Saturday, December 7, 2013

எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள் :சிறப்பு நேர்காணல்

எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்-
தமிழகத்தின் மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவர்களுள் ஒருவர். ஒருங்கிணைந்த பழைய முகவை (விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளடக்கிய) மாவட்டத்தின் CPI(M) செயலராக பொறுப்பு வகித்தவர். எஸ்.ஏ. பெருமாள் அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் எழுத்தாளர். பத்திரிக்கையாளர் மொழிபெயர்ப்பாளர். இலக்கியத் திறனாய்வாளர். அரசியல் தத்துவ வகுப்பாசிரியர். சிறந்த பேச்சாளர். பாப்லோநெரூடா, கலீல், ஜிப்ரான், ரசூல் கம்சதேவ் மற்றும் பல தலைசிறந்த கவிஞர்களின் 100க்கும் மேலான கவிதைகளைத் தமிழில் தந்துள்ளார். ஸ்ரீஸ்ரீ, தகழி, ராஜாராவ் ஆகியோரின் சிறுகதைகளில் பலவற்றையும் தமிழில் தந்துள்ளார். 15க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். கடந்த காலத்தில் இயக்கப் பணிகளுக்காக தென் மாவட்டங்களின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் அலைந்து திரிந்து வாழ்ந்தவர். இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம் குறித்து அதிக ஈடுபாடு கொண்டவர். இவரது வசீகரமான சொல், செயல், வாழ்க்கை, இயக்கப்பணிகளால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், அறிவு ஜீவிகள், மத்தியதரவர்க்கத்தினர், எளிய மக்கள் ஏராளம். கட்சி அரசியல் கடந்த சமூகத்தின் மீதான இவரது அக்கறை காரணமாக மருத்துவம், உணவுப்பண்பாடு, தனிநபர் ஆளுமை மேம்பாடு, கலை இலக்கியம், சினிமா, நாட்டுபுறவியல் போன்ற பல துறைகளில் பார்வையை விரிவுபடுத்தியவர். மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் அவரை மாற்று மருத்துவம்காலாண்டு இதழ் சார்பில் பேட்டி கண்டபோது மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்று பேட்டியில் கலந்து கொண்டார்
. இனி அவருடன்...

இன்றைக்கு கடைப்பிடிக்கப்படும் மருத்துவக் கொள்கைகள், நடைமுறைகள் பற்றி தங்கள் கட்சியின் நிலைபாடு என்ன?
மக்கள் நலன் பேணும் மருத்துவக் கொள்கைகளோ நடைமுறைகளோ இன்று மத்திய அரசு கடைப்பிடிக்கவில்லை. கிராமப்புற சுகாதாரம், அடிப்படைசுகாதாரம், அத்தியாவசியமான, தரமான, மலிவான மருந்துகள் போன்றவை புறக்கணிக்கப் பட்டுள்ளன. பகாசுர மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கத்தில் மருத்துவத் துறை மூழ்கிக் கிடக்கிறது. மக்களின் ஆரோக்கியத்தோடும் உயிரோடும் தொடர்புள்ள மருந்துகளின் உற்பத்தி, விற்பனை போன்றவை வெறிகொண்ட தனியார் கம்பெனிகள் வசம் நீடிப்பது ஆபத்து.ஆங்கில மருந்தான பாராசிடமாலை இருநூறுக்கும் மேற்பட்ட வணிகப் பெயர்களில் விற்கிறார்கள். மருந்தின் உற்பத்திச் செலவை விட 50 மடங்கு, 100 மடங்கு அதிகமாக விலை வைக்கிறார்கள்.
மேலும் ஆங்கில மருத்துவத்தில் வெளிப்படைத் தன்மையில்லை. பல்வேறு மருத்துவ விஷயங்கள் கம்பெனிகளுக்கும் டாக்டர்களுக்கும் இடையிலான ரகசியங்களாக உள்ளன. எந்த முறை சார்ந்த மருந்துகளாக இருந்தாலும் சாமானிய மக்களுக்கு எளிதாகவும், தரமாகவும், விரைந்து நோய் தீர்க்கக் கூடிய வகையிலும் நம்பகமாகவும் அமைய வேண்டும்.
ஒட்டுமொத்த மருந்து உற்பத்தியையும் அரசுத்துறை பொதுத்துறை மேற்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?
ஆம். அது தான் சரியானது. ஆனால் என்ன நடக்கிறது? மத்தியஅமைச்சர் அவர்கள் உலகப் புகழ் பெற்ற தடுப்பு மருந்து ஆலையைக் கூடதனியாருக்குத் தாரை வார்க்கிறார். மேனகா காந்தி மந்திரி பொறுப்பிலிருந்த போதே, “மருந்துக் கம்பெனிகளை நாட்டுடைமையாக்க முடியாதுஎன்று கொக்கரித்தார். இந்தியாவில் தடுப்பு மருந்து உற்பத்தி மையங்களை பரவலாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட போது உள்ளதே போதும்என்றார். அவர் கொண்டுவந்த பிராணிகள் வதைச் சட்டம்பற்றிய பின்னணி குறித்து பல்வேறு செய்திகளை பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தின. வெறி நாய்க்கடி, குரங்குக்கடிக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் பிரபல கம்பெனியின் ரகசிய பேரம் காரணமாகவே இத்தகைய சட்டத்தை கடுமையாக்கினார் என்ற சூட்சம நாடகம் தெரிய வந்தது. அந்தக் கம்பெனி பல நாடுகளை இதே போன்ற சட்டத்தை கொண்டு வருமாறு வற்புறுத்தியது.
சோஷலிச நாடுகளில் பிராணிவதைத் தடைச்சட்டம் கிடையாதா?
சோஷலிச நாடுகளில் குறிப்பாக சீனாவில் நாய், பூனை போன்ற பிராணிகளை வீடுகளில் வளர்க்க முடியாது. தடை செய்யப்பட்டுள்ளது. பிராணி வதைத் தடைச் சட்டமல்ல - பிராணிகளை வளர்ப்பதற்கே தடை உள்ளது. அவற்றை மியூசியங்களில் போய் பார்க்கலாம்.
நமது பாரம்பரிய மூலிகைகள், அவை குறித்த ஆவணங்கள் அழிந்து வருகின்றனவே?
50 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 50,000 மூலிகைகள் உள்ளதாகக் கூறப்பட்டது.25 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 24,000 மூலிகைகள் உள்ளதாகக் கூறப்பட்டது. 10 ஆண்டுக்கு முன் 2500 மூலிகைகள் இருப்பதாகக் கூறப்பட்டது. இன்று இன்னும் குறைந்திருக்கக் கூடும். காடுகள் அழிவதும் மூலிகைகள் அழிவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டன. தன் விளைவாக சித்த, ஆயுர்வேத மருந்துகளும், இயற்கை மருந்துகளும் அழிந்து வருகின்றன. இப்போது அரசு, மூலிகைப் பண்ணைகள் வளர்க்க மானியம் 40 சதம் வழங்கி வருகிறது. அரசு 126 மூலிகைகளைக் குறிப்பிடுகிறது. இதில் சில பல கிராமங்கள் மூலிகைச் சாகுபடிகளில் ஆர்வம் காட்டி மூலிகைப் பண்ணைகள் ஏற்படுத்துகின்றன. இம்மூலிகைகள் பத்து பனிரெண்டு கோடி ரூபாய்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மூலிகை வளர்ப்பு ஊக்குவிப்புகளும் மூலிகைகளைப் பாதுகாப்பதற்காக அல்ல விற்பனைக்காக, லாபத்துக்காக ஏற்றுமதித் தேவைக்காக மட்டுமே நடைபெறுகின்றன.

சீனாவில் நான் சில நாட்கள் பயணம் செய்த போது தினமும் பல இடங்களில் பல வடிவங்களில் ஜின்செங் பயன்படுவதைப் பார்த்தேன். அப்படி சூழல் இங்கு இல்லை.
மூலிகைகளைப் பாதுகாக்க வேறு முயற்சிகள், வழிமுறைகள் இல்லையா?
ஆதிசங்கரர் போன்றோர் வகுத்த அழிவுப் பாதைகளால், சனாதன, சாஸ்திர, மூடநம்பிக்கைகளால், மூலிகை அறிவியலின் மேன்மைகள் அறியாமல் மூலிகைகளும், மூலிகை மருத்துவ அறிவுகளும் தொடர்ந்து அழிந்து வருகின்றன. கடவுளை நம்பு! பூசாரிகளை நம்பு! மருந்தை நம்பாதே!என்பது போன்ற மட போதனைகளால் மத குருமார்கள் பிழைப்பு நடத்தி வந்தார்கள்.
இதற்கு மாறாக சமணர்கள் வில்வம்’, பௌத்தர்கள் துளசிபோன்றவற்றை தமது அடையாளங்களாக பயன்படுத்தினர். சமண, பொளத்த துறவிகள் மருத்துவர்களாகவும் வாழ்ந்தனர்.தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை தேடி திரிந்த போது ஒரு ஏழைக் குடியானவன் வீட்டில் அவனது மகன் பரணிலிருந்து எடுத்துக் கொடுத்த சுவடிகளைப் பார்த்து, நான் தேடிய பத்துப்பாட்டு இதுதான் என்று மகிழ்ந்தார்.
அவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பும் முன் குடியானவன் வந்து விசாரிக்கிறான்; மகனைக் கோபிக்கிறார். நாளைக்கு பதினெட்டாம் பெருக்குக்கு ஆற்றிலே விடுவதற்காக இதனை வைத்திருக்கிறேன். அய்யரிடம் ஏன் கொடுத்தாய்?” என்று அவற்றை பறித்துக் கொள்கிறான்.
உ.வே.சாமிநாதய்யர் மிகவும் மனவேதனையுடன் சுவடிகளைக் கொடுத்து விட்டு அந்த ஊரிலேயே இரவு எங்கோ தங்கிவிட்டு மறுநாள் ஆற்றின் ஓரிடத்தில் காத்திருந்து குடியானவன் பத்துப்பாட்டு சுவடிகளை ஆற்றிலே விட்டபின் அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து அள்ளி வந்து பாதுகாத்தார். இதை ஒரு கதை போலச் சொல்வார்கள்.
மேலும் வைத்தியம் என்பது பிழைக்கும் வழியாக இருந்ததால் மூலிகைகளின் அற்புதங்களை, மருத்துவ குணங்களை ரகசியங்களாய் அமுக்கி வைத்திருந்தார்கள். வாழ்வின் அந்திம நேரத்தில் சொல்லலாம் என்று எண்ணி சொந்தப் பிள்ளைகளிடம் கூட மருத்துவ ரகசியங்களைச் சொல்லாமல் மறைந்தவர்கள் உண்டு.
நீடித்த நலவாழ்வுக்கு பல கற்ப மூலிகைகள் உதவும் என்றும், பாம்புக் கடிக்கு, தேள்கடிக்கு, சிறியா நங்கை, பெரியாநங்கை போன்றவை பயன்படுவதாகவும் நட்சத்திர நங்கை என்றொரு மூலிகை செத்தவனையும் உடன் உயிர் பிழைக்க பயன்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது போன்ற ஏராளமான நல்ல மருத்துவ செய்திகள் பொதுமைப்படுத்தாமல் சிலரின் தனிச் சொத்துகளாய் உள்ளன.
அரசுகள் இவற்றை மீட்டெடுக்க முயற்சிகள் செய்தால் ...செய்யமாட்டார்கள். பிரிட்டிஷ் பார்மோகோபியா தவிர எதையும் இங்கு ஏற்க மாட்டார்கள். ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளின் அலோபதிதான் சிறந்தது என்று நம்புகிறார்கள். மொழி கலாச்சாரம் போன்றவற்றில் தொன்மைக்கால சிறப்புக்களில் கவனம் செலுத்தினாலும் மருத்துவத்துறையில் அப்படி நிகழவில்லை.
மேற்குவங்கம், கேரளம், திரிபுரா போன்ற இடது முன்னணி அரசுகள் மாற்று மருத்துவங்களைப் பாதுகாக்க, வளர்க்க மேற்கொண்டு வரும் முயற்சிகள் என்ன?
இந்த மாநிலங்களில் மட்டுமே பிற மாநிலங்களை விட மாற்றுமுறை மருத்துவங்களின் பயன்பாடு சிறப்பாக உள்ளன. மேற்கு வங்கத்தில் ஆங்கில மருத்துவத்திற்கு அடுத்தபடியாக ஹோமியோபதிக்கும் ஓரளவு யுனானிக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. பல்வேறு மாநிலங்கள் போல அங்கும் நிதிப் பற்றாக்குறைகள் உண்டு.
கேரளாவில் ஆங்கில மருத்துவமும் ஆயுர்வேதமும் சமமாக பாவிக்கப்படுகிறது. ஈ.எம்.எஸ். முதல்வராய் இருந்த போதே அரசு மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தி ஸ்திரப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
திரிபுராவில் மூலிகைகள் வளர்ப்புக்கு அரசு ஊக்கமளிக்கின்றன. பொதுவாக பெரும்பகுதி மக்களுக்கு இலவசமாக மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதும், நியாயமான கட்டணத்தில் தரமான சிகிச்சைகள் அமையவேண்டும் என்பதில் இந்த மாநிலங்கள் அக்கறை செலுத்துகின்றன. இதனால் மாற்று மருத்துவங்களுக்கும் ஆதரவான சூழ்நிலை நிலவுகின்றது.
நமது உணவுப்பண்பாடு முற்றிலும் மாறி வருகிறதே?
பசுமைபுரட்சி என்ற பெயரால் நிலமும், உணவு தானிய உற்பத்தியும் பெருமளவு இயற்கை தன்மை சீர்குலைவுக்கு ஆட்பட்டது.
ஆனால் அதற்கும் முன்பாக நமது தேசத்தின் பாரம்பரிய நவதானிய உணவுகளை நாம் இழக்கத் துவங்கிவிட்டோம். வடக்கே கோதுமையும் தெற்கே அரிசியும் என்கிற ஒற்றை உணவுக் கலாச்சாரம் காலூன்றிவிட்டது. இதனால் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் பெருகிவிட்டன. இன்றைக்கு கிராமப்புறங்களில் கூட நவதானியங்கள் கிடைப்பதில்லை. மிகவும் ஏழ்மைப்பட்ட நிலையில் சில இடங்களில் மக்காச்சோளம், அங்கொன்றும் இங்கொன்றுமாய் உணவுக்குப் பயன்படுத்தினார்கள். அதிலும் தானியத்தை வீரியப்படுத்து வதாகக் கூறி ரசாயன உரங்களும் பூச்சி மருந்துகளும் பயன்படுத்தி கெடுக்கப்பட்டுள்ளது.
175 விதமான பெட்ரோலிய பொருட்களைப் பட்டியலிடுவார்கள் அவற்றில் ஒன்றான யூரியாவை நாட்டிலுள்ள எல்லா விளை நிலங்களிலும் தூவி எல்லாவிளை பொருட்களும் இயற்கை சத்திழந்து போய்விட்டன. இதனால் ஆண்மை, பெண்மை, குறைபாடுகள் முதல் அனைத்து நோய்களும் உருவாகின்றன. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இயற்கை விவசாயம், இயற்கை உணவு நோக்கி மாறி வரும் சூழ்நிலை இப்போது ஏற்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.
பன்னாட்டு நிதி உதவிகள் எய்ட்ஸ் போன்ற நோய் குறித்த பிரச்சாரத்திற்கு அளிக்கப்படுவது பற்றி...
அமெரிக்காவின் போர்டு நிறுவனம் பெரியது அமெரிக்காவின் முதல் பெரும் பணக்காரனாக இருந்த ஹென்றி போர்டுக்கு கைகால்கள் செயலிழந்து, தலையும் அசைக்க முடியாமல் இயங்கா நோய் ஏற்பட்ட போது, தலைசிறந்த மருத்துவர்களாலும் சரிசெய்ய முடியவில்லை. இங்கிருந்து சென்ற ஒரு புத்த துறவி (மருத்துவரும்கூட) அவரைச் சந்தித்து அவரது பிரச்சனையின் முழு விவரங்களையும் ஆய்வு செய்து ஒரு ஆலோசனை வழங்கினார். போர்டு மனதில், ஆழ் மனதில் ஒரு வித குற்ற உணர்வு ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு அவரைப் போன்ற உலகிலுள்ள நோயாளிகளுக்கு நிறைய தானதர்மங்கள் மூலம் பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
அதற்காக அறக்கட்டளை மூலம் நன்கொடைகள் வாரி வழங்கப்பட்டன. அதே போல வேறு பல நாடுகளின் நிறுவனங்களிலிருந்தும் நிதி உதவிகள் வருகின்றன. ஆனால் எய்ட்ஸைப் பொறுத்தளவில் அரசாங்க இலாக்காக்களிடம் தான் நிதியை ஒப்படைக்க முடியும். அங்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம், பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சைகள் அனைத்து மட்டங்களிலும் பிற துறை கள் போலவே ஊழல் மலிந்து கிடக்கின்றன. இந்திய மக்களின் பிரதான உடல் நலகுறைபாடுகள், சுகாதாரத் தேவைகளை இந்திய அரசே அலட்சியப் படுத்தும் போது அன்னிய நிறுவனங்களுக்கு அதிலென்ன அக்கறை?
அறிவியல் என்ற பெயரால் மாற்று மருத்துவங்கள் புறக்கணிக்கப் படுகின்றனவே?
அது தவறு அறிவியல் உள்ளடக்கங்கள் இல்லாமல் எந்த மருந்தும், மருத்து வமும், நோய்களைத் தீர்க்க முடியாது. நோயை அறிவதற்கு வழிமுறைகளும், தீர்ப்பதற்கு மருந்துகளும் சிகிச்சை முறைகளும் உள்ள எந்த மருத்துவ முறையையும் விஞ்ஞானத்திற்கு புறம்பானது என்று புறக்கணிக்க முடியாது. ஆங்கில மருத்துவம் தடித்தனமானது. எந்திரத்தனமானது. ஹோமியோபதி போன்ற இயற்கை மருந்துகள் மனித உடலின் அடிப்படை அணுக்களைச் சென்றடைந்து ஆற்றல் தரக் கூடியது.
கேரளாவில் கிழிஞ்சான் கோடு என்ற கிராமத்தில் 97 வயது ஆயுர்வேத வைத்தியர் ஒருவரைச் சந்தித்தோம் என்னுடன் வந்த ஒருவர் அவரிடம், “கண் அழுத்த நோய்க்கு எதிலும் மருந்தில்லாமல் போய்விட்டதே என்றார். அப்போது அந்த வைத்தியர், “நேரம் கிடைக்கும் போதெல்லாம் இரண்டு கைகளையும் தட்டுங்கள். அதன் மூலம் புத்துணர்ச்சியும், நுண்நரம்புகளுக்கு இயங்கு சக்தியும் கிடைக்கும். உங்களது கண் பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கும்என்றார். மனிதர்களும் குரங்குகளும் மட்டும்தான் கைகளைத் தட்டுகின்றனர். மனிதன் உற்சாக மிகுதியில் கைகள் தட்டுவான். உற்சாகம் பிறக்கவும் சோர்வு நீங்கவும் கை களைத் தட்டுவது பலன் தரும் என்கிறார்கள். இதிலும் வைத்தியம் உள்ளது.
போலி மருத்துவர்கள் பிரச்சனை அடிக்கடி எழுகிறதே. தங்கள் நிலைபாடு என்ன?
குறைந்த பட்சப் படிப்பறிவு இல்லாமல், துறை சார்ந்த விஷய ஞானம் இல்லாமல், மருந்து சிகிச்சை பற்றிய அனுபவம் ஏதுமில்லாமல் எவரும் வைத்தியம் பார்ப்பதில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் மருத்துவர் கண்ணன் உட்பட அனுபவ மிக்க சில ஹோமியோபதி மருத்துவர்களைக் கைது செய்த போது தீக்கதிரில் அதனைக் கண்டித்து செய்தி வெளியிட்டோம்.

கல்லூரிகளில் அரசியல் விஞ்ஞானம் படித்தவர்கள் தான் கட்சி நடத்த வேண்டும் ஆட்சி நடத்த வேண்டும் என்பது எப்படி பொருத்த மற்றவாதமோ அது போன்றதே எந்த மருத்துவ முறையாயிருந்தாலும் கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டுமே வைத்தியம் செய்ய வேண்டும் என்பதும் சித்தர்களே மீண்டும் பிறப்பெடுத்து வந்தாலும் வைத்தியம் பார்க்க முடியாது என்பது சரியல்ல.
மக்களின் அபிமானம் பெற்றதால்தான் மக்களின் அங்கீகாரமும் ஆதரவும் இருப்பதால்தான் பலரும் அனுபவ வைத்தியம் செய்கிறார்கள்.போலி மருந்துகள் தான் இருக்கின்றனவே தவிர அதிலும் குறிப்பாக ஆங்கில மருத்துவத்தில்தான் அதிகமுள்ளன. போலி மருத்துவர்கள் என்று யாரும் கிடையாது. அனுபவத்தில் நோய் தீர்க்கும் சிகிச்சை முறைகளைக் கற்றுத் தேர்ந்து சாதனைபுரிந்த எண்ணற்ற மருத்துவமணிகளை சமூகத்திற்கு பயனுள்ள சக்தியாகக் கருதி அவர்களுக்கு அரசு தகுதி கண்ட றிந்து, தகுதிகளை வளர்க்க உதவிகள் செய்து அங்கீகரிக்க வேண்டும். மாறாக ஏழை எளிய மக்களுக்கும், எந்த மருத்துவ வசதியும் இல்லாத கிராமப் புற மக்களுக்கும் வைத்தியம் செய்யக் கூடியவர்களை தொழில் போட்டி காரணமாக குற்றம் சாட்டுவதும், கைது செய்து வழக்குகள் பதிவு செய்வதும் நிறுத்தப்பட வேண்டும்.
இந்தியா போன்ற வறுமைக் கோட்டிற்கும் கீழே வதை படும் மக்கள் கூட்டம் நிறைந்த நாட்டில் ஆங்கில மருத்துவ வணிக வலை களுக்குள் நிர்ப்பந்தமாக மக்களை விழச் செய்ய நினைப்பது அராஜகம்.
இந்தியா சுதந்திரம் பெற்ற காலம் முதல் வெகுஜன நலன்கள் அடிப்படையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இயங்கி வரும் கம்யூனிஸ்ட்டுகள் மாற்று மருத்துவங்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்?
மனித குலம் இதுவரைக் கண்டறிந்துள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் கொண்டு உள்ளத்தை வளப்படுத்திக் கொள்ளாமல் கம்யூனிஸ்டாக முடியாதுஎன்று வழிகாட்டியவர் லெனின். மனித குலத்தின் பூர்வீக காலம் முதல் இன்று வரை கண்டறிந்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து வகை மருத்துவங்களையும் நாங்கள் வரவேற்கிறோம்.
சீனாவில் மாசேதுங் தாயக மருத்துவத்தையும் ஆங்கில மருத்துவத்தையும் இணைத்து இரண்டு கால்களால் நடப்போம் என்று மருத்துவத் துறைக்கு புதிய வழியை உருவாக்கினார். காலச் சுழற்சியில் சீன தொன்மை மருத்துவங்களின் சிறப்பான பயன்பாடுகளால் அவை அங்கே முதலிடம் பெற்றுவிட்டது.
எந்த வித நோய் நிலைகளுக்கு எந்த வித மருத்துவம் எளிதில் தீர்வு காணுகிறதோ அதை ஏற்றாக வேண்டும். தவிர்க்க முடியாத சில அறுவைச் சிகிச்சைகளிலும், விபத்துக் காலங்களில் ஆங்கில மருத்துவத்தை தவிர்க்க முடியாது. உலகம் முழுதுமே கம்யூனிஸ்ட்டுகளின் நிலைபாடு இப்படித்தான் இருக்கிறது; இருக்க வேண்டும்.மாற்று முறை மருத்துவங்கள் விரிவாக மக்கள் மத்தியில் சென்றடைய என்ன செய்யலாம்?நான் அறிந்தவரை நம் நாட்டின் அற்புத மருத்துவங்களான ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் வெகுஜன மக்களை நெருங்கி வரவில்லை.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களைப் போல சிலரும், தங்களது சிகிச்சை மருந்து தவிர மற்றவர்கள் தருவது ஏமாற்று வேலை என்பது போல சிலரும், கால மாற்றம், நவீன அறிவியல் வளர்ச்சிக்கு எதிராக பிற்போக்கான நடைமுறைகளை வைத்தியத்துடன் கடைப்பிடிக்கும் சிலரும், சோதிடம், ஜாதகம், வாஸ்து, மற்றும் ஆன்மீக விஷயங்களை மருத்துவ அறிவியலுக்குள் திணித்து குழப்பும் சிலரும் மாற்று மருத்துவங்களின் களைகள்.

மாற்றுமருத்துவங்களை குறிப்பாக சித்தா, ஹோமியோ, அகுபங்சர், மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தி எந்தப் பித்தலாட்டத்திற்கும் இடமில்லாமல் எளிமையாகவும் வெளிப்படைத் தன்மையோடும் மக்களின் நோய்களைத் தீர்ப்பவர்கள் ஏராளம் உள்ளனர். ஒருங்கிணைந்த முயற்சிகள், அமைப்பு சார்ந்த முயற்சிகள் மூலமாக மக்களை நெருங்கிச் செல்ல வேண்டும். மக்கள் தம் உயிருக்கு, ஆரோக்கியத்திற்கு,நீடித்த வாழ்வுக்கு எந்த மருத்துவங்கள் சிரமப்படுத்தாமல் எதிர் விளைவுகள் இல்லாமல் உதவும் என்பதை அறியத்துவங்கினால். மாற்று மருத்துவங்களுக்கு மறுமலர்ச்சி ஏற்படும்.

No comments:

Post a Comment