Thursday, December 5, 2013

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாழ்க்கை என்பது நெளிவு சுளிவுகளோடு ஓடிக் கொண்டிருக்கும் வற்றாத ஜீவநதி போன்றது. நம்மில் நதியின் ஆழம்காணும் ஞானிகளும்; உண்டு; அற்ப உயிர்களையும் இலை தழைகளையும் இழுத்து ஓடும்நதியின் வேகத்தை கரையில் கைகட்டி நின்று வேடிக்கை பார்ப்பவர்களும் உண்டு. நதியின் துள்ளோட் டத்தை ரசானுபவக் கண்களோடு கண்டு காவியம் படைப்பவர்களும் உண்டு. நதியின் பிரவாகத்தைக் கண்டு தம்மை விழுங்கப்போகிற அரக்கனாய் எண்ணி அச்சப்படுபவர்களும் உண்டு. பார்வையும், மனப்பான்மையும் மனித எண்ணங்களை வடி வமைக்கின்றன.
 பரிணாம உலகில் அதிக வலிமையுள்ள பிராணிகளோ, அதிக புத்திசாலிப் பிராணிகளோ வாழவில்லை. மாறுதலுக்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்ட உயிரினம் மட்டுமே வாழ்கிறது. இது டார்வின் பரிணாமக் கொள்கை மூலம் அறிய வந்துள்ள உண்மை. காலமும் சூழ்நிலைகளும், மனித குலத்தைப் புரட்டிப் போட்டு அடித்துத் துவைத்தாலும் மனித குலம் அழிந்துவிடவில்லை. தனக்கு ஏற்றவாறு சூழ்நிலைகளை மாற்றியும், சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றியும் மனிதகுலம் அழிந்துவிடாமல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.
 ‘அனுஎன்பதற்கு அடுத்தஎன்று பொருள். பவம்என்பதற்கு பிறப்புஎன்று பொருள். மீண்டும் மீண்டும் பிறக்கவேண்டும், புதிதுபுதிதாய் பெற வேண்டும் எனும் தூண்டுதலை உடையது அனுபவம்’. அது முற்றுப் பெறாதது. வாழ்வின் மீதான ருசியைத் தூண்டுவது அப்படியில்லாமல் நிறைவை ஏற்படுத்துமாயின் அது அனுபவமல்ல அனுபூதி’. அனுபவங்களை விரட்டிவிட முடியாது. அனுபவங்களைத் தைரியமாய் எதிர்கொண்டால் அவை ஏணிப்படிகளாய், நம்மைச் செதுக்கும் உளிகளாய் அமையும்.
 பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழி பள்ளியில் படித்து உயர்ந்த மதிப்பெண்களோடும், உற்சாகத்தோடும் பாலிடெக்னிக் கல்லூரியில் நுழைந்த ஒரு மாணவன் அனைத்தையும் இழந்த சோகத்துடன் எங்களிடம் அழைத்து வரப் பட்டான். பள்ளியில், பேச்சுப்போட்டிகளில் முழங்கி முதல் பரிசுகளை வென்றவன் இப்போது திக்கித் திக்கிப் பேசும் நிலை. பெற்றோரிடம் சிலவிவரங்கள் கேட்டறிந்த பின் சற்றுநேரம் வரவேற்பறையில் அமர்ந்திருக்கச் சொல்லி அனுப்பிவைத்தோம். மாணவனின் விழிகளின் பின்னே ஏதேதோ குழப்பங்களும் விசித்திரங்களும் ஓடிக் கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. இந்த ஆண்டு தான் திக்கிப் பேசுவதாக அப்பா அம்மா கூறுகிறார்கள். என்ன காரணம் தம்பி!என்று மென்மையாக விசாரித்தோம். சரியாக தெரியவில்லைஎன்று வையும், ‘தெவையும் மீண்டும் மீண்டும் திக்கிப் பதிலளிக்க சில நிமிடம் கடந்தது. முதல்முறையாக எப்போது திக்கினாய்’? ஞாபகப்படுத்திச் சொல்!என்றோம். வகுப்பில் சேர்ந்த இரண்டாம்நாளே என்னை எழுப்பி ஆங்கிலத்திலேயே கேள்விகேட்டு ஆங்கிலத்தி லேயே பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார் ஆசிரியர். நான் பயந்து போனேன். உதடு நடுங்கியது. உளறினேன். திணறித் திணறிப் பேச முடியாமல் திக்கினேன். திக்கிப் பேசுறவனா நீ?’ உட்கார் என்றார் ஆசிரியர். அதற்குப் பிறகு பாலி டெக்னிக் கட்டிடத்திற்குள் நுழைந்தவுடனேயே அதிகமாகத் திக்கிப் பேசும்படி ஆகிவிட்டது, என்று நீண்ட நேரம் எடுத்து விளக்கிக் கூறினான்.

 அந்த மாணவனுக்கு ஆங்கில மொழி மற்றும் வகுப்பறை மீதான பயம் நீங்க ராக்ரோஸ் என்ற பாச் மலர்மருந்தும், மீண்டும் மீண்டும் திக்தி திக்கிப் பேசும் நிலையை மாற்ற வொயிட் செஸ்ட் நட் என்ற மலர் மருந்தும் அளித்தோம். ஆங்கில மொழியை ஒரு சில மாதங்களில் கற்றுக்கொள்ளலாம் என்பது உட்பட சில ஆலோசனைகளும் வழங்கினோம். பெற்றோரின் அணுகுமுறையில் என்ன மாற்றம் தேவை என்பதை அவர்களிடம் எடுத்துரைத்தோம். முதல் மாதச் சிகிச்சையிலேயே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இரண்டாவது மாதச் சிகிச்சையில் திக்கிப்பேசும் நிலை முற்றிலும் மாறி இயல்பாகப் பேசத் துவங்கினான்.
 இங்கே ஓர் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டியுள்ளது. தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலைஎன்ற பழமொழியில் உண்மையின் சதவீதம் குறைவு. பெற்றோரின் நற்குணங்களும், திறன்களும் பிள்ளையிடம் அப்படியே அமைந்து விடாது. மேதைகளின் பிள்ளைகள் ஏன் மேதைகளாகவில்லை? தற்குறிகளின் பிள்ளைகள் கூட சரித்திரத்தை மாற்றி சாதனை படைத்துள்ளனரே. மேதை, பேதை, தைரியசாலி, கோழை என்று உருவாவதில் சூழ்நிலை சந்தர்ப்பங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. மேலே குறிப்பிட்ட மாணவனை கல்விச் சூழ்நிலை கடுமையாகத் தாக்கியதால் திக்கித் திக்கிப் பேசினான். வீட்டு சூழ்நிலையால் அதனை வெல்ல முடியவில்லை. வேலைக்குச் சென்று திரும்பும் பெற்றோர் பிள்ளைகளுடன் நேரம் செலவிட்டு உறவாட, உரையாட, அன்பு செலுத்த முடியாமல் போய்விட்டது. பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சியில் முக்கிய இடம் வகிப்பது மனப்பான்மை’ (ATTITUDE). அதன் உருவாக்கத்தில் இன்றைய பெற்றோரின் பங்கு குறைந்துகொண்டே வருகிறது.
 “எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும்போதே அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறான்என்கின்றன உளவியல் மருத்துவ ஆராய்ச்சிகள். சூழ்நிலைகளை எதிர்கொள்கிற, வெற்றி தோல்விகளை சகஜமாக ஏற்றுக்கொள்கிற மனவலிமையை பெற்றோரும் ஆசிரியர்களும் ஏற்படுத்தத் தவறினால் எந்த தேவதூதனும் வந்து பிள்ளைகளைக் காப்பாற்றிவிட முடியாது.
 கிராமத்தில் வாழந்த ஒரு பெண் மணமாகி நகரில் குடியிருந்தாள். கணவர் வியாபார நிமித்தமாக தினமும் காலையில் வெளியூர் சென்று இரவு திரும்புவார். ஒரே ஒரு பையன். அருகிலுள்ள நகராட்சிப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அந்தப் பெண் பலவித உடல்நலப் பிரச்சனைகளோடு சிகிச்சைக்கு வந்தாள். முகத்தில் மூக்கின் மீதும், நெற்றியிலும், கன்னங்களிலும் அடர்நிறத் திட்டுக்கள். முற்றிலும் பசியற்ற நிலை. எதுவும் சாப்பிடப்பிடிக்காமை, தண்ணீர் குடிப் பதில் கூட ஆர்வமில்லை. எது சாப்பிட்டாலும் ஜீரணமாவதில் சிரமம். கால் கை உளைச்சல். தன் நிலையை நினைத்தாலே அழுகை வருதல். இவை அப்பெண்ணின் அறிகுறிகள். ஆங்கில மருத்துவத்தில் இவை போன்ற நோய்க்குறிகளில் சில முக்கியத்துவம் பெறலாம். மேலும் கருவிகள் ரீதியிலான பரிசோதனைகளுக்கு அவளை உட்படுத்தி பின்னர் சிகிச்சை அளிக்கப்படலாம்.
 ஹோமியோபதி மருத்துவத்திலோ, மலர்மருத்துவத்திலோ இத்தகைய அறிகுறிகள் மட்டும் போது மானவை அல்ல. பாதிக்கப்பட்ட நபரை முழுமையாகப் புரிந்து கொள்ளவோ, அவரது நோய்க்குக் காரணமான தனித்துவத்தைக் கண்டறியவோ இவை ஓரளவு தான் உதவும் என்பதால் எங்களின் விசாரணை தொடர்ந்தது.
 அந்தப் பெண்ணின் மன இயல்புகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. அவளது கிராமத்தில் அப்பா அம்மா மட்டுமின்றி சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை, பாட்டி, தாத்தா, அண்ணன், தம்பி என்று ஏராளமான உறவினர் களும் ஒரே குடும்பமாய் வாழ்ந்துள்ளனர். விவசாயக் குடும்பம் - தீபாவளி, பொங்கல் திருவிழா நாட்களில் ஆளுக்கொரு பரிசாய் அவளைச் சந்தோசப்படுத்துவார்கள். கூடி விளையாட பல குழந்தைகள் இருந்தார்கள். விதவிதமாய் பலகாரங்கள் கிடைத்தன. அழுதவுடன் கண்ணீ ரைத் துடைக்க பலகரங்கள் இருந்தன. அவளது மனமோ வானவில் பரவிய வானமாய் விரிந்து வளர்ந்தது. கள்ளங்கபடம், சூதுவாது ஏதும் தெரியாது.
 வீட்டின் பின்பக்கம் கட்டியிருக்கும் மாடு கன்றுகள் ஏதேனும் இரவு நேரங்களில் கத்திக் கொண்டிருந்தால் அவள் விழித்துக் கொள்வாள். கொல்லைப்புற கதவு திறந்து கன்றின் அருகில் சென்று வாஞ்சையோடு தடவிக் கொடுத்து அமைதிப்படுத்திய பின் தான் படுக்கைக்குத் திரும்புவாள். எளிய உயிர்களைக் கூட நேசித்தாள்.


 இப்போது மணமாகி நகரில் தனிக்குடித்தனம் செய்கிறாள். சில மாதங்களுக்கு முன்பு வரை மாமனார்,மாமியார்,நாத்தனார்,கொழுந்தன் போன்றோர் அவளுடன் சேர்ந்திருந்த வரைக்கும் சந்தோஷமாக இருந்தது. கொழுந்தனுக்கு திருமணமாகி வேறு வீட்டுக்குப் போனபோது எல்லோரும் போய்விட்ட பின்புதான் அவளுக்கு பிரச்னை. கணவர் பகலில் இருப்பதில்லை. பையன் பள்ளிக் குப் போய்விடுவான். தனிக்குடித்தனமும், தனிமையும், நிராகரிப்பும் அவளைத் துயரப்படுத்தி வருகின் றன. தனிக் குடித்தனமும், தனிமையும் மட்டுமே சொர்க்கத்தை கொண்டு வரும் என்றும் நம்பும் இன்றைய உலகில் இப்படியொரு பெண்ணா? என்ற ஆச்சரியப்பட வைத்தது.
 அவளுக்கு வீட்டுவேலைகளால் பிரச்னை ஏற்படவில்லை. பிள்ளையால், உறவினர்களால் உரசல் ஏதும் ஏற்படவில்லை. கணவரால் காயப் படுத்தப்படவில்லை. பொருளாதார பிரச்னை எழுவில்லை. ஆனாலும் அவளது மகிழ்ச்சி பறிபோய்விட்டது. மனம் நிம்மதியிழந்து விட்டது. உடல் நலமும் கெட்டுவிட்டது. தன் பிரச்னை களைச் சொல்லும் போதே கண்ணீர் வடிக்கிறாள். அவள் அன்புக்காக, உறவினர்களின் அன்புக்காக ஏங்கும் வித்தியாசமான பெண்ணாக தோன்றினாள். அவளுக்கு பல்சடில்லா என்ற ஹோமியோபதி மருந்து உயர்வீரியத்தில் கொடுத்தோம். அதனுடன் சிக்கரி, வால்நட், ஹனிசக்கிள் ஆகிய மலர் மருந்துகளை ஒரே மருந்தாக இணைத்து தினமும் மூன்றுவேளை எடுத்துக் கொள்ளுமாறு கூறினோம். அவளது குணநலன்களின் சிறப்புக்களை பாராட்டினோம். நம் பண்புகளை இழந்து விடாமல் இருப்பினும், புதியபுதிய சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதையும் உணரச் செய்தோம்.
 முதல்மாத சிகிச்சை நிறைவு பெற்றுத் திரும்பி வந்தாள். நீண்ட நாள் இருந்த தலைபாரம் பூரணமாக குணமடைந்துவிட்டதாகக் கூறி மகிழ்ந்தாள். (இப்படி ஒரு குறைபாடு இருந்ததாக அவள் முதலில் வந்த போது கூறவில்லை) பசி, ஜீரணம் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள் ளதையும் மனநிலையில் நல்ல நிவாரணம் ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுக் கூறினாள். அவள் நலமடைய 3 மாத காலச் சிகிச்சை தேவைப்பட்டது.
 அந்தப் பெண்ணுக்கு நாங்கள் கூறிய ஆலோசனைகளில் உள்மன பாதிப்புக்களை ஏற்படுத்தும் தொலைக்காட்சி சீரியல்களைப் பார்க்காதீர்கள்என்பது முக்கியமான ஒன்று. விதி விலக்காக ஓரிரு சீரியல்கள் சிறப்பாக அமையலாம். ஆனால் பெரும்பாலானவை குடும்பச்சிக்கல். கணவன் கொடுமை, மாமியார் கொடுமை, உறவினர் கொடுமை போன்றவற்றை மிகைப்படுத்தி காண்பிக்கப்படுகின்றன. அல்லது முடைநாற்ற மடிக்கும் மூடத்தனங்களை, அறிவுக்கும் அனுபவத்திற்கும் புறம்பான அழுக்குகளை நம் மனங்களுக்குள் புகுத்துகின்றன. அதனால் டிவி நிகழ்ச்சி களில் பயனுள்ள ஒரு சிலவற்றைத் தவிர பிறநேரங் களில் அறிவுப்பூர்வமான வேறு விசயங்களில் ஈடுபடுமாறு கூறினோம்.
 இன்றைய வாழ்க்கைச் சூழலில் மன அடிப்படையிலான நோய்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. மன அழுத்தம் காரணமாக ஒற்றைத் தலைவலி, அஜீரணம், தூக்கமின்மை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, எக்சிமா சோரியாசிஸ் போன்ற கடுமையான தோல் நோய்கள், ஆண்மை, பெண்மைக் குறைபாடுகள், குடற்புண், நீரிழிவு, புற்றுநோய், கர்ப்பகாலச் சிக்கல்கள் போன்றவை தோன்றி வளர்ந்து மருத்துவ உலகுக்கு சவாலாய் நிற்கின்றன.
 உலகம் முழுவதும் மன அழுத்த நோய் சுமார் 35 கோடிப் பேர்களைப் பாதித்துள்ளது. மனஅழுத்தம் காரணமாக பெங்களூரில் வசிப்பவர் களில் ஒரு லட்சம் பேர்களில் 35 பேர்கள் தற் கொலை செய்து கொள்வ தாகப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மாநகரின் அசுர வளர்ச்சிற்கேற்ப மனித மனங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. வேலையின்மை அல்லது வேலைப்பளு, அதிகநேர வேலை, பணிகளில் போட்டி, நேரந்தவறிய உறக்கம், உணவு, பணி பாதுகாப்பின்மை, வருமானத்திற்கு மிஞ்சிய செலவு, கடன் மூலம் வீடு, வாகனம், ஆடம்பர வாழ்வு, தவணைக் கடன்களும் வட்டிகளும் மிரட்டும் நிலை, மிகக் குறைந்த நேரமே வீட்டில் இருக்கும் நிலை, துணையுடன், பிள்ளைகளுடன் எந்திரமயமான உறவு, விரும்பத்தகாத தனிமை போன்ற நவீன வாழ்வின் சாபக்கேடுகளாய் அமைந்துவிட்ட பல காரணிகள் மனஅழுத்தத்தை அதிகரித்து நோய்களை உற்பத்தி செய்து வாழ்க்கை நீரோட்டத்தில் இருந்து மனிதர்களை அன்னியப்படுத்தி விடுகின்றன.
 சகமனிதர்கள் மீதான அன்பும், அக்கறையும், சமூகம் சார்ந்த நற்சிந்தனைகளும் விலகிச் சுய நலமும் பொருளியியல் வேட்கையும் முன்னிற்கும் போது ஒவ்வொரு மனித மனமும் இறுகி உறைந்து போகிறது. வாழ்க்கை என்பது பொருள் வேட்டைஎன்று தவறாய் கருதி இயங்கினால் ஏமாற்றம், பயம், எரிச்சல், அவமானம், நிராகரிப்பு, பேரிழப்பு போன்ற விதவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். புகையும், மதுவும் முறைகேடான செக்ஸýம் இவற்றைத் தீர்த்துவிடாது. மாறாக மனஅழுத்தம் கடினமாகும். சிகரெட்டிலுள்ள நிகோடின் என்ற நச்சுப்பொருளுக்கு மனஅழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

 வறுமையாலும், பஞ்சங்களாலும், போர்களாலும் ஏற்படும் மனநலப் பாதிப்புகள் ஒருபுறமும், வாழ்வியல் சீர்கேடுகளால், தவறான மனப்பான்மைகளால், எதிர்நிலை அணுகுமுறை களால் தெளிவற்ற வாழ்க்கைப் பயணத்தால் ஏற்படும் மனஅழுத்தங்கள் மறுபுறமும் மனித சமூகத்தை ஆட்டி அலைக்கின்றன. தனிமனித மனங்களைத் தாக்கும் சமூக பொருளாதாரப் பின்புலங்களைச் சீரமைப்பது மாபெரும் பணி. அதற்கு காலம் பிடிக்கும்.
 ஆனால், தனிமனிதர்கள் தமது மனஅழுத்தத்தை நீண்ட காலம் அனுமதிக்கக்கூடாது. விளைவுகள் விபரீதமாகி விடும். மனஅழுத்தம் உண்டாவதற்கு சூழ்நிலை காரணம் ஒரு பகுதியும் நாம் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது பெரும்பகுதியும் நிர்ணயிக்கின்றன. மன அழுத்தம் உண்டாக்கும் காரணிகளை முற்றிலு மாய் ஒழிப்பது இயலாது. நம் மனதைத் திறமை யாகக் கையாள்வதன் மூலமாக மனஅழுத்தச் சேற்றில் மூழ்கி விடாமல் தற்காத்துக் கொள்ளமுடியும்.
அதற்கு உதவக் கூடிய சில வழிமுறைகள்
(1) அன்பும் நேசமும் பண்பும் நிறைந்த மனநிலை. (2) மகிழ்வூட்டும் சிந்திக்க தூண்டும். நல்வழி காட்டும் நூல்கள் வாசிப்பு (3) முறையான உணவு, உறக்கம், உடற்பயிற்சி, பாலுறவு (4) வாழ்க்கைத் துணையுடன், நண்பர்களுடன், குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசிப் பழகுதல். (5) பொருளாதாரத் தன்னிறைவு மட்டுமே வாழ்க்கை எனும் கருத்தை மாற்றி வாழ்வின் எல்லா சிறப்புகளையும் உணர்தல் (6) தேவையற்ற பயம், பதட்டம், கவலை, குழப்பம் ஏற்பட்டு துன்பப்படுத்துமாயின் கவனமாய் அதைக் கையாளுதல், தேவையெனில் பாச் மலர் மருத்துவம் ஹோமியோபதி போன்ற முழுமனிதனையும் நலப்படுத்தும் மருத்துவத்தை நாடுதல்.
 எத்தனையோ மனங்களைக் கரை சேர்த்த கவியரசு கண்ணதாசனின் பாடல் நமக்கு கலங்கரை விளக்கமாய் ஒளிர்கிறது.

 “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
 
வாசல்தோறும் வேதனை இருக்கும்
 
வந்த துன்பம் எதுவென்றாலும்
 
வாடிநின்றால் ஓடுவதில்லை.
 
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
 
இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்2 comments:

  1. நல்ல கருத்துகள். மிக்க நன்றி.

    ReplyDelete
  2. Sir, please write continuesly about this depression...

    ReplyDelete