Wednesday, December 11, 2013

காதல் தோல்விக்கு… ஹோமியோ மருந்துகள்! அதிசயம்! ஆனால் உண்மை!

ஆதலினால் காதல் செய்வீர்! இது கவிவாக்கு.காதல் என்ற சொல் மந்திர சக்தியும்,இனிமையும்,வசீகரமும் உடையது.பாலைவனப் பயணமாய் மானிட வாழ்க்கை தகித்தாலும் காதல் நுழைந்து விட்டால் ஈரநிலமாய்,சுகந்தக் காற்றாய்,தாகம் தீர்க்கும் அருஞ்சுனை நீராய் எல்லாம் மாறிவிடும்.காதலுக்குக் கண்கள் இல்லை-ஆம்! சாதி,மதம்,இனம்,மொழி பேதங்களைப் பூதக்கண்ணாடி அணிந்து உற்றுப் பார்க்கிற கண்கள் இல்லை! இதயத்தால் பார்ப்பது காதல்!இதயத்தால் பேசுவது காதல்!இதயத்தால் வாழ்வது காதல்! ஆம்காதலுக்குக் கண்கள் இல்லை-இனிய இதயம் உண்டு!


கண்டதும் காதல்!இது ஆபத்தானதுஎன்பது வாழ்ந்தோரின் அனுபவ எச்சரிக்கை; ஒரு தலைக்காதல்இது பரிதாபகரமானது. மனங்களைப் புரியாமல்,மனங்களைப் பரிமாறாமல் பார்த்தவுடன் காதல் பூ எப்படிப் பூக்க முடியும்?அது காதல் அல்ல நண்பர்களேவெறும் இனக்கவர்ச்சி! நிழலை நிஜமாகக் கருதி விரட்டிப் பிடிக்க முயன்று ஓய்ந்து போகும் அறியாக் குழந்தைகளாய் பல இளைஞர்கள் இனக்கவர்ச்சியைக் காதல் எனக் கருதிபொய் வாழ்க்கை வாழ்கின்றனர்.இவர்களின் கற்பனைக் காதல்கானல் நீராய்,காகிதப் பூவாய்,பொய்மான் வேட்டையாய் ஆனதை அறிந்தபின் இதயம் நொறுங்கி நடைபிணங்களாய் ஆகின்றனர்.

நிவேதா,கலைக் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவி.இசை,பாடல்,பேச்சு,நடிப்பு,படிப்பு அனைத்திலும் பிரகாசித்தாள்.நகருக்கு வெளியே அமைந்திருந்த அவளது கல்லூரிக்கு தினமும் நகரப் பேருந்தில் போய்வந்தாள்.பேருந்தில் நிரம்பி வழியும் மாணவ மாணவியரின் கலகல சத்தங்களுக்கிடையில் நிவேதா அமைதிச் சிலையாய் வீற்றிருப்பாள்.முதுகலை மூன்றாமாண்டு மாணவர் சுந்தர் எதிர்பாராத நிலையில் கடித உறை ஒன்றை அவளது கைகளில் திணித்த நாளில் அதிர்ச்சியும் பதட்டமுமாய் செய்வதறியாமல் திகைத்தாள். வீட்டில் யாருமறியா வண்ணம் கடிதத்தைப் படித்தாள்.

வாசனைச் சொற்களால் அவளை வர்ணித்து,காதலிப்பதாக அறிவித்திருந்தான் சுந்தர். நடுக்கமும் பீதியும் குழப்பமும் சூழ்ந்திருந்த போதிலும் அவளது இதயப் பிரதேசத்தில் கடிதச் சொற்கள் இனிய தூறலாய் சிலிர்ப்பை ஏற்படுத்தின. கடிதத்தை ஒளித்துப் பாதுகாத்தாள்.


நிவேதா பலவிதங்களில் திறமைசாலி.காதல் பாடத்தில் மட்டும் அவள் பேதை.அவளைப் புரியமுடியாமல் தவித்தான் சுந்தர். கடிதம் தந்த பின்னர்..அவள் மனம் புண்பட்டு விடக் கூடாது என்றெண்ணி வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த விதத்திலும் அவளை அவன் அணுகவில்லை. நாட்கள் விரைந்தன. கல்லூரி நாட்கள் எனும் கடன்வாங்கிய வசந்தத்தை அவளிடமிருந்து காலம் பறித்து ஒடியது. விண்ணில் பறந்த பறவை வீட்டுச் சுவர்களுக்குள் மட்டுமே சிறகசைத்தது.

சுந்தரின் நிலை என்ன? அவன் இன்னும் தன்னை நேசிக்கிறானா?அல்லது வேறு பெண்ணை நாடிவிட்டானா?இழப்பின் கனத்தால் மனிதன் வலி பெருகிக் கொண்டிருந்த போது இன்னொரு சோகமின்னல் தாக்கி நிலைகுலைய நேர்ந்தது.அவளது அன்புத் தந்தை இரவுப் பயணம் ஒன்றில் இருதயவலி ஏற்பட்டு இறந்து போனார்.அப்பாவின் மரணமும்,அம்மாவின் விதவைக் கோலமும்,ஆண்துணையற்ற வீட்டின் வெறுமையும் வேதனைகளை பன்மடங்காக்கின.

நிவேதாவின் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் துயரிலிருந்து மீண்டு வந்தாள்.உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் தேற்றித்தேற்றி அவள் தனது மிச்சவாழ்க்கைக்குத் தயாராகிக் கொண்டாள். நிவேதா மட்டும் நிம்மதியிழந்து கிடந்தாள். சரியாகச் சாப்பிடுவதில்லை. மலர்ந்த பூவாய் மணம் பரப்பியவள் வாடிவதங்கி உயிரற்று ஒதுங்கிக் கிடந்தாள். மகளின் நிலைகண்டு கவலைக்குள்ளான அவளது அம்மா மருத்துவ உதவி கேட்டு வந்தார். நிவேதாவைத் தனியே விசாரித்த போது அவளது இரட்டை இழப்புக்களின் சோகங்களை உணரமுடிந்தது.


வலிநீக்கி மருந்துகள் எல்லா வைத்திய முறைகளிலும் உண்டு.மனவலியை நீக்கும் மருந்து ஹோமியோபதியில் மட்டுமே உண்டு . நிவேதாவை இழப்புத் துயரின் தாக்குதலிலிருந்து மீட்க, மனரணத்தை ஆற்ற இக்னேஷியா(IGNATIA) என்ற அற்புதமான ஹோமியோபதி மருந்தை அளித்தோம்.வழக்கத்திற்கு மாறாக அன்றிரவு துயரங்களின் அழுத்தம் குறைந்து ஆழ்ந்து தூங்கிவிட்டாள் என்பதை மறுகாலை அவளது அம்மாவின் போன் தகவல் மூலம் அறிந்தோம். ஒரு மாத காலம் கழித்து ஒரு நாள் நிவேதாவைச் சாலையில் சந்தித்தபோது புத்துணர்வோடும் புன்முறுவலோடும் வணக்கம் கூறினாள்.ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரிவதாகத் தெரிவித்து விடைபெற்றாள்.


ஒவ்வொரு மனித வாழ்க்கையும் எண்ணற்ற தோல்விகளை,இழப்புகளை,துயரங்களைச் சந்தித்தே தீரும். அவை ஒவ்வொன்றும் முற்றுப்புள்ளி அல்ல.வாழ்வியல் கடமைகளையும் லட்சியங்களையும் நோக்கிய பயணம் ;எக்காரணத்தாலும் முடமாகிவிடக்கூடாது. ஹோமியோபதி மருத்துவம்மட்டுமே மனிதனின் பிரச்சனையை அவனது மனநிலை, வாழ்நிலை,சூழ்நிலை அனைத்துப் பின்னணிகளோடும் ஆய்வு செய்கிறது. துயரங்களிலிருந்து மனிதனை விடுவித்து வாழச் செய்கிறது. வாழ்க்கையின்
சம்மட்டி அடிகள் தாங்காமல் தற்கொலைக்குத் தயாராகிவிட்ட மனித மனத்தை ஆரம்மெட்(AURUM MET) எனும் ஹோமியோபதி மருந்து மாற்றியமைத்து வாழ வைக்கிறது.காதலில் தோற்று விரக்தியுற்ற,ஏமாற்றமடைந்த(LOVE DISAPPOINMENT)மனங்களை மீட்க இக்னேஷியா மட்டுமல்ல நேட்ரம்முர் பாஸ்-ஆசிட் ஹயாசியாமஸ் மற்றும் பல ஹோமியோ மருந்துகள் உதவுகின்றன.அவரவர் தோல்வியின் துயரத்தின் காரணம்,தன்மைக்கேற்ப இம்மருந்துகள் பயன்படுகின்றன. வாழ்க்கை வாழ்வதற்கே! ஹோமியோபதி மனிதகுலத்தின் வாழ்க்கையைக் காப்பதற்கே!

No comments:

Post a Comment