் உடலில் உள்ள ஊனம், மூளை வளர்ச்சி ஆகியவற்றைக் கண்டறிய முடியும். சில பெண்களுக்கு கரு கர்ப்பப்பைக்குள் வளராமல் கர்ப்பப்பைக் குழாயில் தங்கி வளரக்கூடும். இதனால் தாய் அபாயகரமான நிலையைச் சந்திக்க நேரிடும். எனவேதான் கர்ப்பிணிகள் 5 மாத காலத்திற்குள் ஒருமுறையாவது ஸ்கேன் செய்வது தவிர்க்கமுடியாதது ஆகிவிட்டது.

கர்ப்பம் தரித்து 45 நாளிலேயே ஸ்கேனில் இரட்டைக் குழந்தைகளைக் கண்டறிந்தால் அவற்றின் வளர்ச்சியைத் தனித்தனியாகக் கண்காணித்து ஆரோக்கியமாக பிறக்கச் செய்வதற்கு மருத்துவ உதவிகள் செய்ய முடியும்.
குழந்தை இல்லாத பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சியை பாலிக்குலர் ஸ்டடி மூலம் அறிந்து சிகிச்சை அளிக்க முடியும். கர்ப்பப்பையில் கட்டிகளோ, இதர வளர்ச்சிகளோ, சினைப் பையில் நீர்மக் கட்டிகளோ இருப்பதால் பெண்களின் மாதவிடாய் செயல்பாடு வெகுவாக பாதிக்கப்படுகிறது. இவற்றை உரிய காலத்திலேயே ஸ்கேன் மூலம் கண்டறிவதும் சிகிச்சை அளிப்பதும் அவசியம். புற்றுக்கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம்.
மஞ்சள் காமாலை நோய் என்பது வைரஸ் தாக்கத்தினால் அல்லது பித்தப்பையில் கல் அடைப்பு ஏற்படுவதால் தோன்றுகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் யூக சிகிச்சையை ரத்தப் பரிசோதனை மற்றும் தவிர்க்க வேண்டும். ஸ்கேன் செய்தல் மிகவும் அவசியம். நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துள்ள நிலையில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு காமாலை வந்திருக்குமானால் மாற்று மருத்துவ முறைகளில் எளிதில் குணப்படுத்த முடியும். ஆனால் பித்தப்பைக் கல்லால் மஞ்சள் காமாலை வந்திருந்தால் அதற்கும் சேர்த்து தீவிர மருத்துவ சிகிச்சையளிக்க வேண்டும். கல் அடைப்பை சரிசெய்ய அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
இதனை அறியாமல் மஞ்சள் காமாலைக்கு தாயத்து கட்டுதல், வேர்கட்டுதல் என செயல்பட்டால் ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடும்.
பொதுவாக கர்ப்பப்பை சம்பந்தமான ஸ்கேன் எடுக்கும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வயிறு நீரால் நிறைந்திருந்தால் நீர் ஊடகமாக செயல்பட்டு அதன் அடியிலுள்ள கர்ப்பப்பை தெளிவாகத் தெரிய உதவுகிறது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் இணைக்கப்பட்டிருக்கும் Probeஎனப்படும் இணைப்புக் கருவியை வயிறு, மார்பு, கழுத்து போன்றவற்றைச் சோதிப்பதற்குத் தகுந்தவாறு மாற்றி அமைத்து உபயோகிக்கப்படுகிறது. இன்றைக்கு அலோபதிக்கு மட்டுமல்ல இதர மாற்று மருத்துவ முறைகளுக்கும் ஸ்கேன் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.
(C.T. ஸ்கேன், M.R.I. ஸ்கேன் உதவியுடன் மூளை, தண்டுவடம், நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய்களின் தன்மைகளை கண்டறியமுடியும். ஆனால் அடிக்கடி இந்தச் சோதனைகள் செய்தால் பாதிப்பு ஏற்படும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் பக்க விளைவுகள் இல்லை)


Wednesday, December 11, 2013

காதல் தோல்விக்கு… ஹோமியோ மருந்துகள்! அதிசயம்! ஆனால் உண்மை!

ஆதலினால் காதல் செய்வீர்! இது கவிவாக்கு.காதல் என்ற சொல் மந்திர சக்தியும்,இனிமையும்,வசீகரமும் உடையது.பாலைவனப் பயணமாய் மானிட வாழ்க்கை தகித்தாலும் காதல் நுழைந்து விட்டால் ஈரநிலமாய்,சுகந்தக் காற்றாய்,தாகம் தீர்க்கும் அருஞ்சுனை நீராய் எல்லாம் மாறிவிடும்.காதலுக்குக் கண்கள் இல்லை-ஆம்! சாதி,மதம்,இனம்,மொழி பேதங்களைப் பூதக்கண்ணாடி அணிந்து உற்றுப் பார்க்கிற கண்கள் இல்லை! இதயத்தால் பார்ப்பது காதல்!இதயத்தால் பேசுவது காதல்!இதயத்தால் வாழ்வது காதல்! ஆம்…காதலுக்குக் கண்கள் இல்லை-இனிய இதயம் உண்டு!


கண்டதும் காதல்!…இது ஆபத்தானது…என்பது வாழ்ந்தோரின் அனுபவ எச்சரிக்கை; ஒரு தலைக்காதல்… இது பரிதாபகரமானது. மனங்களைப் புரியாமல்,மனங்களைப் பரிமாறாமல் பார்த்தவுடன் காதல் பூ எப்படிப் பூக்க முடியும்?அது காதல் அல்ல நண்பர்களே…வெறும் இனக்கவர்ச்சி! நிழலை நிஜமாகக் கருதி விரட்டிப் பிடிக்க முயன்று ஓய்ந்து போகும் அறியாக் குழந்தைகளாய் பல இளைஞர்கள் இனக்கவர்ச்சியைக் காதல் எனக் கருதி…பொய் வாழ்க்கை வாழ்கின்றனர்.இவர்களின் கற்பனைக் காதல்…கானல் நீராய்,காகிதப் பூவாய்,பொய்மான் வேட்டையாய் ஆனதை அறிந்தபின் இதயம் நொறுங்கி நடைபிணங்களாய் ஆகின்றனர்.

நிவேதா,கலைக் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவி.இசை,பாடல்,பேச்சு,நடிப்பு,படிப்பு அனைத்திலும் பிரகாசித்தாள்.நகருக்கு வெளியே அமைந்திருந்த அவளது கல்லூரிக்கு தினமும் நகரப் பேருந்தில் போய்வந்தாள்.பேருந்தில் நிரம்பி வழியும் மாணவ மாணவியரின் கலகல சத்தங்களுக்கிடையில் நிவேதா அமைதிச் சிலையாய் வீற்றிருப்பாள்.முதுகலை மூன்றாமாண்டு மாணவர் சுந்தர் எதிர்பாராத நிலையில் கடித உறை ஒன்றை அவளது கைகளில் திணித்த நாளில் அதிர்ச்சியும் பதட்டமுமாய் செய்வதறியாமல் திகைத்தாள். வீட்டில் யாருமறியா வண்ணம் கடிதத்தைப் படித்தாள்.

வாசனைச் சொற்களால் அவளை வர்ணித்து,காதலிப்பதாக அறிவித்திருந்தான் சுந்தர். நடுக்கமும் பீதியும் குழப்பமும் சூழ்ந்திருந்த போதிலும் அவளது இதயப் பிரதேசத்தில் கடிதச் சொற்கள் இனிய தூறலாய் சிலிர்ப்பை ஏற்படுத்தின. கடிதத்தை ஒளித்துப் பாதுகாத்தாள்.


நிவேதா பலவிதங்களில் திறமைசாலி.காதல் பாடத்தில் மட்டும் அவள் பேதை.அவளைப் புரியமுடியாமல் தவித்தான் சுந்தர். கடிதம் தந்த பின்னர்..அவள் மனம் புண்பட்டு விடக் கூடாது என்றெண்ணி வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த விதத்திலும் அவளை அவன் அணுகவில்லை. நாட்கள் விரைந்தன. கல்லூரி நாட்கள் எனும் கடன்வாங்கிய வசந்தத்தை அவளிடமிருந்து காலம் பறித்து ஒடியது. விண்ணில் பறந்த பறவை வீட்டுச் சுவர்களுக்குள் மட்டுமே சிறகசைத்தது.

சுந்தரின் நிலை என்ன? அவன் இன்னும் தன்னை நேசிக்கிறானா?அல்லது வேறு பெண்ணை நாடிவிட்டானா?இழப்பின் கனத்தால் மனிதன் வலி பெருகிக் கொண்டிருந்த போது இன்னொரு சோகமின்னல் தாக்கி நிலைகுலைய நேர்ந்தது.அவளது அன்புத் தந்தை இரவுப் பயணம் ஒன்றில் இருதயவலி ஏற்பட்டு இறந்து போனார்.அப்பாவின் மரணமும்,அம்மாவின் விதவைக் கோலமும்,ஆண்துணையற்ற வீட்டின் வெறுமையும் வேதனைகளை பன்மடங்காக்கின.

நிவேதாவின் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் துயரிலிருந்து மீண்டு வந்தாள்.உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் தேற்றித்தேற்றி அவள் தனது மிச்சவாழ்க்கைக்குத் தயாராகிக் கொண்டாள். நிவேதா மட்டும் நிம்மதியிழந்து கிடந்தாள். சரியாகச் சாப்பிடுவதில்லை. மலர்ந்த பூவாய் மணம் பரப்பியவள் வாடிவதங்கி உயிரற்று ஒதுங்கிக் கிடந்தாள். மகளின் நிலைகண்டு கவலைக்குள்ளான அவளது அம்மா மருத்துவ உதவி கேட்டு வந்தார். நிவேதாவைத் தனியே விசாரித்த போது அவளது இரட்டை இழப்புக்களின் சோகங்களை உணரமுடிந்தது.


வலிநீக்கி மருந்துகள் எல்லா வைத்திய முறைகளிலும் உண்டு.மனவலியை நீக்கும் மருந்து ஹோமியோபதியில் மட்டுமே உண்டு . நிவேதாவை இழப்புத் துயரின் தாக்குதலிலிருந்து மீட்க, மனரணத்தை ஆற்ற இக்னேஷியா(IGNATIA) என்ற அற்புதமான ஹோமியோபதி மருந்தை அளித்தோம்.வழக்கத்திற்கு மாறாக அன்றிரவு துயரங்களின் அழுத்தம் குறைந்து ஆழ்ந்து தூங்கிவிட்டாள் என்பதை மறுகாலை அவளது அம்மாவின் போன் தகவல் மூலம் அறிந்தோம். ஒரு மாத காலம் கழித்து ஒரு நாள் நிவேதாவைச் சாலையில் சந்தித்தபோது புத்துணர்வோடும் புன்முறுவலோடும் வணக்கம் கூறினாள்.ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரிவதாகத் தெரிவித்து விடைபெற்றாள்.


ஒவ்வொரு மனித வாழ்க்கையும் எண்ணற்ற தோல்விகளை,இழப்புகளை,துயரங்களைச் சந்தித்தே தீரும். அவை ஒவ்வொன்றும் முற்றுப்புள்ளி அல்ல.வாழ்வியல் கடமைகளையும் லட்சியங்களையும் நோக்கிய பயணம் ;எக்காரணத்தாலும் முடமாகிவிடக்கூடாது. ஹோமியோபதி மருத்துவம்மட்டுமே மனிதனின் பிரச்சனையை அவனது மனநிலை, வாழ்நிலை,சூழ்நிலை அனைத்துப் பின்னணிகளோடும் ஆய்வு செய்கிறது. துயரங்களிலிருந்து மனிதனை விடுவித்து வாழச் செய்கிறது. வாழ்க்கையின்
சம்மட்டி அடிகள் தாங்காமல் தற்கொலைக்குத் தயாராகிவிட்ட மனித மனத்தை ஆரம்மெட்(AURUM MET) எனும் ஹோமியோபதி மருந்து மாற்றியமைத்து வாழ வைக்கிறது.காதலில் தோற்று விரக்தியுற்ற,ஏமாற்றமடைந்த(LOVE DISAPPOINMENT)மனங்களை மீட்க இக்னேஷியா மட்டுமல்ல நேட்ரம்முர் பாஸ்-ஆசிட் ஹயாசியாமஸ் மற்றும் பல ஹோமியோ மருந்துகள் உதவுகின்றன.அவரவர் தோல்வியின் துயரத்தின் காரணம்,தன்மைக்கேற்ப இம்மருந்துகள் பயன்படுகின்றன. வாழ்க்கை வாழ்வதற்கே! ஹோமியோபதி மனிதகுலத்தின் வாழ்க்கையைக் காப்பதற்கே!